ஈழத்து
இந்து சமய மரபில் நாட்டார் தெய்வ வழிபாடுகள்
பா. ஜேசினி மதுஷிகா BA (Hons)
bjmadushika@gmail.com
அய்வுச்சுருக்கம்
ஈழத்து இந்து மக்களால் இருவகையான
வழிபாட்டு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை ஆகமம் சார்ந்த, ஆகமம் சாராத வழிபாட்டு
முறைகள் ஆகும். அகமம் சாராத வழிபாட்டு முறையினை நாட்டார் வழிபாடு என்பர். ஆகம வழிபாட்டு
முறையில் எவ்வாறு சடங்குகள் முக்கியத்துவம் பெறுகின்றனவோ அதுபோல நாட்டார் வழிபாட்டில்
சடங்குகள் பிரதான இடம் பெறுகின்றன. நாட்டார் வழிபாடானது அவரவர் சமூக கட்டமைப்போடு எவ்வாறு
பங்களிப்பு செய்கின்றது, பெரும்பாலான மக்களால் வணங்கப்படுகின்ற சிறு தெய்வங்கள் யாவை,
தெய்வங்களை எவ்வாறு வழிபாடு செய்கின்றார்கள், வழிபாடுகளின் தொன்மை பற்றியும், அவற்றில்
உள்ள தனித்துவமான விடயங்கள் என்ன என்பதைப் பற்றியும், இவ்வழிபாட்டிற்கும் சமூகம் சார்ந்த
வரலாற்றுக்கும் இடையேயான தொடர்புகள் என்ன என்பதையும், நம்பிக்கை சார்ந்த கருத்துக்கள்
யாவை என்பதை பற்றியும் ஆராய்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.
திறவுச்
சொற்கள் :
நாட்டார் வழிபாடு, சடங்கு, நேர்த்தி, ஈழம், தெய்வங்கள்
ஆய்வு
அறிமுகம்
ஆதிகால மனிதர்களின் வாழ்க்கை
ஆபத்துகள் நிறைந்ததாக காணப்பட்டது. அச்சத்தின் காரணமாக அவன் இயற்கையை வழிபடலானான்.
அப்போது அவன் இயற்கைக்கு உருவமளித்தான். ஆகாயத்தை இறைவன் தலையாகவும், பூமியை பாதமாகவும், சூரிய சந்திரனை
இரு கண்களாகவும், நான்கு திசையையும் இறைவனுடைய கைகளாகவும், காற்றை மூச்சாகவும், பறவைகளின் ஒலியை குரலாகவும் கருதினான்.
காலநிலை மாற்றங்களை அறியா மானிடன்
இது இறைவனின் சீற்றத்தினாலேயே இடம்பெறுகின்றது. நாம் தவறு செய்து விட்டோம், ஆகவே மன்னிப்பு
கேட்க வேண்டும், பாவ பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள
சடங்கு, சம்பிரதாயங்களை செய்ததோடு ஒழுக்கத்தோடும் வாழத்தொடங்கினான். காலப்போக்கில்
காலத்தின் பரிணாம வளர்ச்சியில் பல தெய்வ வழிபாடுகள் இடம்பெறத் தொடங்கியது. மக்களுக்கும்,
தெய்வங்களுக்கும் இடையிலான பிணைப்பினை ஏற்படுத்துவது சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள்
ஆகும்.
அந்த வகையில் ஈழத்து மக்கள் ஆதி
காலம் தொட்டு இன்றுவரை தங்கள் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வழிபாட்டு முறைகளை ஏற்படுத்திக்
கொண்டனர். இலங்கையில் ஆகமம் சார்ந்த, ஆகமம் சாராத வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றது.
ஆகமம் சாரா வழிபாடே நாட்டார் வழிபாடாகும். இதனை குல வழிபாடு, தெய்வ வழிபாடு, ஊர்த்
தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, மலைத் தெய்வ வழிபாடு, கிராமிய வழிபாடு முறை எனவும்
அழைப்பது உண்டு.
ஈழத்தில் நாட்டார் வழிபாடு யாழ்ப்பாணம்,
வன்னி, மட்டக்களப்பு என தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் காணப்படுகின்றது. நாட்டார்
வழிபாடானது குடும்ப மட்ட வழிபாடு, குலமற்ற வழிபாடு, சமூக மட்ட வழிபாடு என்றும், பிரதேசத்திற்கு
பிரதேசம் வேறுபட்ட தன்மையைக் கொண்டும், தனித்துவமான விடயங்களைக் கொண்டும் காணப்படுகின்றது.
நாட்டார் தெய்வங்களை ஆண் தெய்வங்கள்,
பெண் தெய்வங்கள் என இருவகையாக பிரிக்கலாம். ஆண் தெய்வங்களாக வதனமார் வழிபாடு, முனியாண்டிச்சாமி
வழிபாடு, பெரியசாமி வழிபாடு, பெரியதம்பிரான் வழிபாடு, அய்யனார் வழிபாடு, வைரவ வழிபாடு,
மதுரை வீரன் வழிபாடு, மாடன், கருப்புசாமி, காத்தவராஜன் வழிபாடு போன்றவற்றையும், பெண்
தெய்வங்களாக கண்ணகி, நாச்சியார் வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு, மாரியம்மன் வழிபாடு,
காளி, கொத்தியம்மன், சீதையம்மன் போன்ற தெய்வங்களின் வழிபாடுகளைக் குறிக்கலாம். இத்
தெய்வங்களை மக்கள் பயம், நம்பிக்கை, மரபு என்பவற்றின் மூலம் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு
நேர்த்தி வைத்து, குளிர்த்தி செய்து, பலிக் கொடுத்து வழிபடுகின்றனர்.
கண்ணகி
வழிபாடு
ஈழத்தின் பெண் தெய்வ வழிபாடுகளைப்
பற்றி நோக்கின், கண்ணகி வழிபாடு பெரும்பாலான மக்களால் வழிபடப்படும் பெண் தெய்வ வழிபாடாக
கருதப்படுகின்றது. கண்ணகி வழிபாடு காரைதீவு, வற்றாப்பளை, நுவரெலியா, மட்டக்களப்பு ஆகிய
இடங்களில் வழிபடப்படுகின்றது. கண்ணகி வழிபாட்டில் ஊரக்;காவல் பண்ணுதல், பாக்குத்தொண்டுதல்,
கதவு திறத்தல், கல்யாணக்கால் வெட்டுதல், பொங்கல் வைத்தல், மடை பரவுதல், குளிர்த்திப்
பாடல் என்பன இடம்பெறும். அத்துடன் கண்ணகி வழக்குரை காவியம் படித்தல், கோவலன் கதைக்கூறல்,
சிலம்புக்கூறல், காவடி எடுத்தல், போர்த்தேங்காய் அடித்தல், கும்மியடித்தல், கூத்தாடல்,
பிள்ளை விற்றல், வழிவிடுதல் போன்றனவும் இடம்பெறும்.
நினைத்த காரியம் கைகூடல், கண்ணூறுபடாதிருத்தல்,
எதிரிகளை வெல்லுதல் போன்ற சிறப்புக்களை தருபவளாக மக்கள் வழிபடுகின்றனர்.
திரௌபதை
வழிபாடு
திரௌபதை அம்மன் வழிபாடு பற்றி
நோக்கின் இலங்கையில் அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளத்தில் உடப்பு மற்றும் முந்தல் ஆகிய
இடங்களில் திரௌபதை அம்மன் வழிபாடு காணப்படுகின்றது. இத்தெய்வம் காவல் தெய்வமாக மக்களால்
போற்றி வணங்கப்படுகின்றது. இவ்வழிபாடு உடப்பிலே சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.
பதினெட்டு நாட்களே கொண்ட பொங்கலே இதன் சிறப்பம்சமாகும். பதினெட்டாம் நாட் சடங்கின்
போது பாண்டவர் வரலாற்றுடன் தொடர்பான பாடல்கள் படிக்கப்படும். பூமிதித்தல் மிகச்சிறப்பானதாகும்.
பூசாரியால் மந்திரித்து தீயில் எறியப்படும் பூக்களும், இலைகளும் நீண்ட நேரம் சென்றாலும்
வாடாது காணப்படுதல் வழிபாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது எனலாம். இவ்வழிபாட்டின்
ஊடாக குடும்ப, சமூக ஒற்றுமைகள் மேலோங்குதல், வேளாண்மை பெருகுதல், கொடிய நோய்கள் வராது
தடுக்கப்படுதல், பெண்கள் சமூகத்தில் மதிக்கப்படுதல் போன்றன மேலோங்கும்.
மாரியம்மன்
வழிபாடு
இலங்கையைப் பொறுத்தவரை மாரியம்மன்
வழிபாடு மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம், யாழ்ப்பாணம், வன்னி ஆகிய இடங்களில் காணப்பட்டாலும்
இவ்வழிப்பாடு மலையகத்திற்கே சிறப்பானதாகும். இவ்வழிபாட்டில் வேப்பிலை முதன்மைப்படுத்தப்பட்டவை
ஆகும். இவள் வேப்பிலைக்காரியாகவும் கருதப்படுகின்றாள். பொங்கல் வைத்தல், மடை பரவுதல்,
பாற்செம்பு எடுத்தல், அலகுப்பாய்ச்சல், முள்மிதியடி எடுத்தல், காவடி எடுத்தல் என்பன
பிரதான வழிபாட்டு முறைகள் ஆகும். அத்துடன் மாரியம்மன் தாலாட்டுப் பாடுதல், கரகம் ஆடுதல்
என்பனவும் முக்கிய சடங்காகும். அம்மை, கண்ணோய், கண்ணில் பூ விடுதல் போன்ற நோய்கள் வராமல்
இருக்கவும், பில்லி, சூனியம் போன்றவற்றை தடுப்பவள் போன்ற காரணங்களால் இவள் மக்களால்
வழிபடப்பட்டு வருகின்றாள்.
வதனமார்
வழிபாடு
நாட்டார் வழிபாட்டில் ஆண் தெய்வங்கள்
அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இதில் வதனமார் வழிபாடு சிறப்பு
வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையிலும் மக்களால்
வழிபடப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலில் கால்நடை வளர்ப்பு மற்றும்
விவசாயத்தோடு தொடர்புப்பட்ட தெய்வமாக வதனமார் முக்கியத்துவம் பெறுகின்றது. வதனமாருக்குரிய
குலக்கூறி அடையாளம் “வெளுக்கயிறு” ஆகும். வதனமார் எனும் கூட்டத்தினர் மனிதர்களாக வாழ்ந்து
தெய்வங்களாக மாறியவர்கள் எனும் கருத்தின் அடிப்படையில் குலக்குறியினின்று வெளிப்பட்டு
பாதுகாப்பினை அளிக்கும் முன்னோராக இருக்கின்றனர். வதனமார் வழிபாட்டில் குழுமாடு பிடித்தல்
முக்கிய நிகழ்வாகும். வைரவர், குமாரர், காளி, மாரி போன்ற வழிபாடுகளில் வதனமார்களுக்குப்
பறிதல் அமைக்கப்படும் வழிபாடு இடம்பெறும். குலக்குறியியல் சார்ந்த சடங்குகளை நிகழ்த்தி
சமயப் பண்பு கூறுகளில் மந்திரத்தோடு தொடர்புடையதாக வதனமார்; சார்ந்த குலக்குறி வழிபாடு
காணப்படுகின்றது.
பெரியசாமி
வழிபாடு
பெரியசாமி வழிபாடு மட்டக்களப்பில்
காணப்படுகின்ற ஒரு வழிபாட்டு முறையாகும். கருங்காலி பொல், மரத்தினால் செய்யப்பட்ட வால்,
ஈட்டி, முகக்களை என்பன பெட்டகத்தினுள் குறியீடுகளாக வைக்கப்பட்டுள்ளன. பெரியசாமி கப்பலில்
வந்து இறங்கிய தெய்வம் என்ற நம்பிக்கை இப்பிரதேச மக்களிடம் காணப்படுகின்றது. மரத்தடியின் கீழ் பந்தல் அமைத்து வழிபாடு செய்யப்படுகின்றது.
சடங்கின் போது தவறு ஏற்பட்டால் மழை பெய்து சடங்கு முற்றாக தடைப்பட்டு நிறுத்தப்படும்
எனும் அச்சம் இம்மக்களிடையே காணப்படுகின்றது. பெண்கள் பெரியசாமியின் குலக்குறி மையத்திற்கு
செல்லக்கூடாது எனும் கட்டுப்பாடு உள்ளது.
பெரிய
தம்பிரான் வழிபாடு
நாட்டார் வழிபாடுகளுள் பெரிய
தம்பிரான் வழிபாடு குறிப்பிடத்தக்கது. இவ் வழிபாடு யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு
போன்ற பிரதேசங்களில் இடம்பெறுகின்றது. இவ்வாலய பூசகர் மடிமத்தான் எனப்படுவார். ஆண்டுக்கு
ஒருமுறை விழா இடம்பெறும். இதனை “பெரிய தம்பிரான் பொங்கல்” என அழைப்பர். பெரிய தம்பிரானுடைய
குலக்குறி “சூலம்”; ஆகும். பெரிய தம்பிரான் போற்றப்படும் குறியீட்டு வடிவத்தினை நான்கு
விதங்களில் நோக்க முடியும்.
1. சூல வடிவம்
2. பீட வடிவம்
3. முகக்களை வடிவம்
4. சுதையில் செய்த வடிவம்
பெரிய தம்பிரான் வேள்விச் சடங்கு
ஆரம்பிக்கும் காலத்தில் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள கோயில்களில் கொடியேற்றம்
நடைபெறாது. பெரிய தம்பிரான் சடங்கினை பிராமணர்களோ, வேறு குலத்தினை சேர்ந்தவர்களோ செய்ய
அனுமதி இல்லை. காரணம் பெரிய தம்பிராணின் எதிரிகளாக பிராமணர்கள் கருதப்படுகின்றனர்.
மேலும் அண்ணமார் வழிபாடு, இளந்தாரிமார்
வழிபாடு என்பன யாழ்ப்பாணம், வன்னி முதலான பிரதேசத்திலும், சுடலைமாடன் வழிபாடு திருகோணமலை,
வன்னி, யாழ்ப்பாணத்திலும், காத்தவராயன் வழிபாடு மட்டக்களப்பு, வன்னி, திருகோணமலை, யாழ்ப்பாணத்திலும்,
மதுரைவீரன் வழிபாடு மலையகத்திலும் வழிபடப்பட்டு
வருகின்றது.
நாட்டார் தெய்வ வழிபாட்டில் சடங்குகளை
ஆற்றுவோர் “ஆற்றுப்படுத்துவோர்” எனப்படுவர். பிரதேச ரீதியாக இவர்களால் ஆற்றப்படும்
சடங்குகள் அமைகின்றன.
உதாரணம் :- பூசாரிமார் வழிபாட்டு
முறை, கட்டாடிமார் வழிபாட்டு முறை, கப்பூகளார் வழிபாட்டு முறை, ஆதிக்குடிகள் வழிபாட்டு
முறை ஏனைய வழிபாட்டு முறை என்பனவாகும்.
ஈழ மக்களால் வழிபடப்படும் இவ்
நாட்டார் தெய்வ வழிபாட்டின் மூலம் குடும்ப ஒற்றுமை, அன்றாடக் காரியங்கள் நிறைவேறுதல்,
தீராத நோய் தீர்த்தல் என்பன இடம்பெறுகின்றன. சமத்துவம் பேணல், பகைமை தீர்த்தல், நம்பிக்கை
போன்ற காரணங்களும் இவ்வழிபாடு இணையக் காரணமாகிவிட்டன. இந் நாட்டார் வழிபாட்டின் ஊடாக
கிராமிய கலைகளான கரகம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், கூத்துக்கள் என்பனவும் வளர்ச்சியடைகின்றன.
இவற்றினை நோக்கும் போது மக்கள் வாழ்வியலோடு இணைந்த வழிபாடாக நாட்டார் வழிபாடு காணப்படுகின்றது.
மேற்கூறப்பட்ட நாட்டார் வழிபாடானது
வெறுமனே ஒரு சடங்காக மாத்திரமன்றி வழிபாட்டு முறைகளோடு இணைந்து கலை கலாசார வளர்ச்சிக்கும்
பாரிய உதவியை மேற்கொண்டுள்ளது. இவ்வழிபாடுகளை மக்கள் பாடல்கள் மூலமும், கூத்து முறைகள்
மூலமும் தம்முடைய பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
முடிவுரை
நாட்டார் வழிபாடானது சமூக ஏற்றத்தாழ்வுகளைக்
கொண்டிருந்தாலும் ஒரே சமூகம், ஒரே குடும்பம் தன்னுடைய உறவுகள் என்ற ஒற்றுமைக்காகவும்
அதனை பேணிப் பாதுகாக்கும் முறைகளையும் கொண்டுள்ளது. இவ் வழிபாடுகள் மனிதனுக்கு மன அமைதியைக்
கொடுக்கின்றது. தான் செய்யும் தவறுகளில் இருந்து, விடுபட தன்னை இப்புண்ணிய காரியங்களில்
ஈடுபடுத்திக் கொள்வதன் ஊடாக மனநிறைவடைவதாக தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கின்றனர். இதன்
மூலம் குறிப்பிட்ட சமூக மக்களிடையே சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் ஏற்படுகின்றது.
உசாத்துணைகள்
1.
கனகரத்தினம்,
இ. வை., 2016, ஈழத்து நாட்டார் வழிபாடு, தமிழ்த்துறை பேராதனை பல்கலைக்கழகம், குமரர்
அச்சகம்.
2.
சிவசுப்ரமணியம்
ரகுராம்., 2009, ஈழத்தில் கண்ணகி வழிபாடு, புதிய ஆராய்ச்சி காலாண்டு ஆய்வு இதழ்.
3.
கணபதிப்பிள்ளை,
க., 1962, ஈழத்து வாழ்கும் வளமும், குமரன் புத்தக வெளியீடு–1.
4.
விசாகரூபன்,
கி., 2004, நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம், மலர் பதிப்பகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக