6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

காதலே காதலாய் - முனைவர் பீ. பெரியசாமி

 

காதலே காதலாய்

கண்ணே உனது கனிமொழியும் காதலால்

எண்ணத்தில் நின்றே இனிக்குதே - வண்ணப்

புதுமலரே உன்னைப் பிரியாது நெஞ்சில்

பதுக்கி வைத்தேன் பாராய் பரிந்து.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும் இந்நோய் - மேலையோர்

கண்டறியா இன்பம் கசிந்துருகி நெஞ்சுள்ளே

உண்டாவ தன்றோ உணர்வு.

மையெழுதும் கண்ணும் மயிலன்ன மென்நடையும்

பொய்யல்ல மெய்யே புகலுகிறேன் - தையலே

உன்முகம் பார்த்தால் உலகமே தோற்கிறதே

என்முகம் நோக்குவாய் இன்று.

வண்ணத் தமிழும் வடிவான உன்முகமும்

கண்ணில் கலந்தே களிக்கின்றேன் - எண்ணத்தில்

தேனாக ஊறும் திகட்டாத காதலால்

வானாகி நின்றாய் வளைந்து.

சித்திரப் பெண்ணே சிரிக்கும் எழிலரசி

முத்திரை வைத்தாய் முகத்தினில் - நித்தமும்

உன்னையே எண்ணி உருகுகின்றேன் உள்ளுள்ளே

நன்னையே நீயும் நயந்து.

 

முல்லை நகையும் முகத்தினில் வெண்நிலவும்

எல்லை இல்லா உன் பேரெழிலும் - மெல்லவே

என்னுயிரைக் கொள்ளை இடுகின்ற தேயடி

கண்மணி நீயே கதி.

மின்னும் விழியும் மிதமான புன்னகையும்

உன்னதக் காதலை ஊட்டவே - என்னுள்

புகுந்தாய் புதியதொரு பூங்காற்றாய் வந்து

தகுந்தாய் தளிர்வாழைத் தண்டு.

சொல்லும் சொல்லில் சுகமான இன்னிசையும்

வெல்லும் விழியின் கடைப்பார்வை - மெல்லவே

என்னுள் விதைத்ததே ஏகாந்தக் காதலினை

அன்னமே உன்னருளைத் தா.

நீயே பிரிந்தால் நிலவும் தணலாகும்

சேயைப் பிரிந்ததொரு தாய்போல - நாயகி

நொடிப்பொழுதும் உன்னை நினையாத நாளில்லை

துடித்தே கிடக்கும் துணிந்து.

வாடை வீசும் வசந்தமும் கசக்குதே

கூட நீயின்றித் தனிமையில் - ஆடையின்

வாசனை தேடும் வறிதான என்நெஞ்சம்

வீசும் உன்கூந்தல் விரை.

 

 

 

கண்ட பொழுதே கலந்திட்ட காதல்இது

உண்டோ பிரிவென்று உரைப்பாயோ - விண்டே

மறையாது நின்றென்றும் மன்பதையில் வாழும்

இறையருள் போன்ற திது.

தூக்கம் தொலைத்துத் துயரம் சுமக்கின்றேன்

ஏக்கம் எனக்கோர் இடியாகும் - தாக்கமும்

நீயின்றிக் காணும் நிழலுலகில் வாழ்கின்றேன்

நீயின்றிக் காதலிலை நேர்.

கண்ணீர்த் துளியும் கனத்ததொரு நெஞ்சமும்

விண்ணைத் தொடும்உன் நினைவுகளும் - என்னுள்ளே

ஆறாத காயமாய் ஆக்கினையே செய்கின்ற

மாறாத காதலே மன்.

கனவில் வருவாய் கரம்நீட்டி நிற்பாய்

நனவில் மறையும் நளினமே - வினையே

உன்னை அடைவதற்கு உள்ளுயிரும் வாடுதே

என்னை எனக்களிப்பாய் இன்று.

நிலவில் உந்தன் நிழலினைத் தேடியே

அலைகின்றேன் அன்பே அநிச்சமே - மலைபோல்

துயரம் சூழ்ந்தால் துடிப்பேனோ நானும்

துயர்நீக்க நீயே துணையாகு.

 

 

 

பிரிவு என்பது பேரிடி போன்றதே

அறிவு மழுங்கி அலைவேன் - நறவே

உனைக்கண்டால் மீண்டும் உயிர்மீளும் என்னுள்

நினைவை நீங்காது நில்.

உடல்இரண்டு ஆவி ஒன்றென்றே வாழும்

அடல்மிகும் காதலே ஆதி - கடல்போல்

ஆழமும் அற்றே அளவிலா இன்பத்தை

சூழத் தருமே சுகம்.

காலம் மாறினும் காதல் மாறாதே

கோலம் மாறினும் கொள்கை - மாறாதே

என்றும் உனக்கே உரிமையாவேன் என்னுயிரே

மன்றுரைப்பேன் வானோர் மகிழ்ந்து.

பூவும் மணமும் பிரிந்திடக் கூடுமோ

நாவுஞ் சுவையும் நவிலுங்கால் - நீயும்

நானும் பிரியோம் நவில்தோறும் இன்பந்தரும்

தேனும் தமிழும் திகழ்ந்து.

வாழும் வரையில் வசந்தமே உன்னோடு

ஏழும் பிறவியில் இன்பமே - சூழும்

இடையூறு யாவும் இனிதே கடந்தே

நடையிடுவோம் காதலில் நாம்.

 

 

 

நெஞ்சில் உன்னை நிறுத்திக் கொண்டேன் இனி

வஞ்சனை ஏதும் வருமோ - துஞ்சும்

பொழுதும் உனது புகழ்பாடு வேனே

தொழுவேன் உனைநித்த மும்.

உனக்கும் எனக்கும் உறவுண்டே அன்று

எனக்கும் புரியவில்லை இன்று - மனப்பார்வை

ஒன்றாகிப் போன உன்னதமே காதலாய்

நின்றாயே நீயென் நிலா.

வானத்து மீன்கள் மறைந்துமே போகலாம்

கானத்து வண்டுகள் காணாமல் - போனாலும்

என்னுள் நீயிருப்பாய் என்றுமே சாகாத

மன்னவனே உந்தன் மணம்.

சிறகுகள் இல்லாச் சிற்றுயிரும் காதலால்

பறக்கும் வானில் படர்ந்து - உறக்கம்

மறந்தே உனக்காக வாழும் என்நெஞ்சம்

அறந்தேடும் காதலால் ஆய்ந்து.

வெண்பாச் சுவையாய் விழுமிய காதலை

கண்பால் உணர்ந்தோம் கவித்துவமாய் - பண்பார்ந்த

வாழ்க்கைப் பயணம் இனிதே தொடரட்டும்

வாழ்கவே காதல் வளர்ந்து.

கருத்துகள் இல்லை: