ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய மகோற்சவக் கிரியைகள்
பா.
ஜேசினி மதுஷிகா BA (Hons)
bjmadushika@gmail.com
அறிமுகம்
ஆலயங்களில்
தினமும் நடைபெறும் கிரியைகள் நித்திய கிரியைகள் என்றும், விசேடமாகச் செய்யப்படும் கிரியை
நைமித்தியக் கிரியை எனவும் அழைக்கப்படும்.
இக் கிரியை வாரம், மாதம், வருடம் எனும் காலங்களில்
வரும் விஷேட தினங்களைச் சிறப்பாக கொண்டு நடைபெறும். நித்திய பூசையில் ஏற்படும் குறைகளை நீக்கும்
பொருட்டு நைமித்திய பூசை நடைபெறும். வருடம் ஒரு முறை நடைபெறுவது மகோற்சவம் ஆகும்.
“மகா” என்பது பெரிய என்றும், “உற்சவம்” என்பது விழா எனவும் பொருள்படும். ஆன்மாக்கள்
மலத்தை நீக்கி வீடு பேற்றை கொடுக்கும் பெரிய விழா என்று பொருள்படும். நைமித்திய கிரியைகளில்
மகோற்சவம் சிறப்பானதொரு கிரியை ஆகும். இது இறைவனின் ஐந்தொழில்களை நினைவூட்டுகிறது.
கொடிமரம் உள்ள ஆலயங்களில் கொடியேற்றம் தேர், தீர்த்தம் போன்ற உற்சவங்களும், கொடிமரம்
இல்லாத ஆலயங்களில் அலங்கார திருவிழாக்களும் நடைபெறும். அந்தவகையில் இலங்கையில் உள்ள
பிரபலமான பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய மகோற்சவ கிரியை பற்றி அறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
ஆலய அமைவிடம்
இலங்கையின்
தலைநகர் கொழும்பில் கொச்சிக்கடைப்பகுதியில் முற்றிலும் கருங்கல்லினால் சிற்ப வேலைப்பாடுகள்
கொண்டு கட்டப்பட்டது இவ்வாலயம். இலங்கையில் முற்றிலும் கருங்கல்லினால் சிறிய வேலைப்பாடுகளைக்
கொண்டு அமைக்கப்பட்ட ஒரே ஆலயம் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயமே ஆகும்.
கருங்கல்லை பொறித்த சிற்பங்கள் கொண்ட தூண்கள் கோவிலில் உள்ளே
உள்ளன. கருவறையும் அதன் உட்பிரகாரக் கூரை என்பனவும் கூட கருங்கல்லினாலேயே தளம் போட்டு
கட்டப்பட்டுள்ளன இக்கோயிலின் கிழக்கு, மேற்கு ஆகிய இருவாயில்களிலும் உயர்ந்த கருங்கற்
கோபுரங்கள் காட்சியளிக்கின்றன.
கோயில் வரலாறு
இவ்வாலயம்
பொன்னம்பல முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. அவர் வாழ்ந்த காலத்தில் கொழும்பில் சைவாகம
முறைப்படி அமைந்த கோயில் எதுவும் இல்லாத குறை காணப்பட்டது. இதனால் அங்கு வாழ்ந்த சைவ
மக்களுக்கென சிற்ப சாஸ்திர ஆகம முறைப்படி அமைந்த கோயில் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற
எண்ணம் பொன்னம்பல முதலியாரின் மனதில் குடி கொண்டது. இவ்வெண்ணத்தை நிறைவேற்றும் நோக்குடன்
இருந்த முதலியாரின் கனவில் ஒருநாள் தெய்வ அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின் அவரின் கோயில்
கட்டும் எண்ணம் பேரார்வமாய் மாறியது. இவர் பின்பு கொச்சிக்கடைப் பகுதியில் ஐந்து ஏக்கர்
நிலத்தை வாங்கிக் கோயில் பணியை ஆரம்பித்தார். தென்னிந்தியக் கோயில்களுக்கு நிகரான கோயிலாக
அமைய வேண்டும் எனும் ஆர்வம் காரணமாக இந்தியாவிலிருந்து கட்டடக்கலைஞர்களை வரவழைத்து
கோயில் வேலைகளைத் தொடங்கினார்.
பொன்னம்பலவாணேஸ்வரர்
கோயில் இரண்டு வருடங்களில் கட்டி முடித்ததோடு அதன் இடது பக்கத்தில் அம்மன் கோயில் அமைப்பித்தார்.
ஆரம்பக்கால கோயிலின் மூலஸ்தானத்தில் மகாலிங்கம்
பிரதிட்டை செய்யப்பட்டது. பொன்னம்பல முதலியார் அவர்களால் கட்டப்பட்ட இத்தலம்
பின் அவரின் மைந்தன் சேர். பொன். இராமநாதன் அவர்களால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
கற்கோயில்
கட்டும் பேரார்வமுள்ள இராமநாதன் அவர்கள் 1907 இல் கருங்கற்கட்டட வேலைகளை ஆரம்பித்தார்.
கட்டுமானப் பணிகளை தாமே நேரில் நின்று செயற்பட்ட சிவப்பணி, அவரின் எண்ணத்தை உணர்த்தியது
எனலாம். வியாங்கொடையில்; இருந்து தருவிக்கப்பட்ட கருங்கற்களை கொண்டு இன்று நாம் காணும்
கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மகோற்சவம்
ஆலயங்களில்
தினமும் நடைபெறும் கிரியைகள் நித்திய கிரியைகள் எனும் விசேடமாக செய்யப்படும். கிரியை
நைமித்தியக் கிரியை எனவும் அழைக்கப்படும். இக்கிரியை வாரம், மாதம், வருடம் எனும் காலங்களில்
வரும் விசேட தினங்களை சிறப்பாகக் கொண்டு நடைபெறும். நித்திய கிரியைகளில் பூசைகளில்
ஏற்படும் குறைகளை நீக்கும் பொருட்டு நைமித்ய பூசை நடைபெறும். வருடம் ஒருமுறை
நடைபெறுவது மகோற்சவம் ஆகும். “மகா” என்பது பெரிய என்றும், “உற்சவம்” என்பது விழா எனவும்
பொருள்படும். ஆன்மாக்களின் மலத்தை நீக்கி வீடுபேற்றை கொடுக்கும் பெருவிழாவாகவும் பொருள்படும்.
நைமித்தியக் கிரியைகளில் மகோற்சவம் சிறப்பானதொரு கிரியை ஆகும். இது இறைவனின் ஐந்தொழில்களை
நினைவூட்டுகிறது. கொடிமரம் உள்ள ஆலயங்களில் கொடியேற்றம், தேர் தீர்த்தம் போன்ற உற்சவங்களும்,
கொடிமரம் இல்லாத ஆலயங்களில் அலங்கார திருவிழாக்களும் நடைபெறும்.
அந்தவகையில்
கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் மகோற்சவம் (வருடாந்த) பங்குனி உத்திரத்தில்
தீர்த்தம் வரக்கூடியதாக அதற்கு ஒன்பது நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
பத்து நாட்கள் நடைபெறுகின்றது. இங்கு ஐந்து இரதங்கள் பவனி வருகின்றன.
பொன்னம்பலவாணேஸ்வரர்
ஆலயத்தில் கொடியேற்ற உற்சவம் நடைபெறுவதற்கு முதல் நாள் மாலை 5.30 மணி அளவில் முதலாவதாக
அனுமதி பெறல் அதாவது (அனுக்ஞை) இடம்பெறுகின்றது. இதில் கொடியேற்ற உற்சவம் செய்யும்
ஆசாரியார் ஒரு தட்டில் பச்சையரிசி பரப்பி இரண்டு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு,
சந்தனம், பூ, மாவிலை, சுவர்ணபுஷ்பம், தர்ப்பை என்பவற்றை வைத்து தீர்த்தம் தெளித்து
பூசை நடத்துவார். பின்பு அங்கிருக்கும் ஏனைய ஆசாரியார்களிடம் ஆசி பெற்று பிள்ளையார், மூலமூர்த்தி, அஸ்திரதேவர், உற்சவமூர்த்தி
ஆகிய தெய்வங்களுக்குப் பூசை ஆராதனை செய்து உற்சவத்தை நல்முறையில் நடத்த அனுமதியும்
தந்தருளுமாறு வேண்டுவார்.
இதற்கு
பின்னர் “கிராமசாந்தி” மேற்கொள்ளப்படுகின்றது. இது தீய சக்திகளால் பெருவிழாவிற்கு இடையூறு
ஏற்படாமல் மங்களம் உண்டாகும்படி காவற் கடவுளரான பைரவ மூர்த்திக்கு ஆற்றப்படும் கிரியை
என குருக்கள் கூறினார்.
கிராமசாந்தி
நிகழ்ந்ததன் பின்னர் “வாஸ்துசாந்தி மேற்கொள்ளப்படுகின்றதாம். இது நிலத்திலுள்ள குற்றங்குறைகளை
நீக்குவதற்காக ஆலய மண்டபத்தில் அக்கினி காரியத்துடன் செய்யப்படும் கிரியை. வைக்கோல்,
தர்ப்பை முதலியவற்றால் செய்யப்பட்ட வாஸ்து புருஷனைப் பூசித்து சிவாக்கினியில் எரியச்
செய்து பின், அவ்வுருத்தை ஆலய மண்டபங்கள், வீதிகள் முதலிய இடங்களில் இழுத்து வந்து
வடகிழக்கு மூலையில் போட்டு விடுவர். வெட்டிய நீற்றுப் பூசணிக்காயிற் குங்குமம் பூசப்பட்டு
இதனுடன் எடுத்துச் சென்று போடப்படும். இக்கிரியையினால் இடச்சுத்தி ஏற்படுகின்றது.
இக்கிரியை
இனிதே நடைபெற்ற பின்னர் “மிருத்சங்கிரணமும் அங்குரார்ப்பணமும்” நடைபெறும். இது நற்காரியங்களை
செய்யும்போது நவதானியம் இடுதல் முக்கியமாகச் செய்யப்படும். “பாலிகையிடுதல்” என்பர்.
ஆலயத்தின் வடகிழக்கு அல்லது வடக்குத் திசையில் இது செய்யப்படும். இது நன்கு செழித்து
வளர்ந்தால் நாட்டிலே தானிய விருத்தி சிறக்குமென்பது ஐதீகம் எனவும் கூறினர். இவை அனைத்தும்
கொடியேற்ற விழா நடைபெறும் நாளிற்கு முதல் நாள் மாலையில் இருந்து இரவு வரை நடத்தப்படும்.
விழாக்கள்
இடையூறு இன்றி நிறைவேற வேண்டும் என்று ஆசாரியார் தனக்கும் உற்சவமூர்த்திகளுக்கும் காப்பு
கட்டுவார். இதனைத் தொடர்ந்து உலகமெங்கும் நன்மை உண்டாக வேண்டி ஆசாரியார் மூன்று முறை
மேளமடிப்பார். இது “பேரிதாடனம்” எனப்படும்.
கொடியேற்ற உற்சவம்
இவ்
ஆலயத்தில் கொடியேற்ற உற்சவம் 10 மணியளவில் ஆரம்பிக்கப்படும். இவ் உற்சவமானது மூலமூர்த்திக்குரிய
ஊர்தியின் முன்னால் இடம்பெறும். கொடிச்சீலையில் மூலமூர்த்திக்குரிய ஊர்தி, அடையாளம்
முதலியவற்றோடு கண்ணாடி, சூரிய சந்திரர், பூரண கும்பம் முதலியனவும் வரையப்பட்டிருக்கும்.
இங்கு மூலமூர்த்திக்குரிய அடையாளங்களாக இடபமும் சூலமும் காணப்படுகின்றது.
கொடியேற்ற
தினத்தன்று உற்சவம்மூர்த்தியை அலங்கரித்து கோயிலை வலம் வந்து கொடித்தம்பத்திற்கு முன்னால்
எழுந்தருளச் செய்வார்கள். ஆசாரியர் ஒருவரால்
கொடிச்சீலையை உள்வீதி வலமாக கொண்டுவரப்பட்டதும் மூலமூர்த்தியின் சன்னிதானத்தில்
பூசை வழிபாடு ஆற்றப்படும். அதன் பின் கொடிதம்பத்திலுள்ள கயிற்றுடன் கொடிச்சீலையை இணைத்து
பாராயணத்துடன் கிரியைகள் ஆற்றுவர். தேவர்கள் யாவரையும் அழைத்து தீர்த்தத் திருவிழா
இடம்பெறும் வரை விக்கினங்கள் நிகழாது அருள் புரியுமாறு வேண்டுவர்.
சகல
வாத்தி ஒலிகளுடனும் ஆச்சாரியார்களின் வேதபாராயணத்துடன் கொடியைக் கொடித்தம்பத்தில் ஏற்றுவர்.
இதன் போது கொடித்தம்பத்தின் அடியைச் சுற்றி தர்ப்பைகளைப் பரப்பி இணைத்துக் கட்டுவர்.
இதனைத் தொடர்ந்து அலங்காரம் இடம்பெறும் பின் அவிப்பொருள் பலியிட்டதும் கொடித்தம்பத்திற்கு
தூப தீபங்கள் இடம் பெறும்.
ஆசாரியர்
திக்குப்பாலகரைத் தியானித்து அவர்களுக்குரிய வேதமந்திரம், ராகம், தாளம், வாத்தியம்,
நிறுத்தம் முதலியவற்றை இறையருளைக் கொடித்தம்பத்தில் ஆக்கி வைப்பர். உற்சவமூர்த்திக்கும்
அலங்காரத்துடன் ஆராதனைகள், வேதபாராயணம், திருமுறை ஓதல் என்பவற்றுடனும் தீவர்த்தி, கொடி,
குடை முதலிய அலங்காரங்களுடனும் உள்வீதியில் நிகழும். உற்சவமூர்த்தி வீதியுலா வரும்போது
தீட்சை பெறாதோர் மூர்த்தியைத் தரிசிப்பதால் “சாம்பவ தீட்சை” எனும் தீட்சையைப் பெறுபவர்.
கொடியேற்றத்
தொடக்கம் தீர்த்தத்திருவிழா நிகழும் வரை நடைபெறும் உற்சவங்கள் இறைவனின் பஞ்சகிருத்தியங்களைக்
குறிப்பினவாகும்.
கொடியேற்றம் - படைத்தல்
அங்குரார்ப்பணம்,
இரட்சாபந்தனம், கொடியேற்றம், திருக்கல்யாணம் ஆகியன இறைவனின் படைத்தற் தொழிலைக் குறிப்பன.
உயிர்களுக்கு
நிலைக்களனான உடம்பு, உணர்வுக்கு வேண்டிய கருவிக் கரணங்கள், வாழ்க்கை நடத்துவதற்கான
இடங்கள், நுகர்ச்சிக்கு வேண்டிய பொருட்கள் ஆகியவற்றை இறைவன் படைக்கின்றான். கொடிமரம்
பதியையும், அதில் சுற்றப்பட்ட சீலை பசுவையும், சீதையை சுற்றியுள்ள கயிறு பாசத்தையும்,
குறிக்கும். கொடியேற்றம் என்பது ஆணவம், வலியை இழந்து ஆன்மா ஆசை நீக்கம் பெறுவதிற் பொருட்டு
திருவருளாகிய கொடியை ஏற்றுதல் ஆகும் என்கிறார்.
வாகனத்திருவிழா - காத்தல்
இவ்வாலயத்தில்
வாகனத்திருவிழா சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது. அந்தவகையில் வாகனத்திருவிழா நடக்கும்
நாட்களில் உற்சவமூர்த்திகளுக்குரிய ஊர்திகளில் திருவுலா வருவர். தோன்றிய உலகங்களையும்,
உடம்பெடுத்த உயிர்களையும் உரிய கால எல்லை வரையிற காப்பாற்றிக் கன்ம நுகர்ச்சிக்குத்
துணை செய்வதே காத்தல் - திதி எனக் கூறப்படுகின்றது.
இவ்
வாகனத் திருவிழாவில் இடபம் (எருது) நன்கு அலங்கரிக்கப்பட்டு இவ்வாலயத்தை வலம் வருகிறது.
இப்பசு ஞானத்திற்கு மேலான பசு ஞானத்திலே விளங்குபவர் சிவபெருமான். அவருடைய ஊர்தியாக
இது சிறப்பு பெறுகிறது. ஒரு காலத்தில் தர்ம தேவதையும் விஷ்ணுவும் வேண்டிக் கொண்டபடியால்
அவைகளை வாகனமாகக் கொண்டார் என்றும், இடபத்தின் மீதே சிவன் காட்சி கொடுக்கிறார் என்றும்
கூறுவர். (குருக்கள் கூறியது)
இவை
மகோற்சவம் திருவிழா காலங்களில் அலங்கரிக்கப்படும் என்றும் குருக்களால் கூறப்பட்டது.
மயில்
- இதுவும் வாகனத் திருவிழாவின் போது ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றது. இது முருகப்பெருமானுக்குச்
சிறப்பாக உரியது. முருகன் அழகுடையவன் ஆதலால் அழகிய மயிலை வாகனமாக்கினான். மயிலின் காலின்
கீழ் பாம்பு இருக்கிறது. இது குண்டலினி சக்தியைக் குறிப்பது. சக்தியை அடக்கி ஆளும்
சக்தி வடிவம் தான் என்பதை காட்டுகிறது.
இது
அண்டம், பிண்டம் இரண்டையும் விளக்குகின்றது. அச்சு - மந்திரக்கலையையும், சக்கரம் - சூரிய சந்திரனையும், தட்டுக்கள் - 14 உலகம், ஆசனம்
- ஆகாயம், கொடிஞ்சி - புண்ணிய நதிகள், விதானம் - நட்சத்திரங்கள், சட்டங்கள் - யாகங்கள், அம்பு - விஷ்ணு,
அம்பு இறகு - வாயு தேவன், அம்பின் கூர் - அக்கினி தேவன் ஆகியவற்றையும் குறிக்கின்றன. சரீரத்தில்
ஆறு ஆதாரங்களுக்கு ஆன்மாவைச் செலுத்தி நிரதிசய, ஆனந்த ரூபியாய் அசையாமல் தேர்; போல் நில் என்பதையும் கருதும், நிரோதான சக்தியையும்
குறிப்பதும் உண்டு எனக் கூறினார்.
ஐம்முகநாகம்
- பாம்பு, நஞ்சு, மாணிக்கம், படம் மூன்றையும் மறைத்து வேண்டும் போது வெளிப்படுத்தும்
வல்லமை உடையது. தானும் புற்றில் மறைந்து வெளிவரும் தன்மை உடையது. திரோதான சக்தி பக்குவம்
வரும் வரையும் மறைந்திருந்து வேண்டும் போது வெளிப்பட்டு ஆன்மாக்களுக்கு அருள் புரியும்
தன்மையுடையது.
இவற்றைப்
போலவே ஏனைய குதிரை, யானை, சிங்கம், பூதவாகனம், சேவற்கொடி ஆகியனவும் வாகனத் திருவிழாவில்
ஒவ்வொரு நாளும் இடம்பெறும். மேல் குறிப்பிட்டவை ; போலவே இவையும் பல உட்பொருளைக் கொண்டமைந்து
வலம் வருகின்றன. இவ் ஆலயத்தில் வாகனத் திருவிழா விமர்சையாக ஆசாரியார்களாலும், பக்த
அடியார்களாலும் கோலாகலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தீர்த்தத் திருவிழா - அருளல்
இவ்வாகனத்
திருவிழாவை அடுத்து இப் பொன்னம்பலவாணேஸ்வரத்தில் தீர்த்த திருவிழா இடம்பெறுகின்றது.
உற்சவ மூர்த்தி அஸ்திர தேவருடன் தீர்த்தம் நிகழும் இடத்தில் அஸ்திர தேவருக்கு முறைப்படி
அபிடேகம் நடைபெறும். முதலில் ஆசாரியாரும், அஸ்திர தேவரும் தீர்த்தமாடுவர். இதனைத் தொடர்ந்து
அடியார்களும் தீர்த்தம் ஆடுவர். உயிர்கள் பக்குவ நிலையில் ஆசைகளை ஒழித்து வீடுபேறு
எனப்படும் முக்தி அடைதலை இது குறிக்கும். மாலையில் கொடி இறக்கம் நடைபெறும்.
மௌன உற்சவத் திருவிழா - மறைத்தல்
இவ்
தீர்த்த திருவிழா முடிவடைந்த பின் மாலையில் கொடி இறக்கம் செய்த பின் இவ் மௌன உற்சவம்
இடம்பெறுகின்றது. உயிர்களிடம் நன்மை, தீமை இரண்டையும் ஒன்றாக எண்ணும் மனநிலை மௌன நிலை
வருவித்து மலங்களை முதிர்வீக்கும் அருட் செயல் “மறைத்தல்” எனப்படும். இதனைத் தொடர்ந்து
சண்டேஸ்வரர் உற்சவம் இடம்பெறுகின்றது. இதில் சண்டேஸ்வரருக்கு பூசைகள் இடம் பெற்று தேங்காய்
உடைத்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இவை
இனிதே நிறைவடைந்த பின்னர் இவ்விழாவில் “ஆச்சாரிய உற்சவம்” இடம்பெறும். இதில் விழாவில்
கொடிச்சீலை கட்டிய ஆசாரியாருக்கு கௌரவம் அளிக்கப்படும்.
திருக்கல்யாணம்
தீர்த்த
திருவிழாவை அடுத்து மறுநாள் இடம்பெறும் உற்சவம் திருக்கல்யாணம் ஆகும். இது நம் போன்ற
சாதாரண மக்கள் செய்யும் திருமணம் போன்றதாகும். திருக்கல்யாணம் என்பது அருள் வடிவமான
சக்தி, அறிவு வடிவமான இறைவனோடு கலந்து பிரபஞ்சத்தை இயக்கி வைப்பதைக் குறிக்கும். இதன்போது
திருவூஞ்சலும் இடம்பெறும்.
பூங்காவனம்
திருக்கல்யாணம்
இடம்பெற்றதன் மறுநாள் பூங்காவன உற்சவம் இடம்பெறும். இது மக்களை உற்சாகப்படுத்தவும்,
அவர்களின் கலை ஆற்றலை வெளிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும். இவ்விழாவில் உற்சவமூர்த்திகளை
எழுந்தருளச் செய்து பூசை ஆராதனைகள் நடத்துவர்.
மேலும்
வாகனத்திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத்திருவிழா, மௌன உற்சவம் இடம்பெறும். ஒவ்வொரு
நாளும் ஆலயத்தில் வேதபாராயணம், நாதஸ்வர வித்துவான்களால் நாதஸ்வரம் ராகத்தோடும், கீர்த்தனைகளோடும்
நிகழ்த்தப்படும் சங்கு சேமக்கலம் என்பனவும் முழங்கும்.
நிறைவு
இவ்வாலயத்தில்
மகோற்சவம் தொடங்கிவிட்டால் கொழும்பு வாழ் மக்களின் வாழ்க்கையில் ஓர் உயிர் துடிப்பு
ஏற்படுகின்றது. இயந்திரமயமான வாழ்க்கை வாழும்
மக்களது மனதின் சலிப்பை அகற்றி, உற்சாகத்தையூட்டி மனப்பூரிப்பை ஏற்படுத்தி வாழ்க்கையில்
பிடிப்பு ஏற்பட இது வழிவகுக்கின்றது. இக்காலத்தில் இங்குள்ள மக்கள் ஒன்று சேர்ந்து
கோயிலையும், வீதிகளையும் சுத்தம் செய்து, குலை வாழைகள் நாட்டி தோரணங்கள் தொங்கவிட்டு அலங்கரித்து வீடுகள் சுத்தம் செய்து விரதம் பிடிப்பதனால்
மக்களிடையே ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மனநிறைவு என்பன கிடைக்கப்பெறுகின்றன.
ஆய்வுக்குதவியவை
•
கள
ஆய்வு, 23.03.2020
•
நேர்காணல்,
சிவஸ்ரீ சிவதாச சுப்ரமணிய குருக்கள், ஆலய பிரதான பூசகர், 23.03.2023, 9:30 - 1:30
உசாத்துணை
1.
இந்து
மக்களுக்கு ஓர் கையேடு, அகில இலங்கை இந்துமாமன்றம், கொழும்பு – 02, 2001.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக