6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2024

அழகர் கிள்ளை விடு தூதில் இறைவனின் பத்து அங்கங்கள் - முனைவர் பீ. பெரியசாமி

 

அழகர் கிள்ளை விடு தூதில் இறைவனின் பத்து அங்கங்கள்

முனைவர் பீ. பெரியசாமி,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி,

ஆரணி, திருவண்ணாமலை- 632317

முன்னுரை

பெருங்காப்பியம் பாடும் மரபு அருகிய காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் பள்ளு, கலம்பகம், உலா, பரணி, தூது, கோவை போன்ற சிற்றிலக்கியங்களைப் பாடத் தொடங்கினர் புலவர் பெருமக்கள். பல்வேறு அகப்புற தூது பற்றிய பாடல்களை இயற்றினர். அவற்றுள் அழகர் கிள்ளை விடு தூதில் இறைவனின் பத்து அங்கங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

அழகர் கிள்ளை விடு தூது

திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்ட அழகரிடம் உள்ளத்தைப் பறிகொடுத்த பெண்ணொருத்தி தன் காதலை அவரிடம் தெரிவித்து அவர் தன் காதலை ஏற்றதன் அடையாளமாக மாலை ஓன்றை வாங்கி வருமாறு. கிளியைத் தூது விடுப்பதாகப் பாடப் பெற்ற நூல் அழகர் கிள்ளை வீடு தூது! இது 239 கண்ணிகளைக் கொண்டதாகும்.

பத்து அங்கங்கள்

அழகர் மலை

எதிரே நின்று புகழ்ந்து துதிக்கும் பிரமனும் சிவ பெருமானும் ஆகிய இருவரும் அருள் வேண்டி என்றும் நீங்காதிருக்க கேசவாத்திரி என்னும் அழகிய பெயரும் கேசவாத்திரி அழகர் மலையின் பெயர்களுள் ஒன்று கோத்திரம் கூட்டம். வலிய உடம்பை அடைகின்ற கூட்டமான பிறவித் தளைகளை சிலேடை தன் மலையில் சேர்கின்ற வலிய முன் கால்களை உடைய விலங்குகளை அழித்தலால் சிங்காத்திரி என்னும் சிறந்த பெயரும். காத்திரம் உடல் வலிய முன்கால் விலங்கு தளை மிருகம் சிங்காத்திரி அழகர் மலையின் பெயர்களுள் ஒன்று எங்கள் தலைவனான கண்ணபிரான் மேய்த்த பசுக் கூட்டங்களைப் போல மலைகள் எல்லாப்புறமும் சூழ்ந்திருக்க அப்பசுக் கூட்டங்களின் இடையே நிற்கும் அச்சம் தரும் பெரிய காளைகளைப் போல. நிரை பசுக் கூட்டம் வெற்பு மலை மால் அச்சம் மயக்கம் விடை காளை. யாவரும் பார்க்கக் காட்சி அளித்தலால் இடபகிரி என்னும் பெயர் பெற்ற இன்னிசைக் கருவிகள் ஒலிக்கும் சோலை மலையினான் இன்னியம் இனிய இசைக்கருவிகள் இடபகிரி சோலைமலை அழகர் மலையின் பெயர்கள் இடபம் ரிஷபம் காளை என்று அழகர் கிள்ளைவிடு துது குறிப்பிடுகிறது.

சிலம்பாறு

என்றும் வற்றாது பொன்மலையாகிய மேருமலையில் இருந்து வழிந்தோடும் சாம்பூந்தம் என்னும் நதியைப் போல அழகர் மலையின் அடிப்பகுதி திருமாலின் திருவடி யாகத் தோன்ற அத்திருவடிகளில் அணியப் பெறும் சிலம் பின் மாணிக்கப் பரல்களாக அம்மலையில் விளையும் மாணிக்கங்கள் திகழ்கின்றன. மாணிக்கச் சிலம்பாகிய அழகர் மலையின் அடியில் பெருகி வரும் நதியாகி. கல் மலைகளுக்குள் இடப மலையாகிய அழகர்மலை இந்திரனைப் போலவும் அம்மலையில் உள்ள வளமிக்க சுனைகள் அவ்விந்திரன் மேனியிலுள்ள ஆயிரம் விழிகளைப் போலவும் காட்சி அளிக்க அனைவர்க்கும் முந்தியவனான திருமாலின் தோளிலும் அழகிய மார்பிலும் கிடக்கின்ற முத்துமாலையைப் போலத் தோன்றும் சிலம்பாற்றை உடையவன் என இறைவனை அழகர் கிள்ளை விடு தூது குறிப்பிடுகிறது.

தென்பாண்டி நாடு

ஒழுக்கத்தில் சிறந்தவையும் செந்தமிழ் வழங்குபவையும் ஆன தென்பாண்டி நாடு குட்டநாடு குட நாடு கற்காநாடு வேணாடு பூழிநாடு பன்றி நாடு அருவா நாடு அருவா வடதலை நாடு சீத்நாடு மலாடு புனல்நாடு என்னும் பன்னிரு நாடுகளும் பூமித்தாய்க்கு இரு கைகள் இரு காதுகள் இரு முலைகள் முகம் இரு கால்கள் பின்னல் இரு கண்கள் ஆகிய பன்னிரு அங்கங்களாகும். மேற்கூறப்பட்ட இப்பன்னிரு அங்கங்களுள் பொன் மலையாகிய இமய மலையின் மேல் தமது புகழைப் பதித்த புனல் நாடாகிய சோழநாடும் தென்னாடாகிய பாண்டிய நாடும் இரு கண்களாகும். பூமித்தாயின் கண்களாக விளங்கும் அவ்விரு நாடுகளுள் அருள் நிறைந்த வலக்கண் என மதிக்கப் பெறும் நலமிக்க தென்பாண்டி நாட்டினை உடையவன்.

திருமாலிருஞ்சோலை

தங்க மயமாகச் சந்திரனின் வடிவிலமைந்த சோமச்சந்திர விமானத்தைக் காண்போர் இது இந்திரனின் விமானமே என்றும். மந்திரங்களைச் சபித்துக் கோயிலின் விருது ஆகிய வெற்றிக்கொடி ஏற்றப்படுகிற கொடி மரத்தைக் காண்போர் காமவல்லிக் கொடிபடர்ந்த கற்பக மரமே இது என்றும். உயர்ந்தவர்க்கு ஒரே வாழ்வாக இருக்கும் அழகனை இவனே உபேந்திரன் என்றும் அழகரின் குரு என்ப போற்றப்படும் திருமலையாண்டானை இவனே தேவ குருவாகிய பிரகஸ்பதி என்றும். இக்கோயிலைச் சேர்ந்த புகழ்பெற்ற கோயில் கைங்கரியங்களைச் செய்கிற திருமலைநம்பி முதலியவர்களை விண்ணவர் அரசன் இந்திரனைத் தலைவனாகக் கொண்ட தேவர் குழாம் என்றும். எண்ணிடில் மனத்தில் நிறையும் வளம் கொண்ட அமராவதி நகரைப் போன்ற பெருஞ்சிறப்புக் கொண்ட திருமாலிருஞ்சோலை என்ற தெய்விகமான ஊரினை உடையவன்.

துளசி மாலை

மார்பில் அணிந்துள்ள அடியவர்களால் நினைத்து துதிக்கப்பெறுகின்ற பல பொன் வைர அணிகலன்களுடன் கலந்து வானவில்லைப் போல் காட்சி அளிக்கிற பச்சை வண்ணத்தையே மிகுதியாகக் காட்டுகிற துளசி மாலையை அணிந்தவன் என இறைவனைக் கூறுகிறது.

அத்வைதம் எனும் யானை

மக்கள் மனங்களின் உள்நின்று உயிரை உருக்கும் வைணவம் என்னும் உயர்ந்த மதமே தன் மதநீராகப் பெருகவும் திருமகளாகிய பூங்கொம்பே தன் துதிக்கையாகச் சேரவும். நெருங்கிய தன் பகுதிகள் ஒத்திருக்கின்ற வைகானதம் பாஞ்சராத்திரம் ஆகிய இரு வைணவ ஆகமங்களும் மணிகளின் ஒசையாக ஒலிக்கவும். மோகம் அழியும் வரை உயிர்களை விடாது கட்டி வைக்கின்ற வடகலை தென்கலை என்னும் இரு வைணவ மதப் பிரிவுகளை யானை கட்டும் கயிறாகவும் கொண்டு விளங்கும். என்றும் நீங்காத பேரின்ப மயமான இறைவனின் மலர்ப்பாதங்களைக் கண்டுணர்ந்த அத்வைதம் என்ற மதயானையை உடையவன் இறைவன்.

வேதப்புரவி

அழகான சேணத்தை அணிந்து போர்க்களத்தில் ஆற்றலுடன் எழுந்து வாயில் நுரை கக்கி தன் குதிரை வடிவத்தின் ஆற்றலை அனைவரும் அறியக் காட்டி. பகைவர்க்கு வானுலகு செல்ல வழிகாட்டி எங்கும் தூசியைப் பரப்பி ஆற்றல் மிகுந்த பல கலைமான்களையும் தன் விரைவால் வென்று ஓடி தன் கால்கள் வாய் வால் ஆகிய ஆறு உறுப்புக்களையும் போருக்கான தன் அங்கங்களாகக் கொண்டு முன்னணிப் படையாகப் போற்றப்படும் வேதக்குதிரையை உடையவன்.

கருடக் கொடி

அமுதம் கடைந்தபோது திருப்பாற்கடலில் நுழைந்த மந்தர மலை வாசுகிப் பாம்பால் சுழற்றப்பட்டுப் பம்பரம் போலவும் பூமி ஆதிசேடன் தலைமீதிருந்து சக்கரம் போலவும் தம்நிலையில் சுழன்று கொண்டிருந்த போது. ஏற்பட்ட சுழற்சி வேகம் குறைந்த போது அவ்வேகக் குறைவால் அவற்றைப் பிடித்திருந்த வாசுகி ஆதிசேடன் ஆகிய மிகப்பெரிய பாம்புகள் விழ அவற்றைப் பற்றிக் கொள்ளும் பெருவலிமை உடையவனான கருடனைத் தன் கொடியில் கொண்டவன்.

மும்முரசு

சூழந்த தன் அழகர் மலையில் சிங்கமும் யானையும் மேகமும் நின்று முழங்கும் ஓசையைத் தன் கோயிலின் முற்றத்தில் அதிர்கின்ற வீரமுரசு நியாய முரசு கொடை முரசு என்னும் மூன்று முரசுகளாக உடையவன்.

“குன்றில் அரியும் கரியும் கொண்மூவும் நின்று அதிர

முன்றில் அதிர் மும்முரசினான் – என்றும்” (அழகர் கிள்ளை விடு தூது, பா.122)

ஆணை

என்றும் அவன் அசையாமல் ஒரணுவும் அசையாது என்று உலகம் கூறும் பழமொழியின்படி தவத்தால் நிலைபெற்ற ஆணையை உடையவன்.

முடிவுரை

அழகர் மலை, சிலம்பாறு, தென்பாண்டி நாடு, திருமாலிருஞ்சோலை, துளசி மாலை, அத்வைதம் எனும் யானை, வேதப்புரவி, கருடக்கொடி, மும்முரசு, ஆணை ஆகிய பத்து அங்கங்களுடன் இறைவன் காட்சியளிப்பதையும் அவற்றின் சிறப்புகளையும் அழகர் கிள்ளைவிடு தூதின் வழி இக்கட்டுரையில் கண்டோம்.

கருத்துகள் இல்லை: