சைவத்தின் நீதி நூல்கள் எடுத்துரைக்கும்
ஒழுக்கவியல்
சிவோகா சிவலிங்கம் B.A ( Hons),
மட்டக்களப்பு,
இலங்கை.
முன்னுரை
நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்தல் ஒழுக்கமாகும். மனித வாழ்வு சிறக்க ஒழுக்கம்
துணை செய்கின்றது. சமூகத்துடன் இணைந்து வாழ்கின்ற மனிதன், அச்சமூகத்தினால் ஏற்றுக்
கொள்ளப்பட்ட ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்தல் அவசியம். ஏனெனில் தனிமனித ஒழுக்கம்
சமூகத்தின் பண்பாட்டினையே மாற்றமடையச் செய்யும். சைவ சமயமானது ஒழுக்கத்தை முதன்மைப்படுத்துவதுடன்,
நல்நடத்தையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்டது. சைவ சமய நிறுவனங்கள்
நீதியைப் பரப்ப முனைந்ததனால், சைவ நீதிநூல்கள் தோற்றம் பெற்றன. அவை ஒழுக்கவியல் தொடர்பான
கருத்துக்களை எடுத்துரைத்தன. இக் கட்டுரையானது, திருக்குறள், ஆத்திசூடி, நல்வழி, கொன்றை
வேந்தன், நன்னெறி முதலான சைவ நீதி நூல்களில் கூறப்பட்ட ஓழுக்கவியல் கருத்துக்களைக் கூறுவதாக அமைந்துள்ளது.
திருக்குறள் கூறும் ஒழுக்கம்
அறநூல்களில் தலை சிறந்ததாகப் போற்றப்படுவது திருக்குறள், திருக்குறளில் ஒழுக்கமுடைமை
என்ற அதிகாரத்தினூடாக திருவள்ளுவர், ஒழுக்கவியல் கருத்துக்களைக் கூறியுள்ளார். ஒருவர்க்கு
உயர்வை அளிக்கக் கூடியது ஒழுக்கம் என்பதனால் அந்த ஒழுக்கம் உயிரை விட மேலானதாகப் போற்றப்படுகிறது
என்றும் இத்தகைய ஒழுக்கத்தை வருந்தியேனும் காக்க வேண்டும் என்றும் ஒழுக்கமே உயிருக்குத்
துணையாக அமையும் என்றும் வலிறுத்தியுள்ளார்.
“ ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
“ பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை”
ஓழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த
குடிப்பிறப்பின் தன்மை, ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மை, பிறப்பால் வந்த உயர்வும்
ஒழுக்கத்தை தவறுகின்ற போது இல்லாமல் போய்விடும், பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாததைப்
போல ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலிலும் உயர்வு இல்லை, போன்ற கருத்துக்களை பின்வரும்
குறட்பாக்கள் உணர்த்துகின்றன.
“
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த
பிறப்பாய் விடும்”
“ மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம்
குன்றக் கெடும்”
“ அழுக்காறு றுடையான்கண் ஆக்கம் போன்றுஇல்லை
ஒழுக்க
மிலாக்கண் உயர்வு”
ஓழுக்கம் குன்றினால் ஏற்படும் குற்றங்களையும்
திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஓழுக்கம்
தவறுவதால் குற்றம் உண்டாவதை அறிந்;து மனவலிமை உடைய சான்றோர், ஒழுக்கத்தில் தவறாமல்
தம்மைக் காத்துக் கொள்வர். ஒழுக்கத்தினால் எல்லோரும் மேன்மை அடைவார்கள் ஒழுக்கக் கேட்டால்
அடையத் தகாத பழியை அடைவார்கள், நல்ல ஒழுக்கமானது இன்பமான வாழ்வுக்கு வித்தாக அமையும்,தீய
ஒழுக்கம் எக்காலத்திலும் துன்பத்தைக் கொடுக்கும்.
“
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம்
படுபாக் கறிந்து”
“
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர்
எய்தாப் பழி”
“
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும்
இடும்பை தரும்”
ஒழுக்கம் உடையவர்கள் தவறியும் தகாத சொற்களைக் கூறமாட்டார்கள். உலகத்தவரோடு ஒழுக்கம்
எனும் பண்போடு, வாழக் கற்காதவர்கள் பல நூல்களைக் கற்றும் அறிவில்லாதவர்களே.
“
ஒழுக்கம் முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்”
“
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்”
ஆத்திசூடி கூறும் ஒழுக்கம்
ஒளவையாரால் இயற்றப்பட்ட ஆத்திசூடியில்
ஒழுக்கம் பற்றிய சிந்தனைகள் கூறப்பட்டுள்ளன. நல்லொழுக்கத்துக்கு எதிரான செயல்களைச்
செய்யாதே என்றும் அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும் என்றும் அறிவொழுக்களில் நிறைந்த
பெரியோர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்றும் ஒழுக்கம் தவறாமல் நடக்க வேண்டும் என்றும் தகாத பெண்களுடன் உறவு கொள்ளாமல்
விலகி நில் என்றும் அறிவுரைகளாக ஒழுக்கத்துடன் வாழ்வதை வலிறுத்தியுள்ளார்.
“ இயல்பு அல்லாதன செய்யேல்”
“ சக்கர நெறி நில்”
“ சான்றோ ரினத்திரு”
“ நேர்பட வொழுகு ”
“ மைவிழியார் மனையகல்”
போன்ற ஆத்திசூடி அடிகள் மேற்குறித்த
ஒழுக்கவியல் கருத்துக்களை வெளிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
பாரதியார் இயற்றிய ஆத்திசூடியிலும் ஒழுக்கம்
பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஒழுக்கம் சார்ந்த நெறியைப் பின்பற்றுவதை ஒருபோதும் கைவிடாதே
என்பதை “ நோற்பது கைவிடேல்” என்ற ஆத்திசூடி அடியும் செய்யும் எந்த ஒரு செயலிலும் ஒழுக்கத்தைப்
பின்பற்று என்பதை “ ரீதி தவறேல்” என்ற அடியும் எடுத்துரைக்கின்றன. பாரதிதாசனும் இயற்றிய
ஆத்திசூடியில், ஒருவர்க்கு நோய் ஏற்படுவதற்குக் காரணம் அவரோ அல்லது அவரது பெற்றோரோ
முன்னர் கொண்ட கெட்ட நடத்தை எனக் கூறியுள்ளார். “நோய் தீ ஒழுக்கம்” என்பதனூடாக சுகவாழ்வுக்கு நல்லொழுக்கம் வேண்டும்
எனக் கூறியுள்ளார்.
நல்வழி கூறும் ஒழுக்கம்
ஒளவையார் இயற்றிய நல்வழி எனும் நீதி
நூலிலும் மக்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்;டிய ஒழுக்க நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
சிறந்த பெண்ணின் குணத்தையோ பெருமையையோ, அவளது கற்பு நெறி மாறாப் பண்பினால் அறியமுடியும்
என்று உணர்த்தியுள்ளார்.
“
பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி”
ஒருவர் உயர் குலத்தில் பிறந்தாலும் நல்லொழுக்கம்
ஒன்றே வேண்டப்படுகிறது.
“
உயர்குலத்தில் பிறந்து, ஒழுக்கம் தவறுவதை விட உயிரை விடுவது நன்று”
தவறு செய்தால் பழி உண்டாகும் என்றும்
அச்சங் கொள்ளாது, தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது என்றும்
கூறப்பட்டுள்ளது.
“இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சாலும்
ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கங்சாத
தாரத்தின் நன்று தனி”
தனி மனித ஒழுக்கம் தவறுவதனால் ஏற்படும் இழிவுகளையும் நல்வழி நேரிசை வெண்பா எடுத்துரைக்கின்றது.
ஒருவர் ஒழுக்கம் தவறும் போது, கல்வி, பதவி, பண்பு நலன்கள், நற்பெயர்,புகழ், செல்வம்
ஆகியவை கெட்டுவிடும். நண்டு, முத்துச்சிப்பி, மூங்கில், வாழை அவை அழியும் காலம் வந்தவுடன்
கன்று ஈனும். கன்று வருவதை வைத்து அவை அழியும் காலம் வந்து விட்டது என்று அறியலாம்.
அது போல ஒருவனுக்கு கல்வி, பதவி, பண்பு, பெயர், புகழ், செல்வம் ஆகியவை அழியும் வேளை
வருவதை, அவர் பிறர் மனையைப் பார்க்கத் தொடங்கியதில் இருந்து அறியலாம்.
“ நண்டுசிப்பி
வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கை போல்
ஒண்டொடீ
போதந் தனங் கல்வி பொன்ற வருங்
காலம் அயல்
மாதர் மேல் வைப்பார் மனம்”
கொன்றைவேந்தன் கூறும் ஒழுக்கம்
கொன்றைவேந்தன் என்ற நீதி நூலிலும் ஒளவையார் ஒழுக்கம் பற்றிக் கூறியுள்ளார்.
ஒழுக்கமானது, வேதத்தைப் பாராயணம் செய்வதை விடச் சிறந்தது என்றும் சுயகட்டுப்பாட்டுடன்
இருத்தலே பெண்களுக்கு அழகு என்றும் சிறந்த நூல்களைக் கற்று ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள
வேண்டும் என்றும் பிறர் மனைவியை விரும்பாமல் இருத்தல் சிறந்த அறம் என்றும் தகாத பெண்களுடன்
ஒதுங்கி இருக்கவேண்டும் என்றும் படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது என்றும்
வலியுறுத்தியுள்ளார்.
“ ஓதலின்
நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்”
“ காவல் தானே பாவையர்க்கு அழகு”
“ நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு”
“ பிறன் மனை புகாமை அறம் எனத்தகும்”
“ மைவிழியார் தம் மனை அகன்று ஒழுகு”
“ ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்”
நன்னெறி
கூறும் ஒழுக்கம்
சிவப்பிரகாச சுவாமிகளால் இயற்றப்பட்ட நன்னெறியில் பெண்களுக்கான ஒழுக்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பலகாலம் எறும்பு ஊரக் கல் குழிந்துவிடும். அதுபோல ஆண்களுடன் பேசிக் கொண்டிருந்தாலே,
பெண்களுக்கு பெருமையளிக்கும் கற்பு எனும் நோன்பு கொள்ளும் நெஞ்சுறுதி இல்லாமல் போய்விடும்
என்பதனைப் பின்வரும் பாடல் மூலம் எடுத்துக் கூறியுள்ளார்.
“
பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி துர நெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும் பூரிக்கின்ற முலைப் பேதாய்
பல கால்
எறும்பு ஊரக் கல் குழிந்து விடும்”
ஒழுக்கத்தைப் பேணுவதற்கான நற்பண்புகள்
சைவ நீதி நூல்களில் ஒழுக்கத்துடன் வாழ்வதற்காக, பின்பற்ற வேண்டிய நற்பண்புகளும்
எடுத்துரைக்கப்பட்டுள்ளன. திருக்குறளில் அன்புடைமை, இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல்,
அடக்கமுடைமை, பொறையுடைமை, புறங்கூறாமை, தீவினையச்சம், ஈகை, அருளுடைமை, வாய்மை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, குற்றங்கடிதல்
போன்ற அதிகாரங்களில், நற்பண்புகளை வள்ளுவர் கூறியுள்ளார்.
இனிய சொற்களைப் பேசுவதையே அறம் என்றும் பொய்யாமை
போல புகழ் தருவது, எதுவும் இல்லை என்றும் அதில் தளராமல் உறுதியாய் இருப்பது ஒருவனுக்கு
எல்லா அறத்தின் சிறப்பையும் தரும் என்றும் வள்ளுவர் உணர்த்தியுள்ளார்.
“
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்”
“
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்”
நன்னெறியில் கோபத்தை அடக்கல், அறம் செய்தல், நல்லவர்களுடன்
நட்புக் கொள்ளல் போன்ற பண்புகள் கூறப்பட்டுள்ளன.
“…
உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம்
காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க”
“…..
உள்ளங் கனிந்து அறம் செய்து உய்கவே”
“……
நல்லார் செய்யும் கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே”
கொன்றைவேந்தனில், பல நற்பண்புகள் கூறப்பட்டுள்ளன. இனிமையாகப் பேசுதல், எந்நிலையிலும்
மனந்தளராதிருத்தல், இறை வழிபாடு, அனைத்து தீமைகளிலும் விலகியிருத்தல், புலாலுண்ணுதல்,
கொலை,திருடு மூன்றையும் செய்யாதிருத்தல் போன்றவை குறித்துக் கூறப்பட்டுள்ளன.
“
கீழோர் ஆயினும் தாழ உரை”
“
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை”
“
வைகல் தோறும் தெய்வம் தொழு”
“
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்”
“
புலையும் கொலையும் களவுந் தவிர்”
பாரதியும் புதிய ஆத்திசூடியில் கொடுத்து வாழல், உயர்வானவற்றை எண்ணுதல், புலன்களை
அடக்கி வாழ்தல், ஒற்றுமையுடன் வாழல், நல்லதைக் கற்று வாழ்வில் கடைப்பிடித்தல், தவறுகளை
எதிர்த்தல், நல்ல நட்பையும் உறவையும் பேணல், கீழான முறையில் நடக்காதிருத்தல், தீமை
செய்வோருக்கு அஞ்சாமல் வாழல், தீய எண்ணங்களை மனதில் அகற்றல், அநீதிகளை அகற்றல் முதலான
நற்பண்புகளை எடுத்துக் கூறியுள்ளார்.
“ ஈகை திறன்” , “ எண்ணுவது உயர்வு”,
“ ஐம்பொறி ஆட்சிகொள்” , “கொடுமையை எதிர்த்து
நில்” , “ ஞேயங் காத்தல் செய்” , “ தாழ்ந்து நடவேல்” , “ தீயோர்க்கு அஞ்சேல்”,
“நையப் புடை” , “ ரௌத்திரம் பழகு”
பிறருக்கு நன்மை செய்து வாழல், கொடுத்து வாழல் முதலான பண்புகளை நல்வழி எடுத்துரைத்துள்ளது.
“தீதொழிய நன்மை செயல்”
“
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து”
“
இட்டு உண்டு இரும்”
“
……… ஆவிதான் போயின பின் யாரே அனுபவிப்பார்
பாவிதான்
அந்தப் பணம்”
முடிவுரை
ஒரு பண்பாட்டின் நிலைப்பிற்கும் சிறப்பிற்கும் காரணமாக அமைவது நல்லொழுக்கமாகும்.
இத்தகைய ஒழுக்கம், மனித வாழ்வுக்கும் உறுதுணையாக அமைகின்றது. ஒழுக்கத்தினை, சைவ நீதி
நூல்கள் அறிவுரைகள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளன. அவை, மனிதன் ஒழுக்கத்தைப்
பின்பற்றி வாழ்வதால் ஏற்படும் நன்மைகளையும் ஒழுக்கத்திலிருந்து தவறி நடப்பதால் ஏற்படும்
தீமைகளையும் எடுத்துக் கூறி சமூகத்தை நல்வழிப்படுத்த முனைந்துள்ளன. அத்துடன் ஒழுக்கத்தைப்
பேணுவதற்காகப், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய விழுமியங்களையும் எடுத்துக் கூறியுள்ளன.
ஒவ்வொரு மனிதனும் தனி மனித ஒழுக்கத்தைப் பேணுவதுடன் தான் வாழும் சமூகத்திற்குப்
பொருத்தமானவற்றைச் செய்வதும் அவசியம். எனவே, சைவ நீதி நூல்கள் எடுத்துரைக்கும் ஒழுக்கவியல்
சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை பின்பற்றி வாழ்தல் அவசியம். ஒழுக்கத்தைப் பின்பற்றி
வாழும் போது, ஒருவரது தனிப்பட்ட வாழ்வையும் பிறரது வாழ்வையும் நன்றாக அமைத்துக்கொள்ள
முடியும்.
உசாவியவை
1.
ராமஸ்வாமி
நாயுடு, 1906, கொன்றை வேந்தன் மூலமும் விருத்தியுரையும், பண்டிதமித்திர யந்திரசாலை.
2.
வரதராசனார்.மு,
2019, திருக்குறள் மூலமும் உரையும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
3.
வேங்கடசாமி
நாட்டார். மு, 2010, நல்வழி, பத்மம் பதிப்பகம்.
4.
https://www.
chennailibrary.com
5.
https://www.scribd
.com
6.
https://www.bdu.ac.in
7.
https://www.avvaiyar-
vaalviyal.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக