6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

முருகன் அருள்மாலை நூறு - முனைவர் பீ. பெரியசாமி

 

முருகன் அருள்மாலை நூறு

 

காப்பு மற்றும் உருவச் சிறப்பு

   வாக்குக் கடந்து மனதைக் கவர்ந்தருளும்

   ஆக்கூர் அமர்ந்த அறுமுகவன் - நோக்கும்

   இணையடிகள் போற்றி இசைக்கின்றேன் நூறு

   துணையெனவே வந்துத் தொடர்.

வாக்குக் கடந்து: முருகன் சொல்லுக்கும் மனதிற்கும் எட்டாதவன். ஆக்கூர் (திருவாக்கூர்) தலத்தில் அமர்ந்த அவனை 100 பாடல்களால் துதிக்கத் தொடங்குகிறேன்; அவன் துணையாக இருக்க வேண்டும்.

  நெற்றிக் கண்ணின் நெருப்புப் பொறையறுக்கும்

   சுற்றிய தேவர் துயர்நீக்க - உற்ற

   சரவணப் பொய்கையிலே சண்முகனாய்த் தோன்றி

   பரவொளியாய்ப் பூத்தப் பகலவன்.

நெற்றிக் கண்ணின்: சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகி, பின் ஒன்றாக இணைந்தபகலவன்’ (சூரியன்) போன்ற ஒளியைக் குறிக்கிறது.

  ஆறு முகமும் அழகிய பன்னிருகை

   ஈறு மிலாத எழில்மேனி - கூறுமே

   பன்னிரு திண்டோள் பகைகொல்லும் வேலவன்

   சந்நிதியே முக்தித் தலம்.

ஆறு முகமும்: ஆறு முகங்களும் பன்னிரு கைகளும் கொண்டு, பகைவர்களை ஒடுக்கி அடியார்க்கு முக்தி அளிக்கும் திருவுருவச் சிறப்பு.

   தந்தைக்கும் மேலாகத் தத்துவத்தைச் சொல்லியவன்

   சிந்தை மலரச் செய்பவன் - விந்தைப்

   பிரணவத்தின் உட்பொருளைப் பேசத் தெரிந்த

   அருணகிரி போற்றும் அறம்.

தந்தைக்கும் மேலாக: 'ஓம்' எனும் பிரணவப் பொருளைத் தந்தைக்கே (சிவன்) உபதேசித்த ஞானக் குருவாக முருகன் போற்றப்படுகிறான்.

  கூரிய வேலே குலதெய்வம் எங்கட்கு

   மாரி நிகராய் அருள்வழங்கும் - சீரி

   யவிழ்ந்த பகைவனை அஞ்சாது வீழ்த்தும்

   தவப்பயனாய்க் கிட்டும் தரம்.

கூரிய வேலே: வேல் என்பது வெறும் ஆயுதம் அல்ல; அது நம் அறியாமையை நீக்கி, பகைவனையும் நண்பனாக்கும் தவப்பயன்.

  வானத்து மேகம் வழிகாட்டும் தோகைமயில்

   ஆனந்தக் கூத்தாடும் அண்ணலே - வானவர்

   கண்டு வியக்கும் கதிர்மணி வாகனன்

   உண்டு நமக்கோர் துணை.

வானத்து மேகம்: மயில் வாகனத்தில் வரும் முருகன், தேவர்களே வியக்கும் ஒளியைக் கொண்டவன். அவன் நமக்கு எப்போதும் துணையாக இருக்கிறான்.

 

அறுபடை வீடுகள்

 

   மண்ணுலகோர் போற்றும் மதுரையம்பதி தன்னில்

   விண்ணுலகோர் மெச்சும் வியப்பவன் - குன்றத்துப்

   பரங்குன்றில் வீற்றிருக்கும் பாலகன் பாதம்

   உரமாய் அமையும் உளம்.

பரங்குன்றம்: மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை மணந்து அமர்ந்த கோலம், நம் உள்ளத்திற்கு வலிமை தரும்.

   கடல்அலைகள் தாலாட்டும் காட்சியினில் செந்தூர்

   அடல்வடிவேல் ஏந்தும் அழகன் - இடர்தீர்க்கும்

   சந்திர சூடன் தனயன் எமையாளும்

   செந்தூரன் பாதமே திக்கு.

திருச்செந்தூர்: அலைகடல் ஓரம் வேல் ஏந்தி நிற்கும் செந்தூரன், நம் வாழ்வில் வரும் இன்னல்களைத் தீர்க்கும் ஒரே திக்காக விளங்குகிறான்.

  கோவணமே ஆடையாய்க் கொண்டவன் ஆண்டியாய்

   ஆவணமே செய்யும் அருட்குமரன் - பாவனையாய்ப்

   பழநி மலைமேல் பரஞ்சுடராய்த் தோன்றும்

   குழனி முகத்தவன் குறி.

பழநி: ஞானப் பழத்திற்காக உலகத்தையே துறந்து ஆண்டிக் கோலம் பூண்டவன். இவன் 'பரஞ்சுடர்' (பேரொளி) போன்றவன்.

  சுவாமி மலைதன்னில் சொல்லிய ஓங்காரம்

   பூமி முழுதும் புகழாரம் - நாமமே

   நாதமாய் நெஞ்சில் நயமுடன் தங்குமே

   போதமாய் நின்றப் பொன்.

சுவாமிமலை: பிரணவ மந்திரத்தை உபதேசித்த தலம். இங்கு முருகன் 'நாதம்' (ஒலி) மற்றும் 'போதம்' (அறிவு) ஆகிய இரண்டாகவும் இருக்கிறான்.

   சினம் தணிந்தே அமர்ந்த செவ்வேள் மலைமேல்

   மனம் தணியும் மாண்பு தரும் - தனமிக்க

   வள்ளி மணாளன் மகிழ்ந்துறைத் தணிகையது

   அள்ளித் தரும் அமைதி.

திருத்தணி: சினம் தணிந்து வள்ளி மணாளனாக அமர்ந்திருக்கும் மலை. இங்கு சென்றால் மன அமைதி அள்ளித் தரும்.

    பழமுதிர் சோலை படர்ந்த மலையினில்

   அழகன் அருவி ஆட - நிழல்தரும்

   வேங்கை மரத்தின் அடியில் விளையாடும்

   ஓங்குமறை ஓதும் ஒளி.

பழமுதிர்சோலை: அழகிய அருவிகளும் வேங்கை மரமும் நிறைந்த சோலையில் விளையாடும் முருகன், வேதங்களின் உட்பொருளாக விளங்குகிறான்.

திருவிளையாடல்கள் மற்றும் கதைகள்

  ஞானப் பழத்தைப் பிழிந்து நறுஞ்சுவையாய்

   மோனத் தமிழால் மொழிந்தவன் - வானத்துப்

   பாட்டிக்குச் சுட்ட பழம் தந்துப் பாடம்

   ஊட்டியப் பிள்ளை உவந்து.

ஞானப் பழம்: தமிழுக்காகவும் ஞானத்திற்காகவும் பிணங்கியவன், அவ்வைப் பாட்டிக்குச் 'சுட்ட பழம்' தந்து பாடம் புகட்டியவன்.

  வேடன் வடிவில் விரைந்துப் புனம்சென்று

   ஆடல் அழகி அணைந்தவன் - கூடவே

   யானை மிரட்ட இளநகை பூத்தவன்

   மானைப் பிடித்த மதன்.

வேடன் வடிவில்: வள்ளிப் பிராட்டியை மணக்க வேடன் வடிவம் எடுத்து, விநாயகரை யானையாக வரவழைத்து மிரட்டிய லீலை.

  இந்திரன் மகளை எழிலுறவே கைப்பிடித்த

   மந்தர வித்தகன் மால்மருகன் - தந்திரத்தால்

   தேவர் குலத்தின் திகைப்பகற்றித் தாரமிட்ட

   காவலன் செவ்வேள் கரம்.

இந்திரன் மகள்: தேவர்களின் பயத்தைப் போக்கி, இந்திரன் மகளான தெய்வானையைத் திருமணம் செய்த வீரம்.

   மாமரமாய் நின்ற மகாசூரன் மார்திறக்க

   நேமமுடன் வேலை விடுத்தவன் - தீமை

   அழியவே சேவலும் ஆடும் மயிலுமாய்

   வழிகண்டான் வள்ளல் வலி.

மாமரமாய் நின்ற: சூரபத்மன் மாமரமாக நின்றபோது வேலை ஏவி, அவனைப் பிளந்து சேவலும் மயிலுமாக மாற்றிய கருணை.

  பகையை ஒழித்துப் பயம்நீக்கும் சேவல்

   நிகரில்லாக் கொடியாய் நின்றது - அகையற்றுத்

   துன்பம் வருங்கால் துணையாய் ஒலிக்குமே

   இன்பக் குரலாய் இசைந்து.

பகையை ஒழித்து: தன்னை எதிர்த்த சூரனையே தன் கொடியில் (சேவல்) வைத்துக்கொண்ட பெருந்தன்மை.

  நெற்றியில் ஈசன் நெருப்புப் பொறிதந்த

   உற்றத் திருநீற்றின் உட்பொருளாய் - வெற்றியைத்

   தந்திடும் கந்தன் தகைசேர் அணியிது

   சிந்திப்பார் துன்பம் சிதைந்து.

நெற்றியில் ஈசன்: சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தோன்றியதால், முருகனின் திருநீறு நம் வினைகளைச் சாம்பலாக்கும்.

  அறுமுகவன் நாமத்தை அள்ளிப் பருகும்

   உறுமிக்கத் தொண்டர் உளம் - பெறுமிக்க

   முத்தியே கைகூடும் முக்கண்ணன் மைந்தன்

   பத்தியே பாரில் பரம்.

அறுமுகவன் நாமம்: முருகனின் பெயரைச் சொல்லுவதே முக்திக்குச் சமம்; அவன் பக்தி ஒன்றே உயர்ந்தது.

   கருணைக் கடலாய்க் கனிந்தப் பார்வையில்

   இருவினை தீர்க்கும் இறைவன் - வருநாளில்

   எவ்வினை வந்தாலும் ஏதமின்றி நமைக்

   காவான் குகனே கதி.

கருணைக் கடல்: குகன் நம்மை எக்காலத்திலும் காப்பான்; அவன் பார்வை பட்டால் நம் பாவங்கள் நீங்கும்.

  அண்டம் அதிர அடிக்கும் கதிர்வேலன்

   கண்டம் துணிக்கும் கதிர்வாள் - எண்டிசையும்

   போற்றும் புகழுடையான் பொன்னார் திருவடியைத்

   தேற்றமே கொண்டுத் தொழு.

அண்டம் அதிர: அவன் கையில் இருக்கும் கதிர்வேல், எட்டு திக்கும் நடுங்கும் வலிமை கொண்டது; அவன் திருவடியே நமக்குப் புகலிடம்.

   சரவண பவவெனும் சடாட்சரம் ஓதின்

   இரவெனத் துன்பம் ஏகுமே - வரமெனத்

   தந்து வினைதீர்க்கும் தாரக மந்திரம்

   சிந்தை தெளிவிக்கும் சீர்.

சடாட்சரம்: 'சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரம் இருளை நீக்கும் ஒளி போன்றது; அது சிந்தையைத் தெளிவாக்கும்.

   ஓரு கைஅபயம் அளிக்கும் ஒருகையோ

   சீருயரச் சக்தித் திருக்கையாம் - ஏருயர

   அள்ளி வழங்கிடுமே அஞ்சலெனும் பன்னிருகை

   வள்ளி மணாளன் வளம்.

அபயக் கரம்: அவனது பன்னிரு கைகளில் ஒன்று அஞ்சேல் (அபயம்) என்கிறது; மற்றொன்று அருளை அள்ளித் தருகிறது.

  அருண கிரிநாதன் அலங்காரப் பாடப்

   பெருமகிழ்வு கொள்ளும் பெருமான் - கருணையினால்

   பாடல் சுவைக்கும் பவளவாய் மைந்தன்நமை

   ஆடல் மயிலேறி ஆள்.

அருணகிரி: திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரின் பாடல்களை ரசிக்கும் முருகன், மயில் ஏறி வந்து நமக்கு அருள்வான்.

  சஷ்டி கவசம் தனையோது வார்தமக்கு

   முட்டி வரும்வினை மோதிப்போம் - எட்டியே

   பார்க்கும் எமபயம் பாழ்படவே கந்தனவன்

   காக்கும் கவசமே கண்.

கந்த சஷ்டி கவசம்: இதைப் படிப்பவர்களுக்கு வினைத் துன்பங்கள் நீங்கும்; எம பயம் அகலும்.

   கல்லாடம் பாடியக் காவலன் நக்கீரன்

   சொல்லால் சிறைமீட்டச் சொக்கன்மகன் - ஒல்லையிலே

   பூதத்தை வென்றுப் புகழுடனே காத்தவன்

   வேதப் பொருளாய் விழைந்து.

நக்கீரன்: பூதத்தால் சிறை வைக்கப்பட்ட நக்கீரனைத் திருமுருகாற்றுப்படை மூலம் மீட்ட வரலாறு.

  எங்குமே குன்று இருந்தாலுமே அங்கு

   தங்குவான் தையல் தனயனவன் - பொங்குபுனல்

   பாய்ந்து வரும்மலைப் பாதையிலே வேல்பிடித்து

   ஆய்ந்து வருவான் அருள்.

எங்குமே குன்று: "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" என்பது போல, அவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.

   சரவணப் பொய்கை தனைநினைந்து நீராட

   நரகப் பயமது நாடாது - மரகத

   மேனி உடையான் மெய்த்திரு நாமத்தைச்

   சொல்லித் துதிப்பார் சுகம்.

சரவணப் பொய்கை: இப்பொய்கையை நினைத்தாலே நரக பயம் நீங்கும்; முருகனின் நாமம் சுகம் தரும்.

  பாம்பன் அடிகள் பணிந்துருகிப் போற்றிய

   தேம்பாவத் தேனே திகழொளியே - காண்பாயே

   கால்முறிந்த வேளையிலும் கந்தன் எழுந்தருளி

   மேல்நின்று காத்த மெய்.

பாம்பன் அடிகள்: கால் முறிந்த நிலையிலும் சண்முக கவசம் பாடி, முருகனின் நேரடி தரிசனம் பெற்று குணமடைந்த அடியார்.

 திரைமறைவில் நின்றே திருவருளைச் செய்யும்

   விரைமருவும் சோலைத் தலைவன் - கதிர்காமத்

   தெய்வமெனத் தென்னிலங்கைத் தேயத்தவர் போற்றிடும்

   சைவத் தனிசுடரே சார்.

கதிர்காமம்: இலங்கையில் திரையிட்டு வணங்கப்படும் கதிர்காம முருகன், சைவ சமயத்தின் தனிச்சுடர்.

   மனதின் வேகத்தை விஞ்சியே ஓடும்

   கனக மயில்வாகனக் கந்தன் - நினையாது

   கூவி அழைத்தாலும் ஓடி வருவானே

   ஆவி அனையான் அரி.

மனதின் வேகம்: மயில் வாகனத்தில் மனதை விட வேகமாக வந்து அடியாரைக் காப்பவன்.

  உலகைச் சுற்றிவந்த உத்தமன் முன்னால்

   நலமிக்க ஞானப் பழத்தைப் - பலமிக்க

   தந்தைக்குச் சாற்றியத் தத்துவமே கந்தனவன்

   சிந்தைக்கு இனியச் சிவம்.

உலகைச் சுற்றி: விநாயகர் உலகைச் சுற்றி பழம் பெற்ற கதையும், முருகன் ஞானமே உருவான தத்துவமும்.

   பகைவன் எனினும் பரிந்தருளிச் சேவலாய்

   உகந்தே கொடியினில் வைத்தான் - மிகப்பொல்லா

   வஞ்சகச் சூரன் மனம்வாடி நின்றக்கால்

   அஞ்சேல் எனுமருள் அது.

பகைவன் எனினும்: தன்னை அழிக்க வந்த சூரனுக்கும் முக்தி அளித்த முருகனின் கருணை இணையற்றது.

   முத்தமிழ்ப் பாடி முகம்மலர்ந் தேயருளும்

   நித்யக் குமரனின் புன்னகையே - இத்தரையில்

   வாடும் உயிர்களின் வல்வினைப் பாய்ந்துடைக்கும்

   கேடிலா ஞானக் கிளர்.

முத்தமிழ்ப் பாடி: இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழால் முருகனைப் பாடினால் வல்வினைகள் நீங்கும்.

  மூத்தவன் முன்னே முழுமுதற்க் காப்பிருக்க

   இளையவன் பின்னே இனிமையாய் - விளையாடப்

   பார்வதி பெற்றெடுத்தப் பாலன் இருவருமே

   கார்மேக வண்ணன் கிளை.

மூத்தவன் முன்னே: விநாயகர் முன்னே செல்ல, முருகன் பின்னே வரும் அழகிய சகோதரப் பிணைப்பு.

  ஆறுநாள் நோன்பிருந்து அண்ணலை ஏத்திடின்

   பேறு கிட்டும் பெருவாழ்வு - ஊறுமே

   கந்தன் அருளமுதக் காட்சியினால் உள்ளத்துள்

   சிந்தை மலரும் திகைப்பு.

ஆறுநாள் நோன்பு: சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு வாழ்வின் அனைத்துப் பேறுகளும் கிட்டும்.

  வேடர் வடிவில் குறிவைத்து நாடிச்

   சிறுவனாய் வேடனாய் நின்ற - உறவினை

   நாடியே வந்தருளும் நாயகன் தாள்பணிந்தால்

   வாடியே நிற்கார் வரம்.

வேடர் வடிவில்: வள்ளியை அடைய முருகன் எடுத்த வேடங்கள், அவன் பக்திக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொள்வதைக் காட்டுகிறது.

  கோலத்தைக் கைவிட்டுத் தண்டமே ஏந்தியவன்

   சீலத்தைக் காக்கும் செழுஞ்சுடராய் - கோலங்கள்

   எத்தனையோ கொண்டாலும் ஏழைக் கடியவர்கள்

   அத்தனே என்பார் அது.

தண்டம் ஏந்தியவன்: கோலங்கள் பல கொண்டாலும், தண்டாயுதபாணியாக நிற்கும் அழகே அடியார்களுக்கு ஆறுதல்.

  ஆறு குழந்தையை அன்னை அணைத்திடவே

   ஈறு மிலாத எழில்முகவன் - மாறாத

   கந்தன் எனும்பெயரைக் கண்ணாரக் காண்கையிலே

   முந்தும் பிறவி முடிந்து.

ஆறு குழந்தையும்: கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளை அன்னை பார்வதி ஒன்றாக அணைத்ததால் 'கந்தன்' ஆனான்.

  கல்லிலும் உண்டு கனிந்த மனத்தையுடைய

   மெல்லியல் தொண்டர் மிடியிலுண்டு - சொல்லிலும்

   உண்டுப் பொருளாய் உலகெலாம் நிறைந்தவன்

   கண்டு வழிபடக் களி.

கல்லிலும் உண்டு: பக்தர்களின் எளிய மனதிலும், சொல்லின் உட்பொருளிலும் முருகன் இருக்கிறான்.

  சக்தி தரித்தச் சரவணபவ என்னும்

   முத்தி தரும்மந் திரந்தன்னைக் - கத்தியே

   உள்ளம் உருகி உரைப்பார் வினைதீர்க்கும்

   வள்ளல் குகனவன் வாழ்வு.

சக்தி தரித்த: 'சரவணபவ' மந்திரத்தை மனமுருகச் சொன்னால், குகன் நம் வாழ்வை வளப்படுத்துவான்.

  இயலிசை நாடகமெனும் ஈடில்லாத் தமிழை

   உயலெனக் கொண்ட உயர்குமரன் - நயமுடன்

   முத்தமிழால் வைதாரும் வாழவைக்கும் முக்கண்ணன்

   உத்தமப் பிள்ளை உவந்து.

 உத்தமப் பிள்ளை: தன்னைத் திட்டுபவர்களையும் (வைதாரையும்) வாழ வைக்கும் கருணை கொண்டவன்.

   இதயக் குகையினில் இன்பமாய் வீற்றிருக்கும்

   நிமலன் குகனெனும் நாமமே - புவிமீது

   அல்லல் அகற்றி அறிவைத் தரும்சிறந்த

   சொல்லெனும் ஜோதிச் சுடர்.

இதயக் குகையில்: நம் மனதிற்குள்குகனாகஇருப்பவன்; அவன் பெயர் அறிவைத் தூண்டும் ஜோதி.

   தோள்மேல் சுமந்தே துதிபாடி ஆட வரும்

   காவடி ஆட்டம் கதிதருமே - பூவுலகில்

   ஆவினன் குடிவாழ் அழகன் அடிவணங்கப்

   பாவங்கள் போகும் பறந்து.

காவடி ஆட்டம்: தோளில் காவடி சுமந்து ஆடும் பக்தர்களுக்குப் பாவங்கள் விலகும்.

   தைப்பூசத் திருநாளில் தங்க மயில்வாகனன்

   பொய்பூத்த நெஞ்சைப் புனிதமாக்க - மெய்பூத்த

   அன்பால் எழுந்தருளி ஆற்றல் தருவானே

   இன்பம் பெருக இசை.

தைப்பூசம்: தைப்பூசத் திருநாளில் தங்க மயில் வாகனத்தில் வந்து உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவான்.

   செந்தூர் கடலலைகள் செவ்வேள் அடியினை

   வந்தே வணங்கி வழிபடுமே - அந்தோ

   அலைகடல் ஓரம் அமர்ந்தானை வேண்டின்

   தலைவிதி மாறும் தரம்.

செந்தூர் கடல்: கடலே முருகனின் காலடியைத் தொட்டு வணங்குவதால், அவனைத் தொழ நம் விதி மாறும்.

   கதிரவன் ஒளியைக் கையில்வேல் ஏந்தி

   எதிரே வரும்பகையை ஏய்க்கும் - கதிர்வேல்

   அடியார் பயத்தை அறுக்கும் அறிவாய்

   முடியார் முடிமேல் முளைத்து.

கதிர்வேல்: சூரிய ஒளி போன்ற பிரகாசமான வேல், நம் மரண பயத்தை அறுக்கும்.

   மலைமேல் அமர்ந்தே மனிதர்க்கு வழிகாட்டும்

   கலைகளின் உறைவிடம் கந்தன் - மலைமகள்

   பெற்றெடுத்த ஞானப் பிழம்பாய் மிளிர்கின்ற

   நற்றவன் பாதம் நயந்து.

மலைமேல் அமர்ந்த: ஞானப் பிழம்பாக மலைமேல் அமர்ந்து நமக்கு நல்வழி காட்டும் நற்றவன்.

  குருவாய் அமைந்தே குவலயம் காக்கும்

   குமர குருபரன் கோலம் - ஒருகாலும்

   நீங்கா துளத்தில் நிலைபெற்று நிற்குமே

   தூங்காத் துணையாய்த் தொடர்ந்து.

குருவாய் அமைந்த: குமரகுருபரனாக இருந்து உலகைக் காக்கும் அவன் கோலம் எப்போதும் நம் மனதை விட்டு நீங்காது.

   முருகன் என்றாலே அழகெனப் பொருள்சொல்லும்

   உருகும் அடியார் உளம்நோக்கி - வருகின்ற

   தெய்வத் தமிழ்மகனைத் தித்திக்கும் தேனாக

   வையம் புகழும் வகை.

முருகன் - அழகு: முருகன் என்ற சொல்லே அழகு; அவன் தேன் போன்ற இனிமையானவன்.

   விரித்தத் தோகையிலே வேதப் பொருள்காட்டும்

   பரித்த மயில்வாகனன் பண்பு - தரித்தே

   கண்குளிரக் கண்டு கசிந்துருகிப் போற்றினால்

   புண்ணியம் சேரும் பொலிந்து.

விரித்தத் தோகை: மயில் தோகையில் உள்ள கண்கள் வேதப் பொருளைக் காட்டும்; அதைக் கண்டால் புண்ணியம்.

  செந்நிற மேனி சிவந்தத் திருவாய்

   இந்நிறம் கண்டால் இடர்நீங்கும் - அந்நிறம்

   சூரியன் ஒளியாய் சுடர்விடும் கந்தனைப்

   பாரிடைப் போற்றுப் பணிந்து.

செந்நிற மேனி: சூரியன் போன்ற சிவந்த நிறம் கொண்ட முருகனைப் பார்த்தாலே இடர்கள் நீங்கும்.

   திருப்புகழ் பாடித் திளைக்கும் அடியார்

   கருப்பு மனமதுக் காணார் - ஒருப்போதின்

   வண்ணச் சரபத்தின் வாக்குக் கினியவன்

   திண்ணமாய் வந்துத் திகழ்.

திருப்புகழ்: திருப்புகழ் பாடுபவர்கள் மன இருளை அறியமாட்டார்கள்.

  பசிவந்த போதும் பயம்வந்த போதும்

   நசிவந்த நெஞ்சிற்கு நாவாய் - கசிவுற்றுக்

   கந்தா எனவொரு கால்சொன்னால் போதுமே

   வந்தே அருள்வான் மலிந்து.

பசி வந்த போதும்: துன்பம் வந்த காலத்தில் 'கந்தா' என்று ஒருமுறை அழைத்தால் போதும், அவன் ஓடி வருவான்.

  முற்பிறவி செய்த வினைமூண்டு வந்தாலும்

   கற்பகத் தருவாய் குகனிருக்க - எற்பிறவித்

   துன்பம் எமையணுகாத் தூய வடிவேலன்

   அன்பே அரணாய் அமர்.

முற்பிறவி வினை: பழவினை தொடர்ந்தாலும், கற்பகத் தருவான முருகன் இருக்கும்போது கவலை எதற்கு?

  ஆடையின்றி நின்றே அருள்பொழியும் ஆண்டியவன்

   வீடென்னும் பேறு விளைவிப்பான் - நாடெங்கும்

   சுற்றித் திரியும் சுடர்மிகும் ஞானியர்க்குப்

   பற்றாய்த் திகழும் பழம்.

ஆண்டி: உலகப் பற்றை நீக்கச் சொல்லும் ஆண்டிக் கோலம், ஞானிகளுக்குப் பெரும் பற்றுக்கோடு.

  ஆறு முலையூட்டி அன்பால் வளர்த்தெடுத்த

   சீறுமிளம் கார்த்திகைப் பெண்டிர்க்கு - பேறளித்து

   விண்ணில் இடமளித்த வித்தகன் சேயவன்

   கண்ணில் கருணைக் கடல்.

கார்த்திகைப் பெண்டிர்: முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு விண்ணில் நட்சத்திரமாக இருக்க அருளியவன்.

  ஆணவம் கொண்ட அகந்தைச் சூரனை

   வாணவத்தால் ஈடழித்து மாற்றி - காணவொண்ணாச்

   சக்தியாய் ஆக்கித் தனைச் சேவற்கொடி யாக்கி

   முத்தியளித் தான்முகவன் முன்.

ஆணவம் கொண்ட: சூரனின் ஆணவத்தை அழித்து, அவனைத் தனது கொடியாகவும் வாகனமாகவும் மாற்றியவன்.

   மயில்முன்னே பாம்பும் மதுரமாய் அடங்கும்

   அயில்முன்னே துன்பம் அகலும் - துயில்கொள்ளும்

   நேரமுந் தன்னை நினையாதத் தொண்டர்க்கும்

   ஆரமு தாய்வருவான் ஆய்ந்து.

மயில் முன்னே: மயிலுக்கு அஞ்சிப் பாம்பும் (காலம்) அடங்கும்; அவன் நாமத்தைச் சொன்னால் துன்பம் அடங்கும்.

   மூலாதாரம் முதலா முச்சந்தி உச்சியென

   மேலாரும் ஆறுவீடு மெய்யினுள்ளே - பாலாடும்

   கந்தன் குடிபுகுந்தால் காலன் அஞ்சுவானே

   நிந்தனை ஏதுமிலா நிலை.

மூலாதாரம்: நம் உடலுக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களே முருகனின் அறுபடை வீடுகள்; அங்கு அவன் குடிபுகுந்தால் காலனுக்கு வேலையில்லை.

  இச்சையும் ஞானமும் இருபுறமும் ஏந்தியவன்

   அச்சம் அகற்றும் அறுமுகவன் - பச்சைநிற

   வள்ளியும் தேவசே னையுமாய் நின்றருளும்

   வள்ளல் வடிவம் வளர்.

இச்சையும் ஞானமும்: வள்ளி (இச்சை), தெய்வானை (கிரியை) இருவருடன் அமர்ந்து இன்பம் தரும் வடிவம்.

  வேடர் குலக்கொடி வேணவா வேட்கையுற்று

   நாடியே வந்த நறுமலர் - கூடவே

   கந்தன் இதயக் கமலத்தில் வீற்றிருக்கும்

   சுந்தரி வள்ளித் துணை.

வள்ளித் துணை: காட்டில் தவம் செய்த வேடர் குல வள்ளி, முருகனின் இதயத்தில் நீங்காமல் இருப்பவள்.

   இந்திரன் தந்த எழில்மகள் யானையினால்

   வந்த பெயருடைய மங்கை - தந்திரமாய்த்

   தேவர் குறைதீர்த்தச் செவ்வேள் மனையாட்டி

   காவலாய் நிற்பாள் கனிந்து.

தெய்வானை: இந்திரனின் மகளான இவள், தேவர்களின் குறையைத் தீர்க்க முருகனை மணந்தவள்.

   கிழவன் வடிவெடுத்துக் கிழங்குண்ணும் வள்ளியிடம்

   பழக்கமே கொண்டுப் பணிந்தான் - அழகன்

   திருவிளை யாடலால் தேன்மொழிப் பெண்ணை

   மருவி மணந்தான் மகிழ்ந்து.

கிழவன் வடிவம்: வள்ளியை மணக்க முதியவர் வேடம் பூண்டு, திருவிளையாடல் புரிந்த அழகு.

   களிறாய் விநாயகன் காட்டில் மிரட்ட

   ஒளிரும் எழில்வள்ளி ஓடி - நளிர்மிகும்

   கந்தன் புயத்தில் கதியெனச் சேர்ந்திட்ட

   விந்தையை எண்ணு விழைந்து.

களிறாய் விநாயகன்: அண்ணன் விநாயகரை யானையாக வரச் செய்து, வள்ளியைத் தன் வசப்படுத்திய லீலை.

   பிறவிப் பெருங்கடல் நீந்திட வேண்டுவோர்

   அறுமுகன் தாளை அடைவார் - நறுமணம்

   வீசும் மலர்தூவி வேண்டித் தொழுதிடின்

   பாசம் அகலும் பரிந்து.

பிறவிப் பெருங்கடல்: சம்சாரக் கடலை நீந்த விரும்புவோர் முருகனின் திருவடியைப் பற்ற வேண்டும்.

   சந்தத் தமிழால் சகலமும் தந்திட்ட

   கந்தன் புகழ்வளர் காவியம் - நித்தம்

   படித்துப் பரவினாரைப் பஞ்சே நிலைகுலையச்

   சுட்டுப் பொசுக்கும் சுடர்.

சந்தத் தமிழ்: முருகனின் புகழ் பாடும் பாடல்களை நித்தம் படிப்பவர்களுக்குத் தீயவைகள் அழிந்து போகும்.

   அண்டம் குலுங்கவே ஆடும் மயில்மீது

   கந்தம் நடுங்கக் கதிர்வேலன் - கொண்டு

   வருவான் அருளை வறியவர் வாட்டம்

   தருவான் தீர்க்குந் தரம்.

அண்டம் குலுங்க: மயில் மீது அமர்ந்து வரும் அவன் வேல், வறியவர்களின் வாட்டத்தைப் போக்கும்.

   படிக்கட்டுகள் தோறும் பரமன் அடியொற்றி

   அடிக்கடி ஏறும் அடியார் - துடிக்கின்ற

   நெஞ்சத்தில் ஆறுதல் நேராய் வருமே

   செஞ்சொல் குமரன் செயல்.

படிக்கட்டுகள்: மலைக் கோயில்களில் ஏறிச் செல்லும் அடியார்களுக்கு முருகன் நேரில் வந்து ஆறுதல் தருவான்.

   இலைநீறு தன்னால் இடர்நீக்கும் செந்தூர்

   அலைவாய் உறைநல் அரசன் - நிலைகாணா

   நோய்கள் அகற்றி நலம்வழங்கும் வேலவன்

   சேயாய் எமையாள் சிறந்து.

இலைநீறு: செந்தூரில் தரப்படும் பன்னீர் இலை விபூதி, தீராத நோய்களையும் தீர்க்கும் மருந்தாகும்.

   மறைபொருளாய் நின்றே மனக்குகையில் ஆளும்

   இறைவன் கதிராமன் இன்பம் - குறையாத

   பக்தியில் ஆழ்ந்தால் பகலவன் ஒளியென

   முத்திக் கதவு முட்டும்.

மறைபொருளாய்: மனதின் ஆழத்தில் ரகசியமாக இருந்து நம்மை ஆளும் கதிராமன் (முருகன்).

   சித்திரைத் திங்கள் சிறந்த முழுநிலவில்

   முத்தமிழ்க் கந்தனை முன்னினால் - எத்திக்கும்

   புகழும் பெருமையும் பொன்வாழ்வும் கிட்டும்

   சுகமும் பெருகும் துணிந்து.

சித்திரைத் திங்கள்: சித்திரை முழுநிலவில் முருகனை நினைத்தால் புகழ், செல்வம், வாழ்வு சிறக்கும்.

   விசாகத் திருநாளில் வித்தகன் தோன்றிய

   குசாவகப் பொய்கையைக் கும்பிடின் - தசாவதாரம்

   போற்றும் திருமால் மருகன் திருவருள்

   ஊற்றாய் எழும் உள்ளத்தே.

வைகாசி விசாகம்: முருகன் தோன்றிய விசாக நாளில் அவனைத் தொழுதால் திருமால் மருகனின் அருள் ஊற்றெடுக்கும்.

   கச்சியப்பப் பாடிய கந்த புராணத்தை

   நச்சிப் படிப்பார் நலம் - மிச்சமாய்

   உள்ள வினைப்பயன் ஓடியே போகுமே

   வள்ளி மணாளன் வகை.

கந்த புராணம்: கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய புராணத்தைப் படிப்பவர்களுக்கு வினைப்பயன் அகலும்.

   ஆண்டிவன் கையில் அமர்ந்திட்டத் தண்டுநமைத்

   தாண்டிப் போகாமல் தடுக்கும் - தீயவற்றை

   வேண்டாத எண்ணம் விலக்கி அறிவெனும்

   தூண்டா விளக்காய்த் தொடர்.

ஆண்டியவன் தண்டு: அவன் கையில் உள்ள தண்டு (ஊன்றுகோல்), நம்மைத் தீய வழியில் செல்லாமல் தடுக்கும்.

   சிங்கார வேலவன் சீர்மிகும் கோலத்தைக்

   கண்காரக் கண்டும் களிப்புற - எண்கார

   மாயப் பிறவி மயக்கம் ஒழியுமே

   சேயவன் பாதம் சேர்.

சிங்கார வேலவன்: அவனது அழகிய கோலத்தைக் கண்டாலே பிறவி மயக்கம் நீங்கும்.

   சகலகலா வல்லித் தாயிடம் வேண்டிப்

   புகழினைப் பெற்றப் புலவன் - குகனருளைப்

   பாடியப் பாடல்கள் பாரெலாம் போற்றுமே

   சூடியச் சொல்லின் சுவை.

சகலகலா வல்லி: சரஸ்வதியின் அருளைப் பெற்ற குமரகுருபரர் பாடிய பாடல்கள் முருகனுக்கு மிகவும் பிடிக்கும்.

   வாளால் அறுக்காத வைரியைச் சொல்லால்

   மாற்றி மயிலாய் மாற்றினான் - சீற்றத்தை

   அன்பால் வெல்லும் அறநெறி காட்டிய

   நன்பன் முருகன் நயப்பு.

வாளால் அறுக்காத: ஆயுதத்தால் வெல்ல முடியாத பகைவனை அன்பால் (சேவல், மயிலாக) மாற்றிய நன்பன்.

   எந்தக் குறையிருப்பின் என்னையே நோக்கென்று

   கந்தன் அழைக்கும் கனிவு - வந்தென்னை

   ஆட்கொள்ளச் செய்யும் அற்புதக் காட்சியிது

   நாட்கள் இனியதாய் நகு.

எந்தக் குறையிருப்பின்: "உன் குறைகளை என்னிடம் விடு" என்று அழைக்கும் முருகனின் கனிவு.

   தமிழுக்குத் தலைவன் தனிப்பெருங் குன்றன்

   அமிழ்தாய் இனிக்கின்ற அண்ணல் - இமிழ்கடல்

   சூழும் உலகுக்குத் தூயவன் வேலவன்

   தாழும் அடியார் தவம்.

தமிழுக்குத் தலைவன்: தமிழே முருகனாகவும், முருகனே தமிழாகவும் விளங்கும் தத்துவம்.

  ஆறு முகமும் அடியார் துயர்நீக்கும்

   ஏறு மயிலேறும் எம்பெருமான் - நீறுவகை

   கொஞ்சும் குமரன் குறவள்ளி பங்கயற்கே

   தஞ்சம் எனத்தொழுது நில்.

தஞ்சம் எனத் தொழு: அறுமுகனையும் மயில் வாகனத்தையும் சரணடைந்தால் வாழ்வு சிறக்கும்.

   மலர்நிகர் பாதங்கள் மண்ணில் படாமல்

   அலர்மயில் ஏறி வருவான் - புலர்காலை

   உள்ளம் உருகுவார் உத்தமன் சேவடி

   மெள்ளத் தழுவி மகிழ்.

மலர்நிகர் பாதங்கள்: அவன் திருவடிகள் மண்ணில் படாமல் மயில் ஏறி வந்து நமக்கு அருள்வான்.

   எண்ணிய காரியம் ஏதுந் தடையுறின்

   கண்ணியக் கந்தனைக் கைதொழு - திண்ணமாய்

   வேலன் வருவான் வினைதீர வழிகாட்டி

   காலன் அஞ்சக் காப்பான் கடிது.

எண்ணிய காரியம்: தடைகள் ஏற்படும் போது முருகனை வணங்கினால், அவன் காலனையும் அஞ்சச் செய்து நம்மைக் காப்பான்.

   அலைகடல் ஓரம் அமர்ந்தொளிரும் செந்தில்

   நிலைபெற்றச் சோதிப் பிழம்பு - கலைகற்ற

   மேலோர் துதிக்கும் மெய்ஞான வேலவன்

   காலோர் கதியாய்க் கல.

செந்தில் சோதி: கடல் ஓரம் அமர்ந்து ஞானம் போதிக்கும் வேலவன் பாதமே நமக்குப் புகலிடம்.

   சிறுவா புரிவாழ் சிலம்பன் அடியைத்

   தொழுவார் துயரம் தொலைப்பார் - நறுவாசம்

   வீசும் திருவருள் வேண்டிடக் கிட்டுமே

   பேசும் புகழே பெரும்.

சிறுவாபுரி: சிறுவாபுரியில் வீற்றிருக்கும் முருகனைத் தொழுதால் புகழ் கிட்டும்.

   வைத்தீசு வரன்கோயில் வாழும் குமரகுரு

   முத்துக் குமாரன் முகமலர் - பத்தியுடன்

   நாடித் தொழுவார் நலிவுற்ற நோயெல்லாம்

   ஓடி மறையும் ஒளி.

வைத்தீசுவரன் கோயில்: அங்கு 'முத்துக்குமாரனாக' அமர்ந்து நோய்களைத் தீர்க்கும் வைத்தியநாதன் மகன்.

   பச்சை மயில்வாக னப்பரமன் வந்தெனைத்

   துச்ச மெனாதேத் துணையாகி - இச்சையெல்லாம்

   ஈடேறச் செய்து இருவினைத் தீர்த்தாண்ட

   சேடன் குகனேத் திக்.

பச்சை மயில்: மயில் ஏறி வரும் பரமன், நம் ஆசைகளை ஈடேற்றி இருவினைகளைத் தீர்ப்பான்.

   தாரகன் ஆதித் தறுக்கரை வீழ்த்திய

   வீரன் விமலைத் தனயன் - பாரெங்கும்

   நீக்கமற நின்றே நிருபர்க்கு அருள்செய்யும்

   ஆக்கக் கடவுள் அவன்.

தாரகன் ஆதி: தாரகாசுரன் போன்ற அரக்கர்களை வீழ்த்திய வீரன்; அவன் எல்லாரையும் காப்பவன்.

   கந்தன் எனும்பெயரைக் காது குளிரவே

   நித்தம் செவிமடுக்க நேரிடின் - பித்தம்

   தெளிந்து தெளிவாய் திருவருள் கூடும்

   கவிந்து வரும் இன்பக் காப்பு.

செவிமடுக்க: முருகனின் பெயரைத் தொடர்ந்து கேட்டாலே சித்தப் பிரமை (மனக் குழப்பம்) நீங்கும்.

   சைவம் வைணவம் என்றுமே பேதமிலா

   ஐயன் மருகன் அறுமுகன் - மெய்யன்பு

   கொண்டார் இதயக் குளத்திலே பூத்திருக்கும்

   தண்டார் கமலத் தகை.

சைவம் வைணவம்: சிவனின் மகனாகவும், திருமாலின் மருகனாகவும் இருந்து சமய பேதங்களை நீக்குபவன்.

   பழனி மலைமேல் பரமன் அமுதம்

   உளமார உண்டால் உவகை - இளமாறாச்

   சக்திக் குமரனைச் சார்ந்தார்க்கு எந்நாளும்

   முக்திப் பழமே முதல்.

பழனி அமுதம்: பழனியில் பஞ்சாமிர்தம் போல இனிக்கும் முருகனைச் சார்ந்தால் முக்தி நிச்சயம்.

   "முத்தைத் தரு"வெனச் சொல்லெடுத்துத் தந்திட்ட

   அத்தன் குமரன் அருட்செயல் - வித்தகச்

   சந்தத் தமிழால் சகலமும் கூடிட

   வந்தே அருள்வான் மதி.

முத்தைத் தரு: அருணகிரிநாதருக்கு அடியெடுத்துக் கொடுத்த தலம், நம் அறிவை வளர்க்கும்.

   மலைவாழு மக்கட்கு மாண்புடையத் தெய்வம்

   கலைவாழு நெஞ்சக் குகனே - அலைமோதும்

   சமுசார பந்தத் தளைநீக்கி ஆளும்

   அமுதாந் தமிழே அறிவு.

மலைவாழு மக்கள்: மலைவாழ் மக்களின் தெய்வமாக இருந்தாலும், அவன் முத்தமிழின் அறிவாக விளங்குகிறான்.

   முன்னே மயில்வரப் பின்னே வடிவேலன்

   உன்னே எனநிற்க அஞ்சாதே - எந்நேரம்

   காக்கும் கடவுள் குகனிருக்கக் கவலைகள்

   ஏற்கும் இடமேது இனி.

முன்னே மயில் வர: மயில் முன்னே வர, அவன் பின்னே வரும்போது நமக்கு எதற்குத் துன்பம்?

   உன்னைத் தவிர ஒருதுணையும் யானறியேன்

   என்னைத் தடுத்தாட்கொள் ஈசனே - பொன்னார்

   திருவடி யல்லால் புகலிடம் ஏது

   மருகா முருகா மகிழ்.

உன்னைத் தவிர: "முருகா! உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை" என்று சரணடைவதே மேன்மை.

 "சும்மா இரு"வெனச் சொல்லால் உணர்த்திய

   அம்மா னருட்செயல் அற்புதம் - மெய்ம்மாறா

   மோன நிலையில் முருகனைச் சிந்திப்பார்

   ஞான நிலைகண்ட நற்பு.

சும்மா இரு: "சும்மா இரு சொல்லற" என்ற உபதேசம், மௌனத்தின் மூலம் இறைவனைக் காணும் வழி.

   தணிகைப் படிகளில் தண்மையாய்க் கால்கள்

   பணியவே ஏறிப் படர - துணிவாக

   இன்பம் விளையும் இடரெல்லாம் வேரற்றுத்

   துன்பம் தொலையுந் துரிது.

தணிகைப் படிகள்: திருத்தணி மலைப் படிகளில் ஏறும் போது நம் துன்பங்கள் வேரற்றுப் போகும்.

   ஓம் எனும் மந்திர உட்பொருள் காட்டிய

   சாமி மலைவாழ் தலைவன் - நாமமே

   நாவினில் ஊறும் நறுந்தேன் சுவையெனப்

   பாவினில் நின்றப் பரம்.

ஓம் எனும் மந்திரம்: ஓங்காரப் பொருளை நாவில் தேனாக இனிக்கும்படி செய்பவன் சுவாமிமலை நாதன்.

   எவ்வுயிரும் காக்கும் இறைவனவன் சேயாகச்

   செவ்வேள் திருநாமம் செப்பிடின் - வையம்

   முழுதும் நலம்பெறும் முக்கண்ணன் மைந்தன்

   தொழுவார் துணையேத் துணி.

எவ்வுயிரும் காக்கும்: எல்லா உயிர்களையும் காக்கும் முருகன் பெயரைச் சொன்னால் வையம் நலம் பெறும்.

   முருகன் அருள்மாலை முற்றுமே ஓதிப்

   பெருகும் புகழுடன் வாழ்க - திருவருளால்

   செல்வம் அறிவு சிறந்த நற்பேறுடன்

   வல்லமை கிட்டும் மகிழ்ந்து.

வாழ்க: இந்த 'அருள்மாலை' 100 பாடல்களையும் ஓதுபவர்கள் செல்வம், அறிவு, புகழுடன் சிறப்பாக வாழ்வார்கள்.

வள்ளி மணாளனின் அருள் வேண்டி இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்வது மிகுந்த பலன் தரும்.

 

கருத்துகள் இல்லை: