7 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

அவளின் பாதி - முனைவர் பீ. பெரியசாமி

 அவளின் பாதி

தெருமுனை டீக்கடையில் மழைக்காக ஒதுங்கி நின்றபோதுதான், முதன்முதலாக மீராவின் பார்வையில் விழுந்தான் அரவிந்த். சட்டை நனையாமல் இருக்கக் கையில் இருந்த பழைய குடையைப் பிடித்துக்கொண்டு, சாலையோரம் நனைந்துகொண்டிருந்த ஒரு நாய்க்குட்டிக்குத் தன் பிஸ்கட்டைப் பங்கிட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தான். அந்த ஒரே ஒரு காட்சி, மீராவின் மனதில் ஏதோ ஒரு மெல்லிய அசைவை ஏற்படுத்தியது.

மீரா - கொஞ்சம் அமைதியானவள், சுயமரியாதையை உயிர் மூச்சாகக் கொண்டவள். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பெண்களின் கனவுகள் சுருக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத சட்டங்கள் நிறைந்த சமூகத்தில், அவளுடைய பயணமும் எளிதாக இருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமண உறவில் அரவிந்த் அவளுக்குக் கணவனாக அமைந்தான்.

திருமணமான புதிதிலேயே குடும்பச் சிக்கல்கள் ஒவ்வொன்றாகத் தலைதூக்கத் தொடங்கின.

சுயசார்போடு வாழ நினைத்த மீரா, திருமணத்திற்குப் பிறகும் தன் வேலையைத் தொடர விரும்புவதாகக் கூறியபோது, அரவிந்தின் வீட்டில் எதிர்ப்புக் குரல்கள் பலமாக எழுந்தன. "எங்கள் குடும்பத்துப் பெண்கள் யாரும் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போனதில்லை. வீட்டுப் பொறுப்புகளை யார் பார்ப்பது?" என்றன உறவுச் செவிகள்.

அன்று மீரா அமைதியாக நின்றபோது, அரவிந்த் அவளுக்காக எழுந்து நின்றான்.

"அம்மா, மீரா படிச்ச படிப்புக்கும் திறமைக்கும் அவ வேலைக்குப் போறதுதான் சரி. வீட்டு வேலையை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பகிர்ந்துகிறோம். அவளோட அடையாளத்தை இழக்க வைக்கிறதுக்காக நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கல," என்று உறுதியாகக் கூறிவிட்டான். தன் குடும்பத்தின் விருப்பத்திற்காக மீராவின் கனவைப் பலிகொடுக்க அவன் தயாராக இல்லை.

அடுத்ததாக வந்த சோதனை, சமூகத்தின் பார்வை.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. "இன்னும் என்ன விசேஷம் இல்லையா?" என்ற உறவினர்களின் நச்சரிப்பும், 'ஏதோ குறை இருக்கிறது' என்று மீராவை மட்டுமே நோக்கி வீசப்பட்ட மறைமுகமான பேச்சுகளும் அவளைச் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கின. விஷேச வீடுகளுக்குச் செல்வதற்கே அவள் கூச்சப்பட்டாள்.

அத்தகைய தருணங்களில் அரவிந்த் அவளுக்கு இமயமலையாய் அரணாக நின்றான்.

ஒரு குடும்ப விசேஷத்தில், உறவினர் ஒருவர் மீராவை நோக்கி அநாகரிகமாகக் கேள்விகள் கேட்டபோது, அரவிந்த் குறிக்கிட்டு குறுநகை யோடேயே சொன்னான்: "சித்தி, குழந்தைங்கிறது எங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட விஷயம். கடவுள் கொடுக்கும்போது வரட்டும். அதுவரை நாங்க சந்தோஷமா வாழறதை யாரும் தடுத்துட முடியாது. தயவுசெஞ்சு மீராகிட்ட இந்த மாதிரி கேட்டு அவளைக் கஷ்டப்படுத்தாதீங்க."

அவனுடைய அந்த ஒற்றைப் பதில், சமூகத்தின் நச்சு அம்புகளிலிருந்து மீராவைப் பாதுகாத்தது. வீட்டிற்கு வந்ததும், உடைந்து அழுத மீராவின் கைகளைப் பற்றிக்கொண்டு, "மீரா, இந்த உலகம் எப்போதும் ஏதாவது பேசிட்டேதான் இருக்கும். உன்னோட மதிப்பு குழந்தை பெத்துக்குறதுல மட்டும் இல்லை. நீ எனக்குப் பொண்டாட்டியா இருக்குறதே எனக்குப் போதும்," என்று ஆறுதல் கூறினான்.

குடும்பத்தின் பாரபட்சமான எதிர்பார்ப்புகள், சமூகத்தின் முகம் சுளிக்கும் கேள்விகள், அலுவலக வேலைப் பளு என எது வந்தாலும், மீராவுக்கு அரவிந்த் வெறும் கணவனாக மட்டுமின்றி, தோழனாக, வழிகாட்டியாக, ஆதரவுக் கரமாகவே இருந்தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவில், பால்கனியில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருந்தபோது, மீரா அவனைக் கட்டியணைத்துத் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

"ஏன் அரவிந்த்... இந்த உலகமே என்னை ஏதோ ஒரு குறையோடு பார்க்கும்போது, நீ மட்டும் எப்படி என்னை இவ்வளவு முழுமையா நேசிக்கிற?" என்று குரல் தழு தழுக்கக் கேட்டாள்.

அரவிந்த் லேசாகச் சிரித்துக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

"மீரா, கல்யாணம்கிறது ரெண்டு பேர் சேர்ந்து சாப்பிடுறதும் தூங்குறதும் மட்டும் இல்லை. இந்த சமூகம் உன்னை வீழ்த்த நினைக்கும்போது, உனக்கு முன்னாடி கேடயமா நிற்கிறதுதான் உண்மையான அன்பு. உன்னோட நிம்மதியும் சுயமரியாதையும்தான் எனக்கு முக்கியம்."

வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ புயல்களும் குடும்ப நெருக்கடிகளும் வந்தன. ஆனால், புயலுக்குப் பின் அமைதியாய் நிற்கும் பெருமரத்தைப் போல அரவிந்த் எப்போதும் அவளோடு இருந்தான்.

அன்று இரவில், அவனது தோளில் தலைசாய்ந்தபடி மீரா மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்:

"அவளுக்குக் கிடைத்தது வெறும் கணவன் மட்டுமல்ல... சமூகத்தையும் குடும்பத்தையும் எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுத்த 'அவளின்' நிஜமான பாதி!"

கருத்துகள் இல்லை: