மௌரியர் கால சமய சூழலில் வைதீக
சமயங்களின் செல்வாக்கு
பா.
ஜேசினி மதுஷிகா BA (Hons)
ஆய்வுச் சுருக்கம்
வட இந்திய வரலாற்று காலங்களில்
மௌரியப் பேரரசு தனக்கென ஓர் சிறப்பிடத்தை வைத்துள்ளது. மௌரிய எனும் சொல்லானது “மயூர”
எனும் வினையடியில் இருந்து பிறந்தது. மயூரம் என்பதன் பொருள் மயில் என்பதாகும். எனவே
மௌரியர் பரம்பரை மயிலோடு தொடர்புடையது என்ற கருத்துக்கள் நிலவுகின்றன. மௌரிய பேரரசுக்
காலத்தில் வைதீக சமயங்களோடு அவைதீக சமயமான பௌத்த சமயமும் மன்னர்களாலும், மக்களாலும்
போற்றப்பட்டு வந்தது. இதற்கு சான்றாக அசோக மன்னனைக் குறிப்பிடலாம். இத்தகைய கால கட்டத்தில்
வைதீக சமயங்களான இந்து சமயமும், வைணவ சமயமும் மக்கள் மத்தியில் எவ்வாறு செல்வாக்குச்
செலுத்தியது, இதற்கு ஆட்சியாளர்களின் பங்களிப்பு எத்தகையது, பிராமணச் செல்வாக்கு, இந்து
சமய திருமண முறைகள், இக்கால நூல்களில் வைதீக சமயம் இருந்துள்ளமையை நிறுவும் வகையில்
இவ் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
திறவுச்சொற்கள் - இந்துசமயம், வைதீக சமயம், மௌரியர்,
பிராமணர்கள், அசோகன்
ஆய்வு அறிமுகம்
வட இந்திய வரலாற்றில் மௌரியர்களினது
ஆட்சிக் காலம் ஒரு முக்கிய காலகட்டமாகும். இந்திய வரலாற்றுக் காலங்களுள் குப்தர்காலம்,
சோழர்காலம் என்பன இந்துப் பண்பாட்டு மரபுகள் வளர்ச்சிப் பெற்ற காலங்களாக உள்ளன. அதனைப்
போலவே மௌரியர் காலமும் சிறப்புடன் திகழ்ந்தது. இதனாலேயே இம்மூன்று காலகட்டங்களையும்
வரலாற்றாசிரியர்கள் “பொற்காலங்கள்” என்று குறிப்பிடுகின்றனர். இங்கு பௌத்த மதம் எழுச்சிப்
பெற்றதைப் போன்று இந்து சமய மரபுகளும் தமது நிலையில் வளர்ச்சி பெற்றதனைக் காண முடிகின்றது.
கி.மு 325 தொடக்கம் கி.மு
185 வரையான காலப்பகுதி மௌரிய மன்னர்களின் ஆட்சிக் காலமாகும். வைதீக சமய செல்வாக்கு
இக் காலத்தில் ஏற்பட்ட இந்து சமய வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதற்கு புதைப்பொருள்,
இலக்கிய சான்றுகள் என்பன உதவுகின்றன.
• கௌடில்யரின் - அர்த்த சாஸ்திரம்
• மெகதஸ்தனிசின் - இண்டிகா
• மனுவின் - மனுதர்மசாஸ்திரம்
• புராண, இதிகாச இலக்கியங்கள் போன்றவை கூறலாம்.
மௌரிய வம்சத்து மன்னர்கள் பிராமணர்களாகக்
காணப்பட்டனர்.
உ + ம் :- விஷ்ணு குப்தன்
இவர்களின்
பெயர்களும் வைதீக சமயம் சார்ந்தததாகவே காணப்பட்டது.
பௌத்த மதம் பெருவளர்ச்சி பெற்ற
போதும் இந்து சமய நம்பிக்கைகள் மிகத்தீவிரமாக மக்களால் கைக்கொள்ளப்ப்டது. இவ்வுண்மைகளை
பல்வேறு வரலாற்று மூலங்களால் அறிய முடியும். அசோகன் புத்த மத்ததை தழுவுவதற்கு முன்பு
இந்து சமயத்தையே பின்பற்றியதாக தெரிகிறது. கலிங்கத்துப் போரே அசோகனின் மனமாற்றத்திற்கு
காரணம் என்று கூறப்படுகின்றது.
18வது பாறைக்கல்வெட்டு,
“எல்லாச்
சமயத்தவரும், எல்லா இனத்தவரும் ஒன்றிணைந்து சமய,
இனப் பொறையினை
மேற்கொண்டு நாமெல்லாம் உடன்பிறப்புக்கள்
என்ற
உணர்வால் ஒன்றுபட வேண்டும்”
என்று அசோகன் மக்களை வேண்டியதாகக்
கூறுகிறது. அசோகனின் சமயப் பொறை பற்றிய இச் செய்தி இந்துசமய, சமணசமய, பௌத்த சமயம் என்பன
தத்தமது நிலைகளில் வளர்ச்சிப் பெற்றன என்பதை உணர்த்துகின்றது. அந்தவகையில் சைவம், வைணவம்,
கௌமாரம் முதலான சமய நெறிகளைச் சார்ந்த தெய்வீக நம்பிக்கைகள் இக்காலத்தில் காணப்பட்டன.
அறுவகைச் சமயங்களுள் சைவம், வைணவம்,
முதலான சமயங்கள் சமகால சமூகத்தில் பெரிதும் பின்பற்றப்பட்டன. அசோகன் புத்த சமயத்தை
தழுவுவதற்கு முன்பு சைவ சமயத்தவனாகவே வாழ்ந்தான்.
“சைவ
சமயத்தவனாக சிவனை வழிபட்ட அசோகன்
கலிங்கப்
போரின் பின்பு புத்த சமயத்தைப் பின்பற்றினான்”
என்று கல்ஹணர் குறிப்பிடுகிறார்.
மேலும் அவன் மக்களின் விடுதலைப் பற்றிக் கூறுகின்ற போது பௌத்த சமயத்தில் கூறப்படுவதினைப்
போல பரிநிர்வாணம் அடைய வேண்டும் என்று கூறவில்லை, அதற்கு மாறாக இந்து சமயத்தில் கூறப்படுவதைப்
போல சுவர்க்கத்தை அடைய வேண்டும் எனவும், சுவர்க்கத்தில் தேவர்களுடன் கலந்து பழக முடியும்
எனவும் கூறுகிறான். இது அசோகன் புத்த சமயத்தை
தழுவிய பின்னும் இந்து சமயத்தில் கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில் அசோகனுக்கு முன்பு
ஆட்சி செய்த சந்திரகுப்தன், பிந்துசாரன், போன்றவர்கள் இந்துக்களாகவே இருந்தனர் எனக்
கருதுவர். இவ் அரசர்கள் திக் விஜயங்களை மேற் கொண்டனர் எனவும் இந்து தர்ம சாஸ்திரங்களின்
படி ஆட்சி நடத்தினர் எனவும் கூறுவர். சந்திர குப்தன் ஆரம்பத்தில் இந்துவாக வாழ்ந்து
வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் சமண சமயத்தை தழுவினான் என்பர். இவர் விஷ்ணு குப்தன்
என்னும் பிராமணின் துணையுடன் மௌரிய ஆட்சியை நிறுவியமையையும் குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில் சிவன், ஸ்கந்தன்,
விசாகன், வாசுதேவன், இந்திரன், வருணன், கங்கை, கிருஷ்ணன், போன்ற தெய்வங்கள் வழிப்படப்பட்டன.
இவர்களுள் சிவன், வாசுதேவ கிருஷ்ணன் போன்ற தெய்வங்களே அதிகமான மக்களால் வழிபடும் தெய்வங்களாக
இருந்ததாக கிரேக்க நூலாசிரியர் “மெகஸ் தனிஸ்” கூறுகிறார் யமுனைச் சமவெளியின் மதுராப்புரிப்
பகுதியில் கிருஷ்ண வழிபாடு இடம்பெற்றமையை ராய்சவுத்திரி
“கிருஷ்ண வழிபாட்டின்
ஆதிதாயகம் யமுனை பள்ளத்தாக்கு :
மெகஸ்தனிஸ், வாசுதேவ
கிருஷ்ணரை நீர் வழி பயணத்திற்குப்
பயன்பட்ட யமுனை
ஆறு பாய்ந்து சென்ற மதுரா, கிருஷ்ணாபுரம்
ஆகிய
இடங்களில் வாழ்ந்து மக்களுடன் தொடர்புபடுத்தினர்.”
என்று கூறுவதனைக் காணலாம். எனவே
கி.மு 4ம் நூற்றாண்டு அளவில் யமுனை நதிக்கரையின் வடமதுரைப் பகுதியில் கிருஷ்ண வழிபாடு
செல்வாக்குப் பெற்றிருந்ததாக கூறுவர். இதுதவிர பஞ்சாப், கத்தியவார் போன்ற இடங்களின்
சில பகுதிகளிலும் கிருஷ்ண வழிபாடு இடம்பெற்றிருக்க வேண்டும். எனினும் இது பற்றி அறிவதற்கு
சமகாலச் சான்றுகளை விடவும் பிற்கால வரலாற்று மூலங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இன்றைய இந்து சமயத்தில் வழிபடப்படுகின்ற
இயற்கைத் தெய்வ வழிபாடுகளையும் மௌரிய காலத்தில் காணலாம். கடல், ஆறு, அக்கினி, நிலம்,
மரங்கள், மலை, மழை, பாம்பு, காடு முதலான இயற்கை பொருட்களும் தெய்வங்கள் எனும் நிலையில்
இக்கால மக்களால் வழிபடப்பட்டன. இத் தெய்வங்களினது விழாக்களின் போது கொடியேற்றப்பட்டு
மந்திர பூர்வமான வழிபாடுகளும் இடம் பெற்றன. இதை தவிர தாயத்துக்களை அணிதல், சகுனம் பார்த்தல்,
பேய் பிசாசுகளில் நம்பிக்கை போன்ற சடங்குகளும் அக்கால மக்கள் மத்தியில் நிலவின.
இந்துத் தெய்வங்களுக்கு ஆலயங்கள்
அமைக்கப்பட்டு, திருவுருவ வழிபாடு நடைப்பெற்றமை பற்றியும் அறியமுடிகிறது. இக்காலத்தில்
வாழ்ந்த சாணக்கியரால் இயற்றப்பட்ட அர்த்த சாஸ்திரம்; சிவன், லஷ்சுமி, குபேரன், ஸ்ரீதேவி,
ஜெயந்தன், அபராஜிதா முதலான கடவுளர்களுக்கு கோயில்கள் இருந்தமையை குறிப்பிடுகின்றது.
கிரேக்க நூலாகிய மலிந்தா பண்கா:
“பௌத்தர்கள்;
இந்துக்கள் உருவ வழிபாடு செய்யும்
கோயில்களுக்கு
செல்வதற்கு அனுமதிக்கப்பட
வில்லை” என்று கூறுகின்றது.
மௌரிய
காலத்திலேயே தோன்றியதாகக் கருதப்படும் இன்னொரு நூலாகிய “மானசாரம்” என்னும் சிற்பசாத்திரம்
12 கோபுரங்கள் வரை ஆலயத்தின் நுழைவாயிலில் அமைக்கலாம் எனக்கூறுகிறது. இவ்வாறு மானசாரம்
கூறுகின்ற விதிமுறைகள் இந்து ஆலயங்களுக்கே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதஞ்சலியின் மகாபாஷ்யம்:
“மௌரிய
அரசர்களே சிவன், ஸ்கந்தன், விஷாகன்
போன்ற
தெய்வங்களின் விக்கிரகங்களை
செய்து
விற்பனை செய்தனர்”
மேலும் மௌரியக் காலத்தில் வேள்விச்
சடங்குகளும் அவை சார்ந்த நம்பிக்கைகளும் பேணப்பட்டன. மௌரிய அரசர்கள் உலகியல் இன்பங்களுக்காகவும்,
போரில் பெற்ற வெற்றிகளுக்காகவும் பல வேள்விகளைச் செய்தனர்.
கிரேக்க நாட்டுக் குறிப்புக்கள்
சந்திர குப்தன் உயிர்களை பலியிட்டு யாகங்களை நடாத்தியதாகக் கூறுகின்றன. ஆகவே மௌரிய
அரசர்களும் புத்த சமயத்தை தழுவுவதற்கு முன் இவ்வேள்விகளை இயற்றினர். அசோகனது கல்வெட்டுக்களில்
இவ்வேள்விகளுடன் தொடர்புடைய செய்திகள் இடம்பெறுகின்றமை இதற்கு தக்கசான்றாக அமையும்.
“விலங்குகளை (தெய்வங்களுக்கு)
காவு (பலி) கொடுத்தல் கூடாது: என்று அசோகனின் 1ம் பாறைக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
இதன் மூலம் சமகாலத்திலும் அதற்கு முற்பட்ட அரசர்களின் ஆட்சியின் போதும் வேள்விகள் இடம்பெற்றதாகவும்,
வேள்விகளில் மிருகங்கள் பலியிடப்பட்டதாகவும் நாம் ஊகிக்க முடிகின்றது. எனவே மௌரிய மன்னர்கள்
அஸ்வமேதம், இராஜசூரியம் போன்ற வேள்விகளை இயற்றினர் எனலாம்.
இக்காலத்தில் வேள்விச் சடங்குகளை
ஆற்றுகின்ற பிராமணர்கள் சமய, சமூக, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் உடையவர்களாக விளங்கினர்.
நந்த வம்சத்தின் இறுதி அரசனாகிய தனநந்தனின் இறப்பிற்கு காரணமாக அமைந்தவனும், மௌரியர்களின்
ஆட்சி தோன்றுவதற்கு காரணமாக அமைந்தவனும் பிரமணனாக உள்ளமை பிராமணர்களின் அரசியல் ரீதியான
செல்வாக்கை காட்டுவதாக உள்ளது. சந்திரகுப்த மௌரியன் ஆட்சியை அமைப்பதற்கு காரணமாக அமைந்த
பிராமணன் “கௌடில்யன்” எனப்படும் “சாணக்கியன்” என்று கருதுகின்றனர். இவன் இயற்றிய அர்த்த
சாஸ்த்திரம் பிராமண சமூகத்தவருக்கு சமூகவியல் அந்தஸ்தினையும் முதன்மைத்துவத்தையும்
வழங்கியுள்ளமையைக் காணலாம். அதாவது கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்
“பிராமணர்கள்
தங்கள் மரபு முறைப்படி வாழ்க்கை
நடாத்துவதை
அரசன் தடை செய்யக் கூடாது, அவர்
களுக்கு
பெரிய தண்டனைகளை வழங்கக்கூடாது.”
என்று அரசர்கள் பிராமணர்களைப்
போஷிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. மேலும் துறவிகளையும், பிராமணர்களையும்
சித்திரவதை செய்யக் கூடாது எனவும் அந்நூல் அறிவுறுத்துவதைக் காணலாம்.
இவை தவிர வேறு பல வரலாற்று மூலங்களின்
மூலமாகவம் இக்காலத்தில் பிரமணர்கள் பெற்ற செல்வாக்கை அறியக்கூடியதாகவுள்ளது. அசோகனது
கல்வெட்டுகளும் பிராமணர்கள் பெற்ற அரச ஆதரவினை வெளிப்படுத்துவனவாக உள்ளன. அசோகனின்
கல்வெட்டு
“உடன்
பிறந்தோர், உறவினர்கள், சமூகத்தார்,
துறவிகள்
நண்பர்கள், வேலையாள்கள், ஏழைகள்,
பிராமணர்கள்,
முதலியோரை அன்போடு பேணிக்
காக்க
வேண்டும்” என்று
குறிப்பிடுகின்றது.
இங்கு மக்களால் பேணப்பட வேண்டியவர்களுள்
பிராமணர்களையும் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவன் தனது 9வது பாறைக் கல்வெட்டில்
மக்களால் பேணப்பட வேண்டிய தர்மங்களுள் ஒன்றாக பிராமணர்களுக்குத் தானம் வழங்க வேண்டும்
என்பதைக் குறிப்பிடுகின்றார். “மந்திரி பரிசித்” எனப்பட்ட மௌரியர்களின் அமைச்சரவையில்
நான்கு உறுப்பினர்களுள் ஒருவனாக அமைந்தமை அரச மட்டத்தில் பிராமணர்களுக்கு இருந்த உயரிய
இடத்தினை காட்டுகின்றது.
இந்து சமயத்தில் நிலைப்பெற்றிருந்த
திருமண முறைகள் பலவும் மௌரிய சமூகத்தில் காணப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இக்காலத்தில்
தோன்றிய அர்த்த சாஸ்திரம் சமகால மக்களிடையே நிலவிய எட்டுவகை திருமண முறைகள் பற்றிக்
கூறுகின்றன.
1) பெண் உறக்கத்தில் இருக்கும் போது மணமுடித்தல்.
2) பலாத்காரமாக கடத்திச் சென்று மணமுடித்தல்.
3) பூசகரைத் திருமணம் செய்தல்.
4) காதலித்து மணமுடித்தல்.
5) பொன் நகைகளுடன் திருமணம் செய்தல்.
6) பிதிர் காரியங்களைச் செய்வதற்காக மணம் செய்தல்.
7) இரு பசுக்களைக் கொடுத்து விட்டு மணமுடித்தல்.
என்பன வைதீக செல்வாக்குகளைக்
காட்டுகின்றன.
இங்கு சமஸ்கிருத மொழியிலேயே இந்த
சமய நூல்கள் அதிகம் தோற்றம் பெற்றுள்ளது. இக்காலத்தில் எழுந்த இந்து சமய இலக்கியங்கள்
சமய, தத்துவம் சார்ந்தவையாக காணப்படுகின்றன. இதிகாசங்களுள் ஒன்றாகிய மகாபாரதத்தின்
காலத்தை கி.மு 4 - கி.பி 4 வரை ஏற்றுக் கொள்கின்றனர். இதற்கமைய மௌரிய காலத்தில் இந்நூல்
தனது ஆரம்பக் கருவை பெற்றிருக்க முடியும் என்று ஆய்வாளர் கருதுவர். அது போலவே பதினெண்
புராணங்களுள் சில மௌரிய காலத்திற்குரியனவாக கருதப்படுகின்றன.
“நந்தர்கள்
கீழ் சாதியினராவர், அக்காரணத்தால்
பிரமணனான
கௌடில்யரால் அழிக்கப்பட்டு சந்திர
குப்தரை
தலைவராகக் கொண்ட புராணங்கள்
பேரரசு
ஏற்படுத்தப்பட்டது என்று புராணங்கள்
கூறுகின்றன. குறிப்பாக விஷ்ணு
புராணம் இதனைப் பற்றிச் சிறப்பாக கூறுகிறது.
அர்த்த சாஸ்திரத்துடன் தொடர்புடைய
மற்ற நூலாகிய மனுதர்ம சாஸ்த்திரமானது சிறப்பானதாகவும், இந்நூல் ஆசார காண்டம், வியபகார
காண்டம், பிராயச்சித்த காண்டம் எனும் 3 காண்டங்களையும், 6 வர்ணாச்சிரம் தருமக் கோட்பாட்டினையும்
அது சார்ந்த வாழ்க்கை முறைகளையும், வைதீக மரபின் அடிப்படை சட்ட விதிகளை கூறும் நூலாகவும்
காணப்பட்டது.
இக்காலத்தில் ஜைமினி வேதங்களின்
கரும காண்டப் பொருளை அடிப்படையாக கொண்டு மீமாம்ச சூத்திரங்களையும், பாதராயணர் வேதத்தின்
ஞானகாண்டப் பொருளை குறிப்பாக உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு பிரம்ம சூத்திரங்களையும்
இயற்றினர். ஆகவே மௌரிய காலத்தில் எழுந்த இவ்விரு நூல்களும் இந்து தத்துவ மரபின் இருவேறு
பரிமாணங்களாகவுள்ளன.
அதாவது மீமாம்ச சூத்திரங்கள்
வேதங்கள் கூறுகின்ற வேள்விகளுக்கு முதன்மை அளிக்கும் பூர்வமீமாம்சை எனும் தரிசனத்தின்
விளக்கமாக உள்ளன.
இந்து மரபுடன் தொடர்புடைய கட்டட,
சிற்பக் கலைகளின் வளர்ச்சி தொடர்பாகவும் அறியக் கூடியதாகவுள்ளது. புதைபொருள் சான்றுகளை
விடவும் இலக்கிய ஆதாரங்களை வைத்தே அறிய முடிகிறது.
•
மலிந்த
பண்கா என்னும் கிரேக்க இலக்கியம் இந்து ஆலயம் பற்றிக் கூறுகின்றமை
•
அர்த்த
சாஸ்திரம் இந்துக் கடவுளருக்குரிய ஆலயங்கள் பற்றி கூறுகின்றமை மூலம் அறிய முடிகின்றது.
இக்காலத்திலேயே மானிடராய் தோற்றம்
பெற்ற புத்தபெருமான் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றாக கருதப்பட்டது. இந்துமத படிமங்களைப்
போன்று அதுவும் வணங்கப்பட்டது. இவ்வாறு அனைத்து துறையிலும் மௌரியர் காலத்தில் வைதீக
சமயம் தனது இருப்பை நிலைநாட்டியது எனலாம். பௌத்த சமயம் பெருவளர்ச்சிக் கண்டாலும் அதற்கு
அடிப்படைக் காரணமாக வைதீக சமயங்கள் காணப்பட்டன.
முடிவுரை
வைதீக நெறிக்காலம் மௌரிய காலத்திற்கு
முன்பும் சிந்துவெளி நாகரிகத்திற்கு பின்பும் கி.மு 1500 இல் இருந்து ஆரம்பித்ததாக
நம்பப்படுகின்றது. பௌத்த சமயத்தின் செல்வாக்கு இருந்த இக்காலத்தில் அச் சமயத்திற்கு
நிகராக வைதீக சமயமும் மக்கள் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ளது. மன்னர்களின் ஆதரவின்
மூலம் வைதீகச் சமயம் வளர்க்கப்பட்டு வந்தன. பிராமணர்களுக்கு ஆதரவு வழங்கல், வேள்விச்
சடங்குகள் செய்தல், ஆலய வழிபாடு, இக்காலத்தில் தோற்றம் பெற்ற நூல்களில் ஆலயம் கட்ட
வேண்டிய முறை கூறுதல், என வைதீக சமயங்களான இந்து சமயமும், வைணவ சமயமும் மக்கள் மத்தியில்
உயர்ச் செல்வாக்கு அடைந்தமைக்கு மன்னர்களின் ஆதரவு முக்கிய இடம் வகிக்கின்றது. இவ்வாறு
மன்னர்கள் வைதீக சமயத்தை வளர்க்க காரணம் சைவ, வைணவ சமயத்தின் மீதான பற்று என்றேக் கூற
வேண்டும்.
உசாத்துணை
1.
கமலநாதன்,
செ., 2007, இந்து பண்பாட்டு வரலாறு, ராஜா புத்தக நிலையம், பக் 41-65.
2.
சொக்கலிங்கம்,
க., 2009, இந்து நாகரிகம், குமரன் புத்தக நிலையம், பக் 61-68.
3.
நிகாம்,
என். ஏ., 1889, அசோக சாசனங்கள், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
4.
Coningham,
Robin; Young Ruth., 2015, The Archaeology of Soth Asia From the Indus to Asoka,
C.6500 BCE-200Ec CE, Cambridge University Press, PP-451-466.
5.
Smith
Vincent., 1920, The oxford History of India : From the Earliest Times to the
End of 1911, macmillian & company, P.104.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக