6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 மே, 2025

தாயில்லா மகன் - முனைவர் பீ. பெரியசாமி

 

தாயில்லா மகன்

1. பசி நேரத் துயரம்

பசிவந்த நேரத்துப் பால்சோறு ஊட்ட

அசிபசி தீர்க்கும் அமுதம் - நசிந்தே

தனித்து வருந்தும் தனயன் துயரம்

இனித்த தாய் இல்லா இடர்.

2. பாதுகாப்பு இல்லா நிலை

நிழலில்லா மரம்மேல் நிலைகொண்ட பறவை

அழகில்லா வாழ்வும் அதுவே - விழியிமைபோல்

காக்கின்ற தாயை இழந்த மகனவன்

நோக்கின்ற திசையெலாம் நோய்.

3.  ஆறுதல் தேடல்

அழுத கண்ணீரைத் துடைக்கவே ஆளில்லை

தொழுத தெய்வமும் தோன்றவில்லை - மழுங்கிய

கத்தியாய் உள்ளம் கலங்குமே தாயினைப்

பிரிந்த மகனின் நிலை.

4. அன்பு வறட்சி

அன்பெனும் ஊற்றார்ந்து அணைத்திடும் தாய்மடி

இன்பம் இழந்தவன் ஏங்குகிறான் - துன்பம்

கடலாய் எழவே கலங்கித் தவிக்கும்

உடலாய் உயிர்நீத்த ஊன்.

5. உலகத்தின் பார்வை

தாயிருந்தால் உலகம் தலைவணங்கும் தானென்றும்

வாயிருந்தால் சோறு வரும் - போயினாளே

கண்ணான அன்னை கவலைக் கடலினிலே

பெண்ணின் மகனே பிணி.

6.  கனவில் வரும் அன்னை

கனவில் வருகின்ற காரிகை அன்னை

நனவில் மறைவதுதான் ஏனோ? - மனமது

வெந்து உருகுமே மெல்லவே தாயினை

முந்து இழந்த மகன்.

7. திருவிழாக் காலம்

வீதித் திருவிழா வேடிக்கை பார்த்திட

ஆதித் தாயில்லை அருகினிலே - நீதி

இறைவா இதுவோ? இளமையிலே அன்னையை

பிரிந்த மகனின் பிழை.

8. தனிமையின் கொடுமை

கூடி விளையாடும் கூட்டத்தில் இருந்தாலும்

தேடித் துடிக்குமே நெஞ்சம் - ஓடிவந்து

முத்தமிடும் தாயை இழந்த மகனுக்கு

நித்தம் தனிமை நிலை.

 

9. வழிகாட்டுதல் இன்மை

தடுமாறி வீழும் தளர்நடைக் காலத்தில்

கைதூக்கி விட்டவள் எங்கே? - மெய்வருந்தக்

காக்கும் தாயில்லாக் கவலையினால் இவ்வுலகம்

பார்க்கும் மகனுக்குப் பாழ்.

10.          முடிவிலாத் தேடல்

மண்ணில் பிறந்ததற்கே சாட்சியாய் நின்றவள்

விண்ணில் மறைந்ததே விந்தை - கண்ணின்

மணியை இழந்த குருடனைப் போலத்

தாய்இல்லாச் சேயவன் தான்.

கருத்துகள் இல்லை: