6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 2 மார்ச், 2026

திருக்குறள் கூறும் மனிதநேயம் - சி. சிவோகா

 

திருக்குறள் கூறும் மனிதநேயம்

சி. சிவோகா

மட்டக்களப்பு, இலங்கை.

முன்னுரை

மனிதன் சகமனிதனிடத்திலும் இதர உயிர்களிடத்தும் காட்டும் அன்பே மனிதநேயமாகும். பொதுவாக மனிதநேயம் என்பதனை அன்பு, அருள், இரக்கம், ஈகை, கொல்லாமை, இடரிடத்தில் உதவுதல், விருந்தோம்பல், ஒற்றுமை, சமத்துவம், நட்பு, உண்மை, சகிப்புத்தன்மை ஆகிய உயர் மனிதப் பண்புகளின் வெளிப்பாடாகக் கருதலாம். மனிதநேயமே, மனிதனை மனிதனாக வாழவைக்கிறது, அவனைப் பிற உயிர்களிடத்தில் உயர்த்திக் காட்டுகிறது. இதனை உணர்ந்த பெரியார்களும் மகான்களும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்ததுடன் மக்களையும் மனிதநேயத்துடன் வாழ வழிகாட்டினர். மகாத்மா காந்தியின் மனிதநேயம், மனிதனை முதன்மையாகக் கொண்ட அறநெறி சார்ந்த, அன்பு நிறைந்த, அமைதியான உலகை உருவாக்கும் ஒரு புரட்சிகரமான அணுகுமுறையாக அமைந்தது. மனிதர்களைச் சேவிப்பதன் மூலம் கடவுளை வணங்க முடியும் என்று நம்பினார். அனைத்து மனிதர்களிடத்திலும் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தினார். விவேகானந்தர் நோக்கில் மனிதநேயமானது, “அனைத்து உயிர்களிடத்திலும் இறைவனைக் காண்பது, ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோர்களுக்கும் சேவை செய்வதே உண்மையான கடவுள் வழிபாடுஎன்ற வகையில் அமைந்திருந்தது. “Vivekananda's humanism is a call to see the God in all, serve all, and awaken the sleeping divine potential within oneself and others, leading to personal and societal transformations.” தமிழ் இலக்கியங்கள் மனிதநேயத்தை எடுத்துரைத்து, சிறந்த மனித வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன. அறநெறிக் காலத்தில் எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக விளங்கும், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், மனிதநேயப் பண்புகளைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. மனிதன் அறவழியில் பொருள் சேர்த்து இன்பத்துடன் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறுவதுடன் மனிதநேயப் பண்புகளையும் அதன் மேன்மையையும் அதனைக் கடைப்பிடித்து வாழ்வதனால் அடையும் உயர்வையும் உணர்த்துகின்றது.

அன்பு

மனித வாழ்வை மகிழ்வாகக் கழிப்பதற்கும் பிற உயிர்கள் மீது இரக்கம் காட்டுவதற்கும் அடிப்படையாக அன்பு அமைகிறது. இல்வாழ்க்கையின் நிலைபேற்றிற்கு அன்பு அவசியம் என்பதனைத் திருவள்ளுவர் மேல்வரும் குறள் மூலம் உணர்த்துகின்றார். உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கை பாலைநிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற்போல நிலையற்றதாகும்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று

உள்ளத்திலே அன்பு இல்லாவிடின் குறுகிய மனப்பாங்கு ஏற்படும். அன்பு தோன்றிவிட்டால் எல்லாவற்றையும் பிறருடையதாகக் கருதும் பரந்த மனப்பாங்கு ஏற்படும். இதனை மேல்வரும் குறள் உணர்த்துகின்றது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

பிறருடன் அன்பு செலுத்தி வாழ்வதற்காகவே, இந்த உடலோடு உயிர் சேர்ந்துள்ளது. எனவே அன்பு எனும் மனிதநேயப் பண்பு அனைத்து மனிதர்களிடத்திலும் காணப்பட வேண்டும்.

அன்போடு இயைந்த வழக்கன்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு

அருள்

அருளுடைமை என்ற அதிகாரத்தினூடாகவும் வள்ளுவர் மனிதநேயச் சிந்தனைகளை எடுத்துரைக்கின்றார். அருளுடைமை என்பது யாதாயினும் ஒரு உயிருக்கு நேர்ந்த துன்பத்தைத் தனக்கு வந்த துன்பமாகக் கருதி வருந்துதலாகும். ஏனைய உயிர்களிடமும் அன்பு செலுத்தி, அவற்றுக்கு இரக்கம் காட்ட வேண்டும். இத்தகைய அருள் நிறைந்த உள்ளம் படைத்தோருக்குத் துன்பம் எதுவும் ஏற்படாது. அருளே ஒருவருக்குத் துணையாக அமையும் என அருளுடைமையின் நன்மையை வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகப் புகல்

ஈகை

பிறருக்குக் கொடுத்து வாழும் சிறந்த மனிதநேயப் பண்பினைத் திருவள்ளுவர் ஈகைஎன்ற அதிகாரத்தினூடாக விளக்குகிறார். ஒருவர் தான் உழைத்து வைத்த பொருளைத் தனியாக அனுபவித்து வாழ்வது இழிவான செயலாகும். வறியவர்க்குத் கொடுத்து உதவுவதே ஈகையாகும். பிறருக்குக் கொடுப்பது எல்லாம் பிரதிபலனை நோக்காகக் கொண்டு கொடுப்பதாகும்.

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து

ஒருவர் இரந்து கேட்கும் முன்பே அவருக்குக் கொடுப்பது உயர்ந்த பண்பாகும். இப்பண்பினைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் பல நன்மைகளைப் பெறலாம். இல்லை என்று முகம் வாடி நிற்கும் முன்பே பொருள் கேட்டு வந்தார்க்குக் கொடுக்க வேண்டும். பகிர்ந்து உண்பவர்களுக்குத் தீமைகள் இலகுவில் ஏற்படாது.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது

துன்பம் செய்யாமை

பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பது சிறந்த மனிதநேயமாகும். ஒருவர் எல்லாச் செல்வங்களைப் பெற்றிருந்தாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதிருப்பதே அறிவுடைய செயலாகும்.

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள்

ஒருவர் நமக்குத் துன்பம் செய்தாலும் நாம் நன்மையே செய்ய வேண்டும். மாறாகத் துன்பத்தைச் செய்யும் போது, மீளாத் துயரம் ஏற்படும். ஆனால் நன்மை செய்தால் அதுவே அவரைத் தண்டிக்கும் கருவியாக அமையும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்

பிறர்க்கு ஏற்படும் துன்பத்தைத் தனக்கு நேர்ந்த துன்பமாகக் கருத வேண்டும். தீமைகளை அறிந்து அவற்றைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும். மனதால் கூட ஒருவருக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே சிறந்த மனிதநேயமாகும்.

கொல்லாமை

திருவள்ளுவர் கொல்லாமை என்ற அதிகாரத்தில் புலால் உண்ணாமை என்ற மனிதநேயத்தை வலியுறுத்துகின்றார். பிற உயிர்களை மதிப்பதுடன் அவற்றைக் கொல்லாமலும் இருக்க வேண்டும். உயிர்களைக் கொன்று உண்பதால், கொடிய உணர்வுகளே ஏற்படும். கொல்லும் செயல் பிற தீமைகளுக்கும் காரணமாக அமையும். இதனை மேல்வரும் குறட்பா உணர்த்துகிறது.

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்

ஒருவரின் உயிரைக் காப்பதற்காகக் கூட மற்றைய உயிர்களைக் கொல்லக் கூடாது. அத்துடன் நன்மையான விடயங்களுக்குக் கூட பிற உயிர்களைக் கொல்லக் கூடாது. கொல்லாமையைக் கடைப்பிடிப்பவர்களைத் தீமைகள் வருத்தாது. இதனை மேல்வரும் குறட்பா மூலம் அறியலாம்.

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணும் கூற்று

நட்பு

நட்பு சிறந்த மனிதநேயப் பண்பாகும். ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது, நட்பானது பல வகையிலும் உதவுகின்றது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

நட்பு உதவும் மனப்பாங்கினை வளர்க்கின்றது. உள்ளங்களை மகிழ வைக்கின்றது. நட்புக் கொள்ளும் போது நல்ல நண்பர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் நட்பைப் போல் ஒருவன் செய்துகொள்வதற்குச் சிறந்த செயல் எதுவுமில்லை என்கிறார்.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு

ஒற்றுமை

ஒற்றுமை எனும் மனிதநேயப் பண்பின் அவசியத்தைத் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார். ஒற்றுமையால் பல நன்மைகள் ஏற்படும். வள்ளுவர், உயிர்கள் பிற உயிர்களுடன் சேராதிருப்பதால், தீய குணங்கள் ஏற்படும் என்கிறார்.

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய்

பன்மை நிலையை ஏற்றுக் கொண்டு, மாறுபாடற்ற மனப்பாங்கினை வளர்க்கும் போது இன்பங்கள் வந்துசேரும் என மேல்வரும் குறட்பா உணர்த்துகின்றது.

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்

வேற்றுமை உணர்வு தோன்றும் போது அவ் எண்ணத்தை மனத்தில் இருந்து நீக்குபவர்கள் சிறந்த மனிதநேயத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். இதனை

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே

மிகலூக்கும் தன்மையவர் என்ற குறட்பா உணர்த்துகின்றது.

பசி தீர்த்தல்

திருவள்ளுவர் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தினூடாகவும் மனிதநேயத்தை வலியுறுத்துகின்றார். விருந்தினருக்கு உணவுகொடுத்து ஆதரிப்பதற்காகவே இல்வாழ்க்கை நடத்தப்படுகிறது என்கிறார்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு

பிறரின் பசியைப் போக்குபவர் வீட்டிலே அனைத்து இன்பங்களும் வந்துசேரும் எனவும் குறிப்பிடுகிறார்.

மன்னன் கடைப்பிடிக்க வேண்டிய மனிதநேயப் பண்புகள்

நாட்டை நிர்வகித்துக் காக்கும் மன்னனும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்தல் அவசியம் என்பதைத் திருக்குறள் வலியுறுத்துகின்றது. நீதியைக் கடைப்பிடித்தல், முறையாக நடத்தல், செங்கோல் செலுத்தல், காட்சிக்கு எளியவனாக இருத்தல், கடுஞ்சொல் கூறாதிருத்தல், அன்பு காட்டல், குடிகளைப் பாதுகாத்து அரவணைத்தல், கொடை வழங்கல் முதலிய மனிதநேயப் பண்புகளோடு மன்னன் விளங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

மன்னன் தன் குற்றங்களை நீக்குவதுடன் பிறர் குற்றங்களையும் நீக்க வேண்டும். செருக்கு, சினம், சிறுமைக்குணம் இல்லாதிருக்க வேண்டும். அத்துடன் பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் மன்னனுக்குக் குற்றங்கள் என வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு

நிறைவுரை

மனிதன் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பினும் மனிதனை உயர்த்திக் காட்டுவது மனிதநேயம். இன்று மனிதப் பண்புகளை இழந்து பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் பண்பாட்டினை மறந்து, ஒழுக்கத்தை இழந்து, தவறான வழிகளில் பொருள் சேர்த்து சுயநல வாழ்க்கை வாழ்ந்து, இறுதியில் துன்பமடைகின்றனர். மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழும் போது பிறரிடத்தில் அன்பு கொள்வர். பிறருக்கு உதவுவர். பிறருக்காக வாழ்வர். இனங்களுக்கிடையே புரிதல் அதிகரித்து சமூக நல்லிணக்கமும் ஏற்படும். மனிதன் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் உயர்நிலை அடைவான். மனிதநேயமே, அனைத்து அறங்களுக்கும் அடிப்படையாக அமைகின்றது. இதனாலே திருவள்ளுவர் திருக்குறளில் அன்பு, அருள், ஈகை, துன்பம் செய்யாமை, கொல்லாமை, நட்பு, ஒற்றுமை, பசி தீர்த்தல் முதலானவற்றுக்கு முதன்மை அளித்து, அவற்றினூடாக மனிதநேயச் சிந்தனைகளை வலியுறுத்தியுள்ளார். நாட்டைக் காக்கும் மன்னனிடம் காணப்பட வேண்டிய மனிதநேயப் பண்புகளையும் சமுதாயத்தில் வாழ்கின்ற தனிமனிதனுக்குரிய மனிதநேயப் பண்புகளையும் எடுத்துக் கூறியுள்ளார். எனவே திருக்குறள் எடுத்துரைக்கும் தனிமனித வாழ்வையும் சமூகத்தையும் மேம்படுத்த உதவும், மனிதப் பண்புகளை அனைவரும் கடைப்பிடித்து வாழ்தல் அவசியம்.

உசாத்துணை நூல்கள்

1.    சிவத்தம்பி.கா, தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும், 1983, தமிழ் புத்தகாலயம் சென்னை.

2.    கிருட்டிணமூர்த்தி.சா, நிர்மலாதேவி.சூ, தமிழிலக்கியத்தில் மனிதநேயம், 2005, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆப்செட் சென்னை.

3.    முனிசாமி.வீ, உலகப் பொதுமறை திருக்குறளின் உரைவிளக்கம், 1982, திருமகள் நிலையம்.

4.    புலியூர்க் கேசிகன், திருக்குறள் புதிய உரை, 2001, பூம்புகார் பதிப்பகம்.

கருத்துகள் இல்லை: