7 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

திருத்தணித் திருப்பதிகம் - முனைவர் பீ. பெரியசாமி

கடவுள் வாழ்த்து

உலகெலாம் துதிக்கும் ஓங்கார மூர்த்தி

உமையவள் ஆருயிர் குமரா!

அலைகுலாம் பொய்கை தணிகையில் வாழும்

ஆறுமா முகத்துடை அரசே!

கலைகளாம் தமிழால் பெரியசாமி பாடும்

கவிமாலை தொடுக்கவே உன்றன்

நிலைபெறும் அருளைத் தந்தெனை ஆளாய்

நின்னடி சரண்புகுந்தேனே.

உரை:

அகில உலகங்களும் போற்றித் துதிக்கின்ற, பிரணவத்தின் (ஓங்காரம்) முழு வடிவமாய் நின்றோங்கும் பரம்பொருளே! உமையன்னையின் ஆருயிர் மகனாகிய குமரப்பெருமானே! அலைகள் வீசும் புண்ணியச் சுனைகள் சூழ்ந்த திருத்தணி மாமலையில் வீற்றிருக்கும், ஆறு முகங்களை உடைய பேரரசே! சகல கலைகளின் வடிவமான செந்தமிழைக்கொண்டு, பெரியசாமி ஆகிய நான் தொடுக்கவிருக்கும் இந்த நூறு பாடல் கவிமாலையை எந்தவித இடையூறும் இன்றிச் செம்மையாகத் தொடுத்து முடிக்க, எக்காலத்திலும் மாறாத உனது பேரருளைத் தந்து என்னை ஆட்கொள்ள வேண்டும். உன்னுடைய திருவடிகளையே தஞ்சமெனச் சரணடைந்தேன், காப்பாய் வேலவனே!

திருத்தணித் திருப்பதிகம்

பண்:இந்தளம்

ராகம்: நாதநாமக்கிரியா

பாடல் 1:

சீரார் தணிகை மலை அமர்ந்த

செவ்வேள் குமரா குகேசனே,

காரார் மேகக் கழுமலத்தான்

காதல் மதலாய் கலைவடிவே!

பேரார் அடியார் பிணிதீர்க்கும்

பெருமான் உன்றன் அடித்தாமரை

ஆராய்ந்தேத்தி வாழாதே

அடியேன் நொந்து போவேனோ?

விளக்கம்:

சிறப்புகள் நிறைந்த திருத்தணி மலையில் வீற்றிருக்கின்ற, சிவந்த ஒளியையுடைய முருகப்பெருமானே! குகனில் உறையும் ஈசனே! கரிய மேகங்கள் சூழ்ந்த சீர்காழி (கழுமலம்) நகரின் இறைவனான சிவபெருமானின் அன்பு மிகு மகனே! சகல கலைகளின் வடிவமாகத் திகழ்பவனே! உன்னைத் துதிக்கும் பெருமைமிக்க அடியார்களின் பிறவிப் பிணியையும், உலகத் துன்பங்களையும் தீர்க்கும் பெருமானே! உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளை, மனதால் சிந்தித்து, துதித்து இன்புற்று வாழாமல், அறிவற்ற அடியவனாகிய நான் துன்பக் கடலில் சிக்கி அலைந்து திரியலாமோ? (என்னை ஆட்கொண்டருள்வாய்).

பாடல் 2:

மாலாயினார் தம் மனமுருக

வள்ளிக் கொடியைக் கைப்பிடித்தாய்

சேலாரும் பொய்கைத் தணிகையினில்

திகழும் சுடரே சிவசுதனே!

பாலாயின நற்றமிழ் இனிய

பாடப் பரிசில் தருவாயேல்

ஏலாதமிர்தம் உனக்களிப்பேன்

என்முன் வாராய் எம்பிரானே.

பொருள்:

உன் மீது பெரும் பித்து (மால்) கொண்ட அடியார்களின் மனம் உருகும்படி அருள்பவனே! குறிஞ்சி நிலத்து வள்ளிக்கொடி போன்ற வள்ளியம்மையை அன்போடு கைப்பிடித்தவனே! மீன்கள் துள்ளும் சுனைகள் நிறைந்த திருத்தணி மலையில் பிரகாசிக்கும் பேரொளியே, சிவபெருமானின் மகனே! பால் போன்ற இனிய நற்றமிழில் உன்னைப் பாடும் நற்பேற்றை (பரிசிலை) எனக்குத் தருவாயானால், தேவர்களாலும் பெற முடியாத அமுதம் போன்ற என் தூய அன்பை உனக்குக் காணிக்கையாக்குவேன். என் முன்னே எழுந்தருளி வருவாய், என் பெருமானே!

பாடல் 3:

சூலப் படையான் திருமைந்தா

சூரிக் குலத்தைச் சுடுகணையால்

மாலப்படவே பொருதழித்த

மைந்தா தணிகை மாமலையாய்!

காலப் படையான் நலிந்தென்னை

கலக்கக் கருதும் பொழுதுனது

கோலப் பொற்பாதம் நினையாதே

கொடியேன் குழைந்து போவேனோ?

பொருள்:

மூவிலைச் சூலம் ஏந்திய சிவபெருமானின் திருக்குமாரனே! அசுரர் குலத்தைச் சேர்ந்த சூரபத்மனை உனது கூர்மையான வேற்படையால் மயங்கி வீழும்படி போரிட்டு அழித்த வலிமைமிக்க வீரனே, திருத்தணி மாமலையில் வாழ்பவனே! காலனாகிய எமன் தன் பாசக்கயிற்றோடு வந்து என்னை வருத்தி, உயிரைக் கலக்க நினைக்கும் இறுதிக்காலத்தில், உன்னுடைய அழகான பொற்றாமரைத் திருவடிகளை நினைக்காமல், பாவியாகிய நான் மனமுடைந்து அழியலாமோ? (அழியமாட்டேன், உன்னை நினைப்பேன்).

முதல் பத்து: தணிகைச் செழுஞ்சுடர்

 பாடல் 1

 மின்னார் சடையான் திருமைந்தா மேவும் தணிகை மாமலையாய்

 பொன்னார் எழிலார் வேலேந்தும் புனிதா அடியேன் புன்மையினை

 என்னால் அறுக்க இயலாதே ஏங்கி உனைநாடி நின்றேனே

 அன்னாய் அத்தனே உன்னையல்லால் ஆரைக் காண்பேன் அடியேனே.

உரை:

மின்னலைப் போல ஒளிவீசும் சடாமுடியை உடைய சிவபெருமானின் திருக்குமாரனே! அழகிய திருத்தணி மாமலையில் விரும்பி வீற்றிருப்பவனே! பொன்னிற ஒளியும் ஆன்மாக்களின் ஆணவத்தைப் பிளக்கும் பேரழகும் கொண்ட ஞானவேலை ஏந்திய தூயோனே! இறைவா, அநாதியே தொட்டு என்னைத் தொடர்ந்து வரும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் விளைந்த எனது அறியாமையையும் பாவங்களையும் (புன்மையினை) என் சொந்த முயற்சியால் மட்டும் அறுத்து எறிய என்னால் இயலவில்லை. "யான், எனது" என்னும் அகந்தை அழியாமல் நான் படும் அவஸ்தையை நீயறிவாய். அதனால், வேறு வழியின்றி ஏங்கி, உனது பேரருளை நாடி உனது சந்நிதானத்தில் நிற்கிறேன். எனக்கு அம்மையும் அப்பனுமாய் (அன்னாய் அத்தனே) இருந்து காக்கும் பரம்பொருளே, உன்னைத் தவிர இந்த ஏழை அடியேனுக்குப் புகலிடமும் துணையும் வேறு யார் உளர்? உன்னையல்லாது வேறு யாரை என் துயர் தீர்க்கும் தெய்வமாகக் காண்பேன்? (நீயே என் கதி).

 பாடல் 2

 முத்தைத் தருமா மணிகண்டன் மைந்தா முளரிப் பொய்கைசூழ்

 சித்தைத் தெளிவிக்கும் தணிகையினில் திகழும் தேவா சேவகனே

 பத்தைத் தருவாய் பவமறுப்பாய் பாவி அடியேன் உனைப் பாலகா

 வித்தைத் தருவாய் என்றனைநீ விரைந்து காப்பாய் வேலவனே.

உரை:

முத்து போன்ற வெண்மையான திருநீற்றையும், ஆலகால நஞ்சை அடக்கிய நீலகண்டத்தையும் உடைய சிவபெருமானின் திருமகனே! தாமரை மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும், தன்னை அடைந்தாரது கலங்கிய சித்தத்தை (மனதை) நிர்மலமாகத் தெளிவிக்கக் கூடியதுமான திருத்தணி மலையில் ஒளிரும் தேவாதி தேவனே! அடியார்க்கு அடியனாய் நின்று சேவை செய்யும் கருணைக் கடலே! இறைவா, மும்மலச் சேற்றில் உழலும் இந்தப்பாவி அடியேனுக்கு, உனது திருவடிகளில் என்றும் மாறாத உருகும் பக்தியை (பத்தைத் தருவாய்) நீயே தந்தருள வேண்டும். அதுமட்டுமன்றி, பிறவிப் பெருங்கடலாகிய இந்தப் பாவக் கடலை அறுத்து எறிய வேண்டும் (பவமறுப்பாய்). உன்னைப் பாடுவதற்குரிய ஞானக்கல்வியையும், சொல்லாற்றலையும் (வித்தைத் தருவாய்) எனக்குள் நீயே இருந்து அருள் செய்ய வேண்டும். தாமதிக்காமல் விரைந்து வந்து, உனது கூர்மையான ஞானவேலினால் எனது அஞ்ஞானத்தைப் பிளந்து எம்மைக் காத்தருள்வாய்.

 பாடல் 3

 வள்ளிப் படப்பைத் தணிகையினில் வாழும் தேவர் தம்பிரானே

 புள்ளி மயில்மேல் ஏறிவரும் புனிதா புண்ணிய நாதனே

 வெள்ளி நிலவின் ஒளிகாட்டும் விமலன் பெற்ற பேரொளியே

 அள்ளி அமுதைத் தராதிருந்தாய் அடியேன் அலந்து போவேனோ.

உரை:

வள்ளிக்கொடிகள் படர்ந்து கிடக்கும் இயற்கை எழில் கொஞ்சும் திருத்தணி மலையில் வீற்றிருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனே (தம்பிரானே)! புள்ளிகளை உடைய அழகிய தோகையைக் கொண்ட நீலமயில் வாகனத்தின் மேல் கம்பீரமாக ஏறிவரும் தூயவனே! புண்ணியங்களின் வடிவாய் விளங்கும் நாதனே! வெள்ளிய நிலவின் குளிர்ந்த ஒளியைத் தன் திருச்சடையில் சூடியுள்ள விமலனாகிய சிவபெருமான் ஈன்றெடுத்தப் பேரொளிப் பிழம்பே! தாகத்தோடு இருக்கும் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவது போல, உனது பேரின்ப அருளமுதத்தை அள்ளி எனக்குத் தராமல் இப்படி என்னைச் சோதித்துக் கொண்டிருப்பது அழகோ? உன் அருளமுதம் கிடைக்கப் பெறாமல், அடியேன் இந்த உலகியல் துன்பங்களில் சிக்கி மனமும் உடலும் அலைந்து அழிந்து போகலாமா? உடனே வந்தருள்செய்.

 பாடல் 4

 கானக் குறவர் மடமகளைக் காதல் கொண்டு கைப்பிடித்தாய்

 தேனக் கமலத் தணிகையினில் திகழும் தெய்வ சிகாமணியே

 ஊனக் குரம்பை உவவாதே உன்னைப் பாடி உருகுகின்றேன்

 ஆனப் பெருமை உடையானே அடியேன் துயரம் அறுப்பாயே.

உரை:

காட்டில் வாழும் வேடர்களாகிய குறவர்களின் மகளான, இச்சா சக்தியின் வடிவமான வள்ளியம்மையின் மேல் அளப்பரிய காதல் கொண்டு, அவளைத் தேடிச் சென்று ஆட்கொண்டு கைப்பிடித்த வள்ளலே! வண்டுகள் தேனையுண்ணும் தாமரை மலர்கள் நிறைந்த சுனைகளைக் கொண்ட திருத்தணி மலையில் ஒளிரும் தெய்வங்களுக்கெல்லாம் தலைசிறந்த சிகாமணியே! இரத்தமும் சதையும் கொண்டு, நோய்களுக்கெல்லாம் இருப்பிடமாய் விளங்கும் இந்த ஊனாலாகிய சிற்ற உடலை (ஊனக் குரம்பை) ஒரு பொருட்டாக மதியாமல், அழியாத உனது பேரழகைப் பாடிப் பாடி என் நெஞ்சம் கசிந்து உருகுகின்றேன். சொல்லொணா உலகப் பெருமைகளும், பேரருள் குணங்களும் கொண்ட பெருமானே! இந்த அடியேனின் அறியாமைத் துயரங்களையும், பிறவித் துன்பங்களையும் உனது கருணையினால் வேரறுத்து அருள வேண்டும்.

 பாடல் 5

 சூர்மா மடிய அமராடித் தோகை மயில்மேல் வலம்வந்தாய்

 கார்மா மேகந் தவழ்கின்ற கவினார்த் தணிகைக் காவலனே

 ஆர்மா மதியஞ் சூடியவன் அன்பாய் ஈன்ற அருளமுதே

 வேர்மா றாத வினையென்னை நலியா வண்ணம் விடுத்தருளே.

உரை:

கடல் நடுவே மாமரமாய் நின்ற சூரபத்மன் மடிந்து விழும்படி, தேவர்களின் துயர் துடைக்கப் பெரும் போரிட்டு, அவனையே மயிலாகவும் சேவலாகவும் மாற்றி, அந்தத் தோகை மயிலின் மீதேறி உலகை வலம் வந்த வீரனே! கரிய பெரிய மேகங்கள் வந்து முத்தமிட்டுத் தவழ்கின்ற எழில்மிகு திருத்தணி மலையைக் காக்கும் காவலனே! அரிய பெரிய சந்திரப் பிறையைத் தன் சடையில் சூடிய சிவபெருமான், உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அன்போடு ஈன்றெடுத்த அமிர்தமே! எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அதன் வேர் அழியாமல், ஆன்மாவைத் தொடர்ந்து வந்து பற்றிக் கொள்ளும் பிராரப்த, சஞ்சித வினைகள் என்னை மேலும் வருத்தி நலியச் செய்யாதவாறு, என்னை அந்த வினைகளின் பிடியிலிருந்து விடுவித்து உனது அடிமைத் திறத்தில் சேர்த்துக் கொள்வாயாக.

 பாடல் 6

 மாலோன் மருகா மறைபொருளே மாறா இன்பப் பெருக்கேநீ

 சேலோன் பாயும் தணிகையினில் தேனும் பாலும் ஆயினாயே

 நாலோ வேதப் பொருளறியா நம்பன் ஈன்ற நற்குமரா

 காலோன் பாசம் வாராமே காப்பாய் காப்பாய் கந்தனே.

உரை:

திருமாலின் (மாலோன்) மருகனே! நான்கு வேதங்களும் தேடித் திரியும் பரம்பொருளின் உண்மைப் பொருளாக (மறைபொருள்) விளங்குபவனே! எக்காலத்திலும் குறையாத, எதனாலும் மாறாத பேரின்பப் பெருக்காக அடியார்களின் நெஞ்சில் பொங்குபவனே! சேல் மீன்கள் துள்ளிக் குதிக்கும் சுனைகளை உடைய திருத்தணி மலையில், உன்னைத் துதிப்போருக்குத் தேனும் பாலும் கலந்தது போன்ற இனிய சுவையான அனுபவமாகத் திகழ்பவனே! நான்மறைகளும் பறைசாற்றியும், அதன் முழுப் பொருளையும் எட்ட முடியாத பரமசிவன் பெற்றெடுத்த நற்குணங்களின் இருப்பிடமான குமரனே! என் ஆயுள் முடியும் காலத்தில் எமதர்மனின் (காலோன்) பாசக்கயிறு என் உயிரைப் பறிக்க வந்து என்னை அச்சுறுத்தாத வண்ணம், உனது அபயக் கரத்தைக் காட்டி என்னை எப்போதும் காத்தருள வேண்டும், கந்தனே!

 பாடல் 7

 விண்ணோர் எல்லாம் உனைவணங்கி வீழ்ந்து கிடந்து துதிக்கின்றார்

 கண்ணார் சோலைத் தணிகையினில் கனிவாய் அமர்ந்த கற்பகமே

 மண்ணார் உலகத் துயரெல்லாம் மாற்றி ஆளும் மாமழையே

 பண்ணார் விதியைக் கடந்தென்னை ஆளாய் பரமன் பாலகனே.

உரை:

இந்திரன் முதலான தேவர்கள் யாவரும் உனது பேராற்றலை உணர்ந்து, உன்னடி வீழ்ந்து வணங்கி, சாஷ்டாங்கமாகத் தரைமீது கிடந்து உன்னைப் போற்றுகின்றார்கள். கண்கள் குளிரும் படி பசுமையான சோலைகள் சூழ்ந்த திருத்தணி மலையில், கேட்போர்க்குக் கேட்கும் வரங்களை அள்ளித்தரும் ஞானக் கற்பக விருட்சமாய் வீற்றிருப்பவனே!

மண்ணுலகில் பிறந்து உழலும் மனிதர்களின் வறுமை, நோய், அறியாமை போன்ற சகல துயரங்களையும் தடுத்து, அருமழை போல அருளைப் பொழிந்து ஆளுகின்ற மாமழையே! பிரம்மன் எழுதிய விதியின் பயனால் நான் படும் அவஸ்தைகளைக் கடந்து, அந்த விதியையே மாற்றி எழுதும் வல்லமை கொண்ட நீ, என்னை உனது தனிப்பெரும் கருணையினால் ஆட்கொள்ள வேண்டும், பரமசிவனின் பாலகனே!

 பாடல் 8

 பேயார் காட்டிற் நடமாடும் பித்தன் ஈன்ற பெருமானே

 சேயார் தணிகைக் குன்றமர்ந்த செல்வக் குமரச் செவ்வேளே

 நோயார் பிறவிப் பெருங்கடலில் நொந்து நொந்து மூழ்காதே

 காயா மரம்போல் நில்லாதே காப்பாய் கருணைக் கடலே.

உரை:

சுடுகாடாகிய பேய்கள் வாழும் காட்டில், உலக உயிர்களின் கர்ம வினைகளைத் தகிக்கும் பொருட்டு நடனமாடும் "பித்தன்" என்று அடியவர்களால் உரிமை கலந்த பத்தியோடு அழைக்கப்படும் சிவபெருமான் ஈன்றெடுத்த பெருமைமிக்கவனே! தூரத்திலிருந்தே பார்த்தாலும் மனதைக் கொள்ளைகொள்ளும் எழிலுடைய திருத்தணி மலையில் அமர்ந்த செல்வக் குமரனே, செவ்வேளே! பிணிகளும் மூப்பும் நிறைந்த இந்த மனிதப் பிறவியாகிய பெருங்கடலில் விழுந்து, ஒவ்வொரு நாளும் துன்பங்களால் நொந்து நொந்து, மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து மூழ்கிப் போகாமல் என்னை நீ காக்க வேண்டும். கனி தராத காயா மரத்தைப் போலச் சலனமற்று நில்லாமல், கருணைக் கடலாகிய நீ உடனே வந்து உனது அருட்கரத்தால் என்னைத் தூக்கிவிட்டுக் காத்தருள வேண்டும்.

 பாடல் 9

 தாரார் மார்பா தணிகையினில் தங்கும் தவத்தின் தனிவடிவே

 ஏரார் முத்தைத் தருபவனே எந்தாய் எனையாள் எம்பிரானே

 நீரார் சடையான் பெற்றெடுத்த நிமலா நின்தன் அடித்தாமரை

 ஆராய்ந் தேத்தி வாழாதே அடியேன் அழிந்து போவேனோ.

உரை:

கடம்ப மலர் மாலைகளையும் நறுமண மாலைகளையும் அணிந்த மார்பினை உடையவனே! திருத்தணி மலையில் தவம் செய்யும் முனிவர்களுக்கெல்லாம் தவத்தின் தத்துவமாய், அதன் தனி வடிவாய் விளங்குபவனே! அடியார்களுக்கு அழகிய முத்துப் போன்ற ஞானப் பரிசுகளை வாரி வழங்குபவனே! என் தந்தையே, என்னை ஆட்கொண்ட எம்பிரானே! கங்கை நீர் தங்கிய சடாமுடியை உடைய பரமசிவன் பெற்றெடுத்த மலமற்ற தூயவனே (நிமலா)! உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளின் பெருமைகளை என் சிற்றறிவால் சிந்தித்து, ஆராய்ந்து, மனமுருகித் துதித்து, இவ்வுலகில் இன்புற்று வாழத் தெரியாமல், வீணான உலகியல் மாயைகளில் சிக்கி இந்த அடியேன் அழிந்து போகலாமா? என் அறியாமை நீக்கி உன் திருவடி தந்து காத்தருள்.

 பாடல் 10 (திருக் கடைக்காப்பு)

 திண்ணார் தணிகைக் குமரன்றனைச் சீரார் பதிகத் தமிழ்களால்

 மண்ணார் உலகிற் பெரியசாமி மனத்தால் உருகிப் பாடியசொல்

 பண்ணார் விதியால் கற்றவர்கள் பாவ வினைகள் பறந்தோடும்

 விண்ணார் உலகும் அவர்தமக்காய் விரும்பி வழியைத் திறந்திடுமே.

உரை:

உறுதியும் வலிமையும் மிக்க திருத்தணி மலையில் வீற்றிருக்கும் குமரப் பெருமானை, சீர்மிகுந்த பதிகத் தமிழ் மாலைகளால், இந்த மண்ணுலகில் வாழும் பெரியசாமி ஆகிய நான், என் உள்ளம் உருகி, பக்திப் பெருக்குடன் பாடிய இந்த நன்மொழிகளை, இசை நயத்தோடு (பண்ணார் விதியால்) உணர்ந்து ஓதுபவர்கள் மற்றும் கற்பவர்களுடைய சஞ்சித வினைகளும் பாவங்களும் இருந்த இடம் தெரியாமல் பறந்தோடிப் போகும். அதுமட்டுமன்றி, தேவர்கள் வாழும் மேலுலகமும், சிவலோகமும் அவர்களுக்குரிய பேரின்ப வீடாகத் திகழும்படி, தானே விரும்பித் தன் கதவுகளைத் திறந்து அவர்களுக்கு நற்கதி அளிக்கும் (இது சத்தியம்).

 இரண்டாம் பத்து: பிணிதீர்த்த பதிகம்

 பாடல் 11

 என்பார் வினைகள் தீர்த்திடுவாய் எழிலார்த் தணிகைக் குமரினனே

 மன்பார் உலகில் உனையல்லால் மற்றோர் துணைதான் அடியேற்குச்

 சொன்பா ராகக் கேட்கின்றேன் சோகம் நீக்கும் சுடரொளியே

 அன்பா உன்றன் அருள்தந்து காப்பாய் அமரர் அதிபதியே.

உரை:

எலும்புகளை மாலையாக அணிந்த சிவபெருமானின் மகனாய், எழில் கொஞ்சும் திருத்தணி மலையில் வீற்றிருக்கும் குமரனே! நிலைபெற்ற இந்த மண்ணுலகில் உன்னைத் தவிர இந்த அடியேனுக்கு வேறு ஒரு துணையோ, புகலிடமோ யாதுமில்லை. என் சொல்லையே பற்றிக்கொண்டு (சொன்பாராக) உன்னிடம் கதறிக் கேட்கின்றேன். என் மனதில் உள்ள அறியாமைச் சோகங்களை எல்லாம் நீக்கும் ஞானச் சுடரொளியே! அன்பின் வடிவமே, உனது பேரருளை எனக்குத் தந்து, என்னை இந்த உலகத் துன்பங்களிலிருந்து காக்க வேண்டும், தேவர்களின் தலைவனே!

 பாடல் 12

 காடார் இடத்திற் பேயோடு கபாலம் ஏந்துங் கண்ணுதலோன்

 சேடார் தணிகைக் குன்றமர்ந்த செல்வக் குமரச் செம்மலநீ

 வாடா மலர்போல் உன்னடிகள் வணங்கிப் பாடும் வரம்தருவாய்

 வீடாப் பிணிகள் வாராமே விலக்காய் உன்றன் வேலினாலே.

உரை:

சுடுகாடாகிய இடத்தில் பேய்களுடன் கூடி நடனமாடி, கையில் பிரம்ம கபாலம் ஏந்தி நிற்கும் முக்கண்ணனாகிய சிவபெருமானின் பெருமைமிக்க மகனே! அழகு நிறைந்த திருத்தணி மலையில் அமர்ந்திருக்கும் செல்வக் குமரனே, செம்மலே! எக்காலத்திலும் வாடாத கற்பக மலரைப் போன்ற உனது திருவடிகளை, நான் எப்போதும் வணங்கிப் பாடும் நல்வரத்தை எனக்குத் தந்தருள வேண்டும். என்னை விட்டு நீங்க மறுக்கும் கர்ம வினைகளால் வரும் பிணிகளும், பிறவித் துன்பங்களும் என்னை அணுகாதவாறு, உனது கூர்மையான ஞானவேலினைக் கொண்டு அவற்றை விரட்டி அடித்தருள்வாய்.

 பாடல் 13

 கல்லார் நெஞ்சில் உறையாத காரார் தணிகைக் காவலனே

 வில்லார் புருவத் தினைக்கினியாள் மேவும் நாதா மெய்ப்பொருளே

 பல்லார் துதிக்கும் பரமனவன் பாலன் என்றுன் அடிபணிந்தேன்

 சொல்லாத் துயரம் நீக்கியெனைச் சுகமாய் வாழச் செய்திடுமே.

உரை:

பக்தி உணர்வும் ஈரமும் இல்லாத, கல் போன்ற நெஞ்சுடைய மாந்தர்களின் மனதில் எக்காலத்திலும் குடிபுகாத, மேகங்கள் சூழ்ந்த திருத்தணி மலையின் காவலனே! வில் போன்ற புருவத்தை உடைய குறிஞ்சி நிலத்து வள்ளியம்மையின் மனதிற்கு இனிய நாதனே, உண்மைப் பொருளே! முனிவர்களும் தேவர்களும் துதிக்கும் பரமசிவனின் மைந்தன் நீயே என்று உணர்ந்து, உனது திருவடிகளைச் சரணடைந்தேன். பிறரிடம் வாயால் சொல்ல முடியாத அளவுக்கு என் மனதை வாட்டும் ரகசியத் துயரங்கள் அனைத்தையும் வேரறுத்து, என்னை இப்பூமியில் நிம்மதியுடனும் பேரின்பத்துடனும் வாழச் செய்தருள்வாய்.

 பாடல் 14

 கன்றா நின்ற கயமதனைப் பிளந்தான் மருகா காரொளியே

 சென்றா தணிகைக் குன்றமர்ந்த தேவ தேவா சிவசுதனே

 வென்றாய் சூரனை விண்ணவரும் வியக்க வேற்படை ஏந்தினாயே

 நின்றாய் என்முன் வாராயோ நிமலா நீல மயிலோனே.

உரை:

தன் முன்னே மத யானையாக (கயமதன்) வந்த அசுரனைப் பிளந்து அழித்த திருமாலின் (மாலோன்) மருகனே, கரிய மேகம் போன்ற குளிர்ந்த ஒளியை உடையவனே! யாவரும் நாடிச் செல்லும் திருத்தணி மலையில் அமர்ந்த தேவாதி தேவனே, சிவசுதனே! விண்ணுலகத் தேவர்கள் அனைவரும் வியந்து போற்றும்படி, உனது ஒப்பற்ற வேற்படையை ஏந்திச் சூரபத்மனை வென்ற தீரனே! என் சிந்தையில் எப்போதும் நின்றிருக்கும் பெருமானே, நீல மயில் வாகனத்தின் மேலேறி என் கண் முன்னே நேரில் எழுந்தருளி வரமாட்டாயோ? என் மலங்களை நீக்க வாராய்.

 பாடல் 15

 பாரா வாரக் கடல்சூழ்ந்த பாரில் அடியேன் படும்அவலம்

 தீரா திரங்கும் தணிகையினில் திகழும் நாதா நீயறிவாய்

 ஆரா அமுதே உனதுபதம் அன்றோ அடியேன் புகலிடந்தான்

 வாராய் வாராய் எம்பிரானே வந்து வினையை மாற்றிடுமே.

உரை:

பரந்த அலைகளை உடைய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில், கர்ம வினைகளின் பிடியில் சிக்கி இந்த அடியேன் படும் அவலங்களையும் துன்பங்களையும், அடியவர்க்காக என்றும் குறையாமல் இரங்கி அருள் செய்யும் திருத்தணி மலையில் ஒளிரும் நாதனே, நீ நன்கு அறிவாய். எட்டாத பேரொளியே, தெவிட்டாத அமுதே! உன்னுடைய திருவடிகள் அல்லவோ இந்த ஏழை அடியேனின் ஒரே புகலிடம்? என் பெருமானே, எனக்காக உடனே வாராய், வந்து என்னை வாட்டும் முன்வினைகளின் பயன்களை மாற்றி எனக்கு நற்கதி அருள்வாய்.

 பாடல் 16

 பொன்னார் மேனிப் புண்ணியன்றன் புதல்வா புனிதா புயலேநீ

 தென்னார் தணிகைப் பொய்கைசூழ் தேவ தேவா தாரகனே

 முன்னார் வினையின் பயனாக மூண்ட துயரம் முழுதகல

 என்னார் உயிரின் துணையாகி எழுக என்முன் எம்பிரானே.

உரை:

"பொன்னார் மேனியனே" என்று துதிக்கப்படும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமானின் புதல்வனே, தூயவனே! அடியவர்களின் வறுமை நீக்கும் அருட்கொண்டல் (புயல்) போன்றவனே! தென்திசையில் விளங்கும் எழில்மிகு திருத்தணி மலையின் பொய்கைகள் சூழ்ந்த தேவ தேவனே, ஆன்மாக்களைக் கரை சேர்க்கும் தாரக மந்திரத்தின் வடிவமே! முற்பிறவிகளில் நான் செய்த வினைகளின் விளைவாக இப்போது எனக்கு மூண்டுள்ள துயரங்கள் யாவும் முற்றிலும் அழியும்படி, என் ஆருயிரின் துணையாக நின்று, என் கண் முன்னே என் பெருமானே நீ எழுந்தருள வேண்டும்.

 பாடல் 17

 சூலப் படையான் திருமைந்தா சூரன் குலத்தைச் சுட்டெரித்தாய்

 மாலப் படவே தணிகையினில் வாழும் நாதா மாண்புடையாய்

 காலப் பயங்கள் வாராமே காக்கும் வேலா கருணையினாய்

 ஞாலப் புகழ்சேர் நின்னடிகள் நல்காய் அடியேன் நடுங்காமே.

உரை:

மூவிலைச் சூலத்தை ஏந்திய சிவபெருமானின் திருக்குமாரனே! தேவர்களை வதைச் செய்த சூரபத்மனின் குலத்தை உனது ஞானத்தீயினால் சுட்டெரித்தவனே! அசுரர்கள் மயங்கி அழியும்படிப் போரிட்டு, திருத்தணி மலையில் சாந்த சொரூபியாய் வாழும் பெருமைமிக்க நாதனே! ஆயுள் முடியும் காலத்தில் வரும் எம பயம் (காலப் பயங்கள்) என்னை அணுகாதவாறு காக்கும் சக்தி வாய்ந்த வேலை ஏந்திய கருணைக் கடலே! உலகத்தாரால் போற்றப்படும் உனது திருவடிகளை, மரண பயத்தால் அடியேன் நடுங்கி அழியாதவாறு எனக்குத் தந்தருள வேண்டும்.

 பாடல் 18

 குன்றா வாழ்வைக் குலமக்கட்குக் கொடுக்கும் குன்றாத் தணிகையினாய்

 மின்றாழ் சடையான் திருமகனே மிக்க வடிவே மெய்விளக்கே

 சென்றா யுன்றன் திருவடிவைத் தேடித் தேடி இளைத்துவிட்டேன்

 ஒன்றாய் நின்றாய் எனை ஆளாய் ஓம்நற் பிரணவ வுருவோனே.

உரை:

உன்னை நம்பிய அடியார்களின் குலத்திற்கு எக்காலத்திலும் குறையாத அழியாத நல்வாழ்வைத் தந்தருளும், என்றும் அழியாத திருத்தணி மலையில் வீற்றிருப்பவனே! மின்னல் போன்ற ஒளியுடைய சடாமுடியைக் கொண்ட சிவனின் திருமகனே, பேரழகின் வடிவமே, அடியார்களின் அஞ்ஞான இருளை நீக்கும் மெய்விளக்கே! உன்னுடைய அந்தப் பேரருள் வடிவத்தைத் தேடித் தேடிப் பல இடங்களுக்கும் அலைந்து என் மனம் இளைத்துப் போய்விட்டேன். அகில உலகங்களுக்கும் ஆதாரமாய் ஒன்றாய் நின்ற பரம்பொருளே, பிரணவ மந்திரத்தின் (ஓம்) உட்பொருளாய் விளங்குபவனே, என்னை உனது அடிமையாக ஏற்று ஆட்கொள்வாயாக.

 பாடல் 19

 பிறவிப் பெருநோய் வாராமே காக்கும் மருந்தே பேரொளியே

 துறவிப் பெரியோர் துதிக்கின்ற தணிகைத் துரையே தூயவனே

 அறவிப் பொருளாய் நின்ற உன்றன் அடித்தா மரையை மறவாதே

 மறவிக் கடலில் வீழாதே மதியாய் எனையாள் மாமணியே.

உரை:

மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்த நெடிய பிறவியாகிய பெருநோயே வாராமல் தடுத்து, ஆன்மாவிற்கு முக்தி அளிக்கும் உன்னத மருந்தே, பேரொளிப் பிழம்பே! பற்றற்ற துறவிகளும் பெரியோர்களும் அநுதினமும் துதிக்கின்ற திருத்தணி மலையின் துரையே, தூயவனே! தர்மத்தின் வடிவமாகவும் அதன் பொருளாகவும் விளங்கும் உன்னுடைய தாமரைத் திருவடிகளை நான் ஒருபோதும் மறவாமல் இருக்க வேண்டும். உலக ஆசைகளால் வரும் மறதி என்னும் இருள் கடலில் நான் வீழ்ந்து அழியாதவாறு, எனக்கு நல்லறிவைத் தந்து, என்னை ஆட்கொள்ளும் சிந்தாமணியே, என் மேல் இரங்குவாயாக.

 பாடல் 20 (திருக் கடைக்காப்பு)

 சீரார் தணிகைக் குமரன்றனைச் செழுநற் றமிழால் பதிகமதாய்ப்

 பாரார் போற்றும் பெரியசாமி பாடிப் பரவிய பாமாலையை

 ஆராய்ந் தேத்திக் கற்பவர்கள் அல்லல் பிணிகள் அகன்றோடும்

 பேரார் சிவன்றன் உலகினில்பே ரின்ப மாக வாழ்வாரே.

உரை:

சிறப்புகள் நிறைந்த திருத்தணி மலையில் வீற்றிருக்கும் குமரப் பெருமானை, செழுமையான நற்றமிழ்ப் பதிகங்களாக, உலகத்தாரால் மதிக்கப்படும் பெரியசாமி ஆகிய நான் பாடிப் பரவிய இந்தத் தூய பாமாலையை, அதன் உட்பொருளை உணர்ந்து ஆராய்ந்து துதித்துக் கற்பவர்களுடைய உலகத் துன்பங்களும், உடலையும் உள்ளத்தையும் வாட்டும் நோய்களும் (அல்லல் பிணிகள்) அவர்களை விட்டு முற்றிலும் அகன்றோடும். அவர்கள் பெருமைமிக்க சிவபெருமானின் சிவலோகத்தை அடைந்து, அங்கே எக்காலமும் அழியாத பேரின்பப் பெருவாழ்வு வாழ்வார்கள் என்பது திண்ணம்.

மூன்றாம் பத்து: சரணாகதிப் பத்து

 பாடல் 21

 அடைக்கலம் என்றுன் அடிபணிந்தேன் ஆரா அமுதே தணிகையினாய்

 துடைக்கலம் என்றன் துயரெல்லாம் தோகை மயில்மேல் வருவானே

 சடைக்கலம் தாங்கும் சங்கரன்றன் தனயன் என்றுன் சரண்புகுந்தேன்

 கொடைக்கலம் தந்து காத்தருள்வாய் குமரக் கடவுள் கோமானே.

உரை:

"இனி எனக்கு வேறு கதியில்லை, நீயே தஞ்சம" என்று உனது திருவடிகளில் முற்றிலும் சரணடைந்தேன், தெவிட்டாத பேரமுதமாய் விளங்கும் திருத்தணி நாதனே! அழகிய தோகையுடைய மயிலின் மேலேறி வந்து, இந்த ஏழையின் நெஞ்சில் உள்ள மும்மலத் துயரங்கள் அனைத்தையும் துடைத்து எறிய வேண்டும். கங்கையைத் தன் சடையில் தாங்கிய சங்கரனாகிய சிவபெருமானின் திருமகனே என்று உன்னை உணர்ந்து உன் சரண் புகுந்தேன். உனது பேரருள் என்னும் கொடையைத் தந்து, எளியேனைக் காத்தருள வேண்டும், குமரக் கடவுளாகிய எம்மிறைவனே!

 பாடல் 22

 பற்றே அடியேன் உனைப்பற்றினேன் பாவி வினைகள் பற்றாமல்

 சுற்றே சோலைத் தணிகையினில் சுடராய் நின்ற சுப்பிரமணியா

 முற்றே என்தன் நாவினிலே மூளும் தமிழாய் முளைப்பாயே

 பெற்றே உன்றன் பேரருளைப் பேசா திருப்பேன் பேதையனே.

உரை:

உலகப் பற்றுக்கள் அனைத்தையும் துறந்து, அழியாத ஒரே பற்றாக உன்னையே பற்றிக் கொண்டேன். என் முற்பிறவிப் பாவ வினைகள் என்னை மீண்டும் வந்து பற்றிக் கொள்ளாதவாறு காப்பாய். சோலைகள் சூழ்ந்த திருத்தணி மலையில் ஞானச்சுடராய் ஒளிரும் சுப்பிரமணியனே! எனது நாவினில் என்றும் மாறாத, பக்தி மூளும் நற்றமிழாய் நீயே முளைத்து நின்று என்னைப் பாட வைக்க வேண்டும். உனது பேரருளைப் பெற்ற பிறகும், உன்னைப் பாடாமல் மௌனமாக இருக்க நான் ஒன்றும் அறிவற்ற பேதையன் அல்லன், உன் புகழைப் பாடிக் கொண்டே இருப்பேன்.

 பாடல் 23

 மண்ணில் பிறந்த மானுடர்தம் மயக்கம் நீக்கும் மாமருந்தே

 தண்ணில் சோலைத் தணிகையினில் தங்கும் நாதா சண்முகனே

 கண்ணில் ஒளியாய் நெஞ்சினிலே கருத்தாய் நின்ற கற்பகமே

 புண்ணில் புரைபோல் என்வினையைப் போக்காய் உன்றன் பொன்னடியே.

உரை:

இந்த மண்ணுலகில் பிறந்து, மாயை என்னும் வலைக்குள் சிக்கித் தவிக்கும் மானுடர்களின் அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் உன்னத மாமருந்தே! குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருத்தணி மலையில் உறையும் ஆறுமுகப் பெருமானே! என் கண்களுக்கு ஒளியாகவும், என் நெஞ்சில் எழும் நற்கருத்தாகவும் வீற்றிருக்கும் கற்பக விருட்சமே! புண்ணில் ஏறிய நஞ்சினைப் போல என்னை வதைக்கும் என் கர்ம வினைகளை, உனது பொன்னான திருவடிகளின் ஸ்பரிசத்தால் முற்றிலும் போக்கி அருள வேண்டும்.

 பாடல் 24

 ஆலமுண்டான் திருமகனே அடியேன் உன்றன் அடைக்கலமே

 சீல முண்டார் தணிகையினில் திகழும் வேலா செவ்வேளே

 கோல முண்ட உன்றன்வடிவைக் கும்பிட்டுருகிக் கசிந்துருகி

 ஞால முண்டான் ருகனேநான் நாளும் ஏத்தி நிற்குவனே.

உரை:

உலகைக் காக்கும் பொருட்டு ஆலகால நஞ்சினைத் தன் கண்டத்தில் அடக்கிய சிவபெருமானின் திருமகனே, அடியேன் உனது அடைக்கலமாய் நிற்கின்றேன். நற்குணங்கள் (சீலம்) நிறைந்த அடியவர்கள் போற்றும் திருத்தணி மலையில் ஒளிரும் வேலா, செவ்வேளே! பேரழகு பொருந்திய உனது திருவுருவை மனக்கண்ணால் கண்டு, கைகூப்பிக் கும்பிட்டு, நெஞ்சம் கசிந்து உருகி, அன்று மண்ணுலகை உண்ட திருமாலின் மருகனே, உன்னை நான் நாளும் நாளும் துதித்துக் கொண்டே இருப்பேன்.

 பாடல் 25

 கல்லாய்க் கிடந்த நெஞ்சினையும்கனியச் செய்யும் கதிர்வேலா

 தொல்லாய்த் தணிகைக் குன்றமர்ந்த தோகை மயில்மேல் வருவானே

 புல்லாய்ப் பிறந்தும் உன்னடியில் பூத்துக் கிடக்கப் பெறுகிலேன்

 எல்லா வுலகும் உடையானே எனைநீ தள்ளல் இயல்பாமோ.

உரை:

பக்தியே இல்லாத கல் போன்ற கடினமான நெஞ்சத்தையும், உனது கருணையால் கனிந்த பழத்தைப் போல் உருகச் செய்யும் ஒளிரும் கதிர்வேலை உடையவனே! தொன்மையான திருத்தணி மலையில் அமர்ந்து, தோகை மயிலேறி அடியார்க்கு அருள் செய்ய வருபவனே! உனது திருத்தணி மலையில் ஒரு சாதாரணப் புல்லாய்ப் பிறந்தாவது உன் திருவடிப் பட்டுப் பூத்துக் கிடக்கக் கூட நான் பாக்கியம் செய்யவில்லையே! அகில அண்ட சராசரங்களையும் உடையவனே, உன்னை நம்பி வந்த என்னை நீ கைவிடுவது உனது கருணை இயல்புக்கு அழகாகுமோ? ஆகாது, என்னை ஏற்றருள்.

 பாடல் 26

 மாலுக் கினிய ருகனே மாறா இன்ப மழையேநீ

 சேலுக் கினிய தணிகையினில் செவ்வேள் ஆகி நின்றாயே

 பாலுக்கினிய செந்தமிழால் பாடும் வரமே தாராமல்

 ஆலுக் கினிய நிழல்போல அமர்ந்தே இருக்கல் அழகாமோ.

உரை:

திருமாலுக்கு உகந்த அன்பான மருகனே, ஆன்மாக்களின் தாகம் தீர்க்கும் மாறாத பேரின்ப அருண்மழையே! சேல் மீன்கள் துள்ளும் பொய்கைகளையுடைய திருத்தணி மலையில் செவ்வேளாக வீற்றிருப்பவனே! பால் போன்ற சுவையுடைய செந்தமிழால் உன்னைப் பாடும் நல்வரத்தை எனக்குத் தராமல், கல்லால மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்திருக்கும் உன் தந்தை சிவபெருமானைப் போல நீயும் மௌனமாக அமர்ந்திருப்பது தகுமோ? உடனே எனக்குப் பாடும் திறன் தந்து அருள்செய்.

 பாடல் 27

 எடுத்த பிறவி தீரவொரு வழியைக் காட்டாய் எம்பிரானே

 தொடுத்த தமிழால் தணிகையினைத் துதிக்கும் வேலா தாரகனே

 மடுத்த நெஞ்சில் உனைவைத்துப் போற்றும் அடியார் நடுவினிலே

 அடுத்தென் வினையை அறுத்திடநீ வாராய் வாராய் அடியேன்பால்.

உரை:

நான் எடுத்துள்ள இந்த மானுடப் பிறவியின் துன்பங்கள் தீர்ந்து, முக்தி அடைவதற்குக் தகுந்ததொரு நல்வழியைக் காட்டியருள வேண்டும் என் பெருமானே! தொடுக்கப்பட்ட பாமால தமிழால் திருத்தணியைத் துதிக்கும் வேலேந்திய தாரக மந்திர மூர்த்தியே! பக்தி வெள்ளம் மடுத்த (நிறைந்த) நெஞ்சோடு உன்னை எப்போதும் தியானிக்கும் அடியார்களின் கூட்டத்தின் நடுவே, எனக்கும் ஒரு இடம் தந்து, என்னை வாட்டும் பிறவி வினைகளை அறுக்க நீ என் அருகே விரைந்து வரவேண்டும்.

 பாடல் 28

 பூவார் சடையான் புதல்வாவென் புனிதா போற்றிப் புகழ்வேனே

 தேவார் தணிகைக் குன்றமர்ந்த தேவ தேவா சண்முகனே

 ஆவா என்றுன் அருள்தந்து அடியேன் அல்லல் அறுப்பாயே

 சாவா வரமும் வேண்டேனுன் சரணே வேண்டிச் சாற்றுவனே.

உரை:

கொன்றை மலர்கள் நிறைந்த சடாமுடியை உடைய சிவனின் புதல்வனே, என் தூயவனே, உன்னை எப்போதும் போற்றிப் புகழ்வேன். தேவாதி தேவர்கள் வணங்கும் திருத்தணி மலையில் அமர்ந்த ஆறுமுகனே! "அந்தோ பரிதாபம்!" (ஆவா) என்று என் மேல் இரக்கம் கொண்டு, உனது பேரருளைத் தந்து என் அல்லல்களை அறுக்க வேண்டும். எனக்கு மரணமில்லாப் பெருவாழ்வோ, தேவேந்திர பதவியோ வேண்டாம்; உனது திருவடிச் சரணாகதி ஒன்றையே வேண்டி இப்பாடல்களைச் சாற்றுகின்றேன்.

 பாடல் 29

 விடையார் கொடியான் பெற்றெடுத்த வீரா வேலா விமலனே

 தடையார் சோலைத் தணிகையினில் தங்கும் தலைமைத் தாரகனே

 உடையாய் என்றன் உயிரினைநீ உன்றன் அடிமை என்றுகொள்வாய்

 அடையாக் கதவாய்க் காத்திராமல் அருளாய் என்தன் அன்பனே.

உரை:

நந்தி பகவானைக் கொடியாகக் கொண்ட சிவபெருமான் பெற்றெடுத்த வீரனே, வேலா, விமலனே! எவராலும் தடுத்தற்கரிய அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருத்தணி மலையில் உறையும் தலைமைப் பொருளே, தாரகனே! என் உயிரின் உண்மையான உரிமையாளனே (உடையாய்), இந்த எளிய உயிரை உனது நித்தியமான அடிமைகளுள் ஒன்றாக ஏற்றுக்கொள்வாயாக. உனது அருள் கதவை எனக்குத் திறக்காமல் அடைத்து வைக்காமல், என் மேல் அன்புகொண்டு உடனே அருள்மழை பொழிவாயாக.

 பாடல் 30 (திருக் கடைக்காப்பு)

 தண்னார் தணிகைக் குமரன்றனைச் சரணம் என்று பதிகமதாய்ப்

 பண்ணார் நெஞ்சிற் பெரியசாமி பாடிப் பரவிய பாமாலை

 விண்ணார் உலகிற் கற்பவர்கள் வினைகள் யாவும் வேரற்றுப்

 பண்ணார் சிவனும் முருகனுமாய்ப் பரதிப் பரமாய் வாழ்வாரே.

உரை:

குளிர்ச்சி பொருந்திய திருத்தணி மலையில் உறையும் குமரனை, "நீயே சரணம்" என்று பதிக வடிவில், இசை நயம் மிக்க நெஞ்சத்தோடு பெரியசாமி ஆகிய நான் பாடித் துதித்த இந்தப் பாமாலையை, இப்பூமியிலும் விண்ணுலகிலும் உணர்ந்து கற்பவர்களுடைய கர்ம வினைகள் யாவும் வேரோடு அழிந்து போகும். அவர்கள் சிவபெருமானின் அருளையும் முருகனின் பேரருளையும் ஒருங்கே பெற்று, பரம்பொருளின் சாயுஜ்ய முக்தியை அடைந்து பேரின்பமாய் வாழ்வார்கள்.

 நான்காம் பத்து: அருள்வேண்டல் பத்து

 பாடல் 31

 இரக்கம் இல்லா நெஞ்சுடையேன் என்றோ என்னை இகழ்வாயே

 தரக்கம் மிக்க தணிகையினில் தங்கும் வேலா சண்முகனே

 அரக்கன் சூரனை ஆடாமை அழித்த கைம்மாப் படையோனே

 பரக்க விழித்துன் பதம்வேண்டினேன் பாவி வினையைப் போக்கிடே.

உரை:

"பிற உயிர்களிடத்தில் இரக்கம் இல்லாத கடினமான நெஞ்சை உடையவன் இவன்" என்று காரணம் காட்டி என்னை நீ கைவிட்டு இகழ்ந்து தள்ளலாமோ? பெருமைகளும் சிறப்புகளும் மிக்க திருத்தணி மலையில் தங்கும் வேலா, சண்முகனே! ஆணவம் கொண்டு ஆடிய சூரபத்மனை, அவன் மேலும் ஆடாதபடித் தன் வேற்படையால் வதம் செய்த பேராற்றல் மிக்க கைம்மாப் படையோனே! உலகியல் ஆசைகளில் என் கண்கள் அலையாமல், உனது திருவடிகளையே தஞ்சமெனப் பார்த்து வேண்டுகின்றேன், என் பாப வினைகளைப் போக்கி அருளுவாய்.

 பாடல் 32

 கரிய மேகத் தானவன்றன் காதற் புதல்வி கணவனே

 தெரிய சோலைத் தணிகையினில் திகழும் தேவா எம்பிரானே

 எரியும் நரகில் வீழாமே என்னைக் காக்கும் எழில்வேலா

 உரிய அடிமை நானுனக்கே உரைத்தேன் உன்றன் காதினிலே.

உரை:

இந்திரனின் வளர்ப்பு மகளாகிய, கிரியா சக்தியின் வடிவமான தெய்வயானையின் கணவனே! யாவருக்கும் கண்கண்ட தெய்வமாகச் சோலைகள் சூழ்ந்த திருத்தணியில் திகழும் தேவா, என் பெருமானே! நான் செய்த பாவங்களால் எரியும் நரகத்துயரில் வீழ்ந்து அழியாமல் என்னைக் காத்தருளும் எழில் வேலா! நான் உனக்கே உரிய பரம்பரை அடிமை என்பதை உனது திருச்செவிகளில் விழும்படி இதோ உரக்கக் கூறுகின்றேன், என் மேல் இரங்குவாய்.

 பாடல் 33

 பித்தா பிறைசூ டிடவல்லான் பெற்ற பிள்ளாய் பேரொளியே

 சித்தார் தணிகைக் குன்றமர்ந்த செல்வக் குமரச் செவ்வேளே

 முத்தா முளரிப் பாதமதை முடிகொள் நாளும் வாராதோ

 செத்தாரைப் போல் திரியாதே செம்மல் உன்னைச் சேர்வேனே.

உரை:

"பித்தா பிறைசூடி..." என்று சுந்தரரால் பாடப்பட்டவனும், தன் சடையில் இளம்பிறையைச் சூடியவனுமான சிவபெருமான் பெற்ற பிள்ளையே, பேரொளிப் பிழம்பே! சித்தர்கள் வாழும் திருத்தணி மலையில் அமர்ந்த செல்வக் குமரனே, செவ்வேளே! முத்துப் போன்ற ஒளிவீசும் உனது தாமரைப் பாதங்களை என் தலை மேல் சூடிக்கொள்ளும் அந்தப் பாக்கிய நாள் எனக்கு வாராதோ? ஆன்மீக உணர்வின்றிச் செத்தாரைப் போல உலக வீதிகளில் அலையாமல், செம்மலாகிய உன்னை நான் எப்போது வந்தடைவேன்?

 பாடல் 34

 பாயும் மயிலில் ஏறிவரும் பரமன் மகனே பாலகனே

 ஆயும் தமிழால் தணிகையினைப் பாடிப் பரவும் அடியவர்க்குச்

 சேயும் தாயும் போலிருந்து காக்கும் தேவர் தம்பிரானே

 தீயும் நரகப் பவக்கடலைத் தீர்க்க வாராய் செவ்வேளே.

உரை:

விண்ணில் பாய்ந்து செல்லும் நீல மயிலேறி வரும் பரமசிவனின் மகனே, பாலகனே! ஆராய்ந்து தெளிந்த செந்தமிழால் திருத்தணி முருகனைப் பாடித் துதிக்கும் அடியார்களுக்கு, ஒரு தாயும் குழந்தையும் போல (சேயும் தாயும்) மிக நெருக்கமாக இருந்து காக்கும் தேவர் தம்பிரானே! கொடிய நரக வேதனையைத் தரும் இந்த உலகப் பிறவிக் கடலை வற்றச் செய்து என்னை ஆட்கொள்ள செவ்வேளே, நீ வாராய்.

 பாடல் 35

 நெஞ்சக் கமலத் துள்ளிருக்கும் நிமலா நின்தன் நெறிபாரேன்

 மஞ்சுக் குலவு தணிகையினில் வாழும் நாதா மெய்ப்பொருளே

 வஞ்சப் பிறவித் துயரெல்லாம் மாற்றி ஆளும் மாமழையே

 அஞ்சேல் என்றுன் கைநாட்டி அடியேன் பயத்தை அகற்றிடே.

உரை:

அடியவர்களின் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் மலமற்ற தூயவனே, உனது தர்ம நெறியை விடுத்து நான் வாழ மாட்டேன். மேகங்கள் குலவி விளையாடும் திருத்தணி மலையில் வாழும் நாதனே, உண்மைப் பொருளே! வஞ்சனை நிறைந்த இப்பிறவியின் துயரங்கள் அனைத்தையும் மாற்றி, அருள்மழை பொழியும் மாமழையே! மரண பயத்தாலும் உலகத் துன்பத்தாலும் நடுங்கும் இந்த எளியவனுக்கு, உனது அபயக் கரத்தைக் காட்டி "அஞ்சேல்" (பயப்படாதே) என்று கூறி என் பயத்தை அகற்றிடுவாய்.

 பாடல் 36

 ஊனார் காயம் உவவாதே உன்றன் கழலே உன்னுகின்றேன்

 தேனார் சோலைத் தணிகையினில் திகழும் சுடரே சிவசுதனே

 வானார் தேவர் துதிசெய்யும் வள்ளல் என்றுன் அடிபணிந்தேன்

 போனார் வினைகள் வாராமே புகுவாய் என்தன் புந்தியிலே.

உரை:

அழிந்து போகும் இந்த ஊனாலாகிய உடலை ஒரு பொருட்டாக மதியாமல், உன்னுடைய வீரக் கழலணிந்த திருவடிகளையே எப்போதும் தியானிக்கின்றேன். தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருத்தணியில் ஒளிரும் ஞானச்சுடரே, சிவசுதனே! வானுலகத் தேவர்கள் யாவரும் துதிக்கும் வள்ளலே என்று உனது திருவடிகளில் வீழ்ந்து பணிந்தேன். என்னை விட்டு ஓடிய பழவினைகள் மீண்டும் என்னை வந்து பற்றாதவாறு, என் புத்தியில் (அறிவில்) நீயே புகுந்து நின்று நல்வழி காட்டுவாயாக.

 பாடல் 37

 செவ்வேள் குமரா குகேசனே சீரார் தணிகை மலையமர்ந்தாய்

 எவ்வப் பிணிகள் வாராமே காக்கும் வேலா எம்பிரானே

 அவ்வக் காலத்தில் அடியேனை ஆட்கொண் டருளும் அருளமுதே

 இவ்வப் பிறவித் துயரகற்றி இன்ப வடிவைத் தந்திடுமே.

உரை:

செவ்வேளே, குமரனே, இதயக் குகையில் உறையும் ஈசனே, சிறப்புகள் மிக்க திருத்தணி மலையில் வீற்றிருப்பவனே! எவ்வகையான உடல் மற்றும் மனப் பிணிகளும் என்னை அணுகாதவாறு காக்கும் வேலை ஏந்திய என் பெருமானே! நான் தடம் மாறும் போதெல்லாம், அந்தந்தக் காலகட்டத்தில் என்னை நல்வழிப்படுத்தி ஆட்கொள்ளும் அருளமுதமே! இந்த மனிதப் பிறவியின் துயரங்கள் அனைத்தையும் அகற்றி, உனது நித்தியமான பேரின்ப வடிவத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.

 பாடல் 38

 மலையார் மங்கை பெற்றெடுத்த மைந்தா மாறா மாரியே

 அலையார் பொய்கைத் தணிகையினில் அமர்ந்த நாதா தாரகனே

 கலையார் நெஞ்சில் உறையாத கள்வா உன்றன் அடித்தாமரை

 நிலையாய் என்தன் நெஞ்சினிலே நிற்கச் செய்யாய் நிமலனே.

உரை:

மலை அரசனின் மகளாகிய பார்வதி தேவி பெற்றெடுத்த மைந்தனே, என்றும் வற்றாத அருள் மாரியே! அலைகள் வீசும் புண்ணியப் பொய்கைகள் சூழ்ந்த திருத்தணி மலையில் அமர்ந்த நாதனே, தாரக மந்திரத்தின் வடிவே! வெறும் உலகக் கலைகளை மட்டும் கற்று அகந்தை கொண்டு திரியும் மாந்தர்களின் நெஞ்சில் புகாத கள்வனே! உன்னுடைய தாமரைத் திருவடிகள், அடியேன் நெஞ்சில் எக்காலத்திலும் நிலையாக நிலைபெற்று நிற்கும்படி அருள் செய்ய வேண்டும், தூயவனே!

 பாடல் 39

 சூரைக் குலத்தைச் சுட்டெரித்த சுடரே வேலா சண்முகனே

 ஆரைக் காப்பாய் என்னைவிட அடியேன் துன்பம் அறியாயோ

 காரைக் தவழும் தணிகையினில் காக்கும் தேவர் தம்பிரானே

 வாராய் என்முன் ஒருகாலாவது வந்து நின்றே வாசிடே.

உரை:

சூரபத்மனின் அசுரக் குலத்தை உனது ஞானத்தீயினால் சுட்டெரித்த ஒளியே, வேலா, சண்முகனே! என்னை விடத் துன்பப்படுபவர் எவர் உளர்? என் துன்பத்தை நீ அறிந்திருந்தும் வராமல் இருப்பது ஏனோ? மேகங்கள் தவழும் திருத்தணி மலையில் வீற்றிருக்கும் தேவர் தம்பிரானே! என் வாழ்நாளில் ஒரு முறையாவது என் கண் முன்னே நேரில் வந்து நின்று, உனது முக தரிசனத்தைத் தந்து என் துயர் தீர்க்க வேண்டும்.

 பாடல் 40 (திருக் கடைக்காப்பு)

 பொன்னார் தணிகைக் குமரன்றனைப் போற்றிப் புகழும் பதிகமதாய்ப்

 பன்னார் நெஞ்சிற் பெரியசாமி பாடிப் பரவிய நற்சொற்கள்

 மண்ணார் உலகிற் கற்பவர்கள் மாறாப் பேரின் பம்முற்று

 விண்ணார் சிவன்தன் அடியிணைக்கீழ் வீற்றே என்றும் இருப்பாரே.

உரை:

பொன்னிறமாய் ஒளிரும் திருத்தணி மலையின் குமரனைப் போற்றிப் புகழும் பதிகங்களாக, பக்திப் பண்பு நிறைந்த நெஞ்சோடு பெரியசாமி ஆகிய நான் பாடிப் பரவிய இந்த நல்வார்த்தைகளை, இந்த மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் பத்தியோடு கற்றால், அவர்கள் எக்காலமும் மாறாத பேரின்பத்தைப் பெற்று, இறுதியில் விண்ணுலகும் கடந்த சிவபெருமானின் திருவடி நிழலின் கீழ் என்றும் அழியாமல் வீற்றிருக்கும் பேற்றினைப் பெறுவர்.

 ஐந்தாம் பத்து: தமிழ்ப் பத்து

 பாடல் 41

 முத்தமிழ்த் தாயின் இளமகனே முளரிப் பொய்கைத் தணிகையினாய்

 நற்றமிழ் மாலக் கொண்டுனது நாமம் பாட நல்கிடுவாய்

 சித்திர வேலைக் கையில்வைத்த சிவனே பெற்ற பேரொளியே

 எத்திறம் நானும் உனைப்பாட ஈவாய் என்தன் நாவினிலே.

உரை:

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாகிய தாயின் இளைய மகனாய் (தமிழ் வடிவாய்) விளங்குபவனே, தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த திருத்தணி மலையில் வாழ்பவனே! தூய்மையான தமிழ் மாலைகளைக் கொண்டு உனது திருநாமங்களைப் பாடும் நற்பேற்றை எனக்கு அருள் செய்வாய். அழகிய விசித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஞானவேலைக் கையில் ஏந்திய, சிவபெருமான் பெற்ற பேரொளிப் பிழம்பே! எளியேனாகிய நான் எந்தத் தகுதியைக் கொண்டு உன்னைப் பாடுவேன்? நீயே என் நாவினில் அமர்ந்து தமிழாய் நின்று உன்னைப் பாட வைக்க வேண்டும்.

 பாடல் 42

 சந்தத் தமிழின் சுவைவடிவே சரணம் சோலைத் தணிகையினாய்

 கந்தா கடம்பா காரொளியே கதிர்வேல் ஏந்தும் காவலனே

 இந்த நிலத்தில் உனையல்லால் யாதும் அறியா ஏழையனை

 முந்த வினையின் பயனாக முனிந்து தள்ளல் முறையாமோ.

உரை:

இசை நயம் மிக்க சந்தத் தமிழின் சுவை வடிவமாகவே திகழ்பவனே, சோலைகள் சூழ்ந்த திருத்தணி நாதனே, உன்னையே சரணடைந்தேன்! கந்தனே, கடம்ப மாலையனே, கரிய மேகம் போன்ற குளிர்ந்த ஒளியை உடையவனே, கதிர்வேல் ஏந்திய காவலனே! இந்த உலகத்தில் உனது திருவடிப் பற்றைத் தவிர வேறு எதையுமே அறியாத ஏழையாகிய என்னை, என் முற்பிறவி வினைகளைக் காரணம் காட்டி நீ கோபித்துத் தள்ளிவிடுவது தகுமோ? தகாது, உன் தமிழால் என்னை ஏற்றுக்கொள்.

 பாடல் 43

 பாலா யினநற் றமிழினிய பாடப் பரிசில் தருவாயேல்

 ஏலா தமிர்தம் உனக்களிப்பேன் என்றுன் பாதம் பணிந்து நின்றேன்

 சேலா ரும்பொய்கைத் தணிகையினில் திகழும் சுடரே சிவசுதனே

 மாலா யினார்தம் மனமுருக வள்ளிக் கொடியைக் கைப்பிடித்தாய்.

உரை:

பால் போன்ற சுவையான நற்றமிழில் உன்னைப் பாடும் நற்பேற்றை (பரிசிலை) எனக்குத் தருவாயானால், தேவர்களாலும் பெற முடியாத என் தூய பக்தி அமுதத்தை உனக்குக் காணிக்கையாக்குவேன் என்று உன் பாதம் பணிந்தேன். சேல் மீன்கள் துள்ளும் பொய்கைகளையுடைய திருத்தணியில் ஒளிரும் சுடரே, சிவசுதனே! உன் மீது அன்புப் பித்து (மால்) கொண்ட அடியவர்களின் மனம் உருகும்படி, குறிஞ்சி நிலத்து வள்ளிக் கொடியைக் கைப்பிடித்த வள்ளலே, என் நாவிலும் அமர்வாய்.

 பாடல் 44

 எண்ணும் எழுத்தும் ஆயினாய் எழிலார்த் தணிகைக் குன்றமர்ந்தாய்

 பண்ணும் ஓசையும் ஆயினாய் பரமன் பெற்ற பாலகனே

 மண்ணும் விண்ணும் துதிசெய்யும் மயில்மேல் ஏறி வருவானே

 நண்ணும் அடியேன் கவிமாலை நயந்து கொள்வாய் நாதனே.

உரை:

அறிவின் தொடக்கமான எண்ணும் எழுத்தும் ஆகி, கல்வியின் வடிவமாய் விளங்குபவனே, எழில்மிகு திருத்தணி மலையில் அமர்ந்தவனே! இசையும் (பண்) அதன் ஓசையும் போல நாத வடிவாகத் திகழும் பரமசிவன் பெற்ற பாலகனே! மண்ணுலகத்தாரும் விண்ணுலகத் தேவர்களும் ஒருங்கே துதிக்கும்படி நீல மயிலேறி வரும் வள்ளலே! உன்னை நெருங்கி வந்து சரணடைந்த அடியேனின் இந்த எளிய கவிமாலையை அன்போடு ஏற்றுக் கொண்டு அருள் செய்ய வேண்டும், என் நாதனே!

 பாடல் 45

 இயலிசை நாடகத் தமிழினிலே இன்பம் காட்டும் எழில்வேலா

 உயரார்த் தணிகைக் குன்றமர்ந்த உத்தமா உன்றன் அடித்தாமரை

 அயரா நெஞ்சிற் கொண்டுனைநான் அநுதினமும் பாட வரம்தருவாய்

 துயரார் பிறவிப் பெருங்கடலைத் துணிப்பாய் உன்றன் துணையாலே.

உரை:

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் வாயிலாக அடியார்களுக்குப் பேரின்பத்தைக் காட்டும் எழில் வேலா! உயர்ந்த திருத்தணி மலையில் அமர்ந்த உத்தமனே! உன்னுடைய தாமரைத் திருவடிகளை சோர்வில்லாத (அயரா) நெஞ்சத்தில் இருத்தி, உன்னை நான் நாள்தோறும் பாடும் நல்வரத்தைத் தந்தருள வேண்டும். துயரங்கள் நிறைந்த இப்பிறவிப் பெருங்கடலை, உனது திருவருள் துணையைக் கொண்டு முற்றிலும் வெட்டி எறிய எனக்கு அருள் செய்வாய்.

 பாடல் 46

 மறைநான்கு மறியா மாபொருளே மாறாத் தமிழின் மாமலரே

 செறிவார் சோலைத் தணிகையினில் திகழும் தேவா சண்முகனே

 இறைவா என்றுன் அடிபணிந்து ஏங்கி நிற்கும் ஏழையனை

 முறைவா றாகக் காத்தருளாய் உன்றன் கருணை முகத்தாலே.

உரை:

நான்கு வேதங்களாலும் முழுமையாக அறிய முடியாத மகா பரம்பொருளே, காலத்தால் அழியாத செந்தமிழின் நறுமண மாமலரே! அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருத்தணி மலையில் ஒளிரும் தேவா, சண்முகனே! "என் இறைவனே" என்று உனது திருவடிகளில் விழுந்து ஏங்கி நிற்கும் இந்த ஏழை அடியேனை, உனது முறைப்படியான அருள் நெறிப்படி, உனது கருணை பொழியும் ஆறு முகங்களின் ஒளியால் காத்தருள வேண்டும்.

 பாடல் 47

 ஆலார் நிழற்கீழ் அமர்ந்தவன்றன் அன்புக் குமரா அருளமுதே

 காலார் தணிகைக் குன்றமர்ந்த கந்தா கடம்பா கதிர்வேலா

 மாலார் நெஞ்சிற் குடிகொண்ட மாண்பா உன்றன் நற்றமிழால்

 பாலா ரும்படிப் பாடிடவே பாலித் தருளாய் பரமனே.

உரை:

கல்லால மரத்தின் நிழற்கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு மௌனமாய் அறம் உரைத்த சிவபெருமானின் அன்புமிகு குமரனே, அருளமுதமே! காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கும் திருத்தணி மலையில் அமர்ந்த கந்தா, கடம்பா, கதிர்வேலா! பக்திப் பித்து நிறைந்த அடியவர்களின் நெஞ்சில் குடிகொண்ட மாண்புடையவனே! உனது பெருமைகளை நற்றமிழால், பால் போன்ற சுவையுடன் பாடித் துதிக்கும் திறனை இந்த எளியேனுக்குப் பாலித்து (தந்து) அருள வேண்டும், பரம்பொருளே!

 பாடல் 48

 கானத் தமிழின் சுவையறிந்தாய் காரார் தணிகைக் காவலனே

 மோனத் திருக்கும் பெரியோர்கள் துதிக்கும் நாதா மெய்ப்பொருளே

 ஞானக் கொழுந்தாய் நின்ற உன்றன் நல்வேல் காட்டும் நல்வழியில்

 யானும் நடந்துன் அடிசேர ஈவாய் என்தன் இதயத்திலே.

உரை:

இசைத் தமிழின் (கானத் தமிழ்)  சுவையை உணர்ந்த தூயவனே, மேகங்கள் சூழ்ந்த திருத்தணி மலையின் காவலனே! மௌன நிலையாகிய மோனத்திலிருக்கும் தவசீலர்களும் பெரியோர்களும் துதிக்கும் நாதனே, உண்மைப் பொருளே! ஞானத்தின் கொழுந்தாய் விளங்கும் உனது திருவேல் காட்டும் நல்வழியில், இந்த எளியேனும் நடந்து வந்து உனது திருவடிகளை அடையும்படி, என் இதயத்தில் நீயே ஞான ஒளியாய் நின்று வழிகாட்ட வேண்டும்.

 பாடல் 49

 வண்டார் சோலைத் தணிகையினில் வாழும் தெய்வ மாமணியே

 தண்டார் மார்பா தாரகனே சரணம் சரணம் சண்முகனே

 பண்டார் விதியின் பயனாகப் பாடும் அடியேன் கவிமாலை

 கொண்டாய் மகிழ்ந்து காத்தருளாய் குமரா குருவாம் கோமானே.

உரை:

வண்டுகள் மொய்க்கும் மலர்ச் சோலைகள் நிறைந்த திருத்தணி மலையில் வாழும் தெய்விகச் சிந்தாமணியே! குளிர்ந்த மாலை அணிந்த மார்பினை உடையவனே, தாரக மந்திரத்தின் உட்பொருளே, சண்முகனே உன்னைச் சரணடைந்தேன்! பழமையான என் விதியின் பயனாக அல்லாமல், உனது அருளால் உந்தப்பட்டுப் பாடும் இந்த எளிய கவிமாலையை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு என்னைக் காத்தருள்வாய், குமரனே, சிவனுக்கே பிரணவப் பொருள் உரைத்த குருநாதனே, என் கோமானே!

 பாடல் 50 (திருக் கடைக்காப்பு)

 தேனார் தணிகைக் குமரன்றனைச் செழுநற் றமிழின் பதிகமதாய்ப்

 பானார் நெஞ்சிற் பெரியசாமி பாடிப் பரவிய நற்பாடல்

 வானார் உலகிற் கற்பவர்கள் மாறாப் பேரின் பம்முற்று

 ஆனார் சிவன்றன் திருவடியின் அருகே என்றும் அமர்வாரே.

உரை:

தேன் போன்ற இனிமை வாய்ந்த திருத்தணி குமரனை, செழுமையான நற்றமிழ்ப் பதிகங்களாக, பக்திப் பால் நிறைந்த நெஞ்சத்தோடு பெரியசாமி ஆகிய நான் பாடித் துதித்த இந்த நற்பாடல்களை, இப்பூமியிலும் விண்ணுலகிலும் உணர்ந்து கற்பவர்கள், எக்காலமும் அழியாத பேரின்ப வீட்டைப் பெற்று, இறுதியில் எம்பெருமான் சிவபெருமானின் திருவடி நிழலின் அருகே என்றும் வீற்றிருக்கும் மகா பாக்கியத்தைப் பெறுவார்கள்.

ஆறாம் பத்து: வேல் பதிகம்

 பாடல் 51

 சூரனை வென்ற சுடர்வேலே சுற்றே தணிகைக் காவலன்வேல்

 ஆர இருளை அகற்றிடுமே அடியேன் அல்லல் அறுத்திடுமே

 காரார் மேகக் கழுமலத்தான் காதல் தலாய் கையில்வேல்

 பாரார் துயரம் வாராமே பாதுகாக்கும் பரமன்வேல்.

 உரை:

ஆணவத்தின் வடிவாய் வந்த சூரபத்மனைப் பிளந்து வென்ற ஒளிரும் ஞானவேலே! திருத்தணி மலையின் காவலனாகிய முருகனின் கையில் இருக்கும் அந்த வேல், ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மும்மல இருளை முற்றிலும் அகற்றிடும்; அடியேனின் உலகத் துன்பங்கள் அனைத்தையும் வேரறுத்திடும். கரிய மேகங்கள் சூழ்ந்த சீர்காழி (கழுமலம்) நகரின் இறைவனான சிவபெருமானின் அன்புமிகு மகனின் கையில் இருக்கும் அந்த வேல், உலகத்தார் படும் எவ்வகைத் துயரமும் அணுகாதவாறு பாதுகாக்கும் பரம்பொருளின் அஸ்திரமாகும்.

 பாடல் 52

 மாலோன் மருகன் திருக்கையில் மேவும் மகாசக்தி வடிவேல்

 சேலோன் பாயும் தணிகையினில் திகழும் தேவன் தனிவேலே

 நாலோ வேதப் பொருளறியா நம்பன் மகன்றன் நல்வேலே

 காலோன் பாசம் வாராமே காக்கும் காக்கும் கதிர்வேலே.

 உரை:

திருமாலின் மருகனாகிய முருகனின் திருக்கரத்தில் விளங்கும், பராசக்தியின் வடிவமேயான மகாசக்தி வடிவேலே! சேல் மீன்கள் துள்ளும் பொய்கைகளையுடைய திருத்தணியில் திகழும் தேவனின் ஒப்பற்ற தனிவேலே! நான்கு வேதங்களாலும் எட்ட முடியாத சிவபெருமான் பெற்ற மகனின் நல்வேலே! அந்த ஒளிவீசும் கதிர்வேல், எமதர்மனின் பாசக்கயிறு என் உயிரைப் பற்ற வராதவாறு என்னை எக்காலத்திலும் காத்து நிற்குமே.

 பாடல் 53

 குன்றம் துளைத்த கொற்றவேல் கூர்மை மிக்க கொடுவேலே

 மின்றாழ் சோலைத் தணிகையினில் மேவும் வீரன் திருவேலே

 அன்று சூரனை ஆடாமை அறுத்த அரிய வென்றிவேல்

 என்றன் வினையை வேரறுக்க வாராய் வாராய் எழில்வேலே.

உரை:

கிரௌஞ்ச மலையைத் துளைத்து எறிந்த வெற்றிவேலே, கூர்மை மிக்க அஞ்ஞான நாசக வேலே! மின்னல் போன்ற ஒளி பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருத்தணி வீரன் திருவேலே! அன்று தேவர்களை வதைத்த சூரபத்மனை மேலும் ஆடாதபடி அறுத்த அரிய வெற்றிவேலே! உனது அந்தப் பேராற்றலால் என் பிறவி வினைகளை வேரறுக்க எழில்வேலே என் முன்னே நீ உடனே வர வேண்டும்.

 பாடல் 54

 பேயார் காட்டில் நடமாடும் பித்தன் மகன்றன் பெருவேலே

 சேயார் தணிகைக் குன்றமர்ந்த செல்வக் குமரச் செவ்வேல்வேல்

 நோயார் பிறவிப் பெருங்கடலை நொடித்துப் பிளக்கும் நல்வேலே

 காயா மரம்போல் நில்லாதே காப்பாய் காப்பாய் கதிர்வேலே.

உரை:

சுடுகாட்டில் பேய்களோடு ஆடும் பித்தனாகிய சிவனின் மகனுடைய பெருமைமிக்க வேலே! திருத்தணி மலையில் அமர்ந்த செல்வக் குமரனின் செவ்வேலே! நோய்கள் நிறைந்த இந்தப் பிறவியாகிய பெருங்கடலை ஒரு நொடிப்பொழுதில் பிளந்து வற்றச் செய்யும் நல்வேலே! அசைவற்றுக் கிடக்காமல், எனக்காக உடனே வந்து என் அறியாமையை அழித்துக் காத்தருள வேண்டும் கதிர்வேலே!

 பாடல் 55

 வள்ளிப் படப்பைத் தணிகையினில் வாழும் நாதன் திருவேலே

 புள்ளி மயில்மேல் ஏறிவரும் புனிதா ஏந்தும் புகழுடைவேல்

 வெள்ளி நிலவின் ஒளிகாட்டும் விமலன் பெற்ற பேரொளிவேல்

 அள்ளி அமுதைத் தந்தென்னை ஆளும் ஆளும் அருளுடைவேல்.

உரை:

வள்ளிக்கொடிகள் சூழ்ந்த திருத்தணி நாதனின் திருவேலே! புள்ளி மயிலேறி வரும் தூயவன் கரத்தில் ஏந்திய புகழுடைய வேலை! சந்திரனைச் சடையில் சூடிய விமலன் பெற்ற பேரொளி வேலே! அடியார்களுக்குப் பேரின்ப அருளமுதைத் தந்து ஆளுகின்ற அந்த அருளுடைய வேலே என் துயர் தீர்க்கும்.

 பாடல் 56

 கானக் குறவர் மடமகளைக் காதல் கொண்டான் கைவேலே

 தேனக் கமலத் தணிகையினில் திகழும் தெய்வச் சுடர்வேலே

 ஊனக் குரம்பை உவவாதே உன்னைப் பாட உருகுகின்றேன்

 ஆனப் பெருமை உடையானே அடியேன் காக்கும் அருள்வேலே.

உரை:

வள்ளியம்மையின் மேல் காதல் கொண்ட பெருமானின் கையில் இருக்கும் வேலே! தேன் நிறைந்த தாமரைகளையுடைய திருத்தணியில் ஒளிரும் தெய்விகச் சுடர்வேலே! இந்த உடலின் அழியும் தன்மையை வெறுத்து உன்னைப் பாட உருகும் அடியேனைக் காக்கும் பொருட்டு, பெருமைகள் மிக்க முருகனின் கரத்தில் ஒளிரும் அருள்வேலே, என் துயர் துடைப்பாய்.

 பாடல் 57

 விண்ணோர் எல்லாம் உனைவணங்க வீழ்ந்து கிடக்கும் வேற்படையே

 கண்ணார் சோலைத் தணிகையினில் கனிவாய் அமர்ந்தோன் திருவேலே

 மண்ணார் உலகத் துயரெல்லாம் மாற்றி ஆளும் மாமழைவேல்

 பண்ணார் விதியைக் கடந்தென்னை ஆளாய் பரமன் பாலகவேல்.

உரை:

தேவர்கள் யாவரும் வணங்கித் தரைமீது விழும்படி பேராற்றல் கொண்ட வேற்படையே! திருத்தணியில் அமர்ந்தோனின் திருவேலே! மண்ணுலகத் துயரங்களை மாற்றி அருள் பொழியும் மாமழை போன்ற வேலே! என் விதியின் பயன்களைக் கடந்து என்னை ஆட்கொள்ள வேண்டும் பரமன் பாலகனின் வேலே!

 பாடல் 58

 தாரார் மார்பா தணிகையினில் தங்கும் நாதன் தனிவேலே

 ஏரார் முத்தைத் தருபவனே எந்தாய் ஏந்தும் எழில்வேலே

 நீரார் சடையான் பெற்றெடுத்த நிமலா நின்தன் நல்வேலே

 ஆராய்ந் தேத்தி வாழாதே அடியேன் அழியாவண்ணம்வேல்.

உரை:

மாலை அணிந்த மார்பினை உடைய திருத்தணி நாதனின் தனிவேலே! முத்துப் போன்ற ஞானம் தரும் எந்தை ஏந்தும் எழில்வேலே! கங்கை சூடிய சிவன் பெற்ற நிமலனின் நல்வேலே! உன்னைப் போற்றித் துதிக்காமல் நான் அழியாதவாறு ஞானஒளி தந்து காக்க வேண்டும் அவ்வேல்.

 பாடல் 59

 மலையார் மங்கை பெற்றெடுத்த மைந்தா ஏந்தும் மாமயிர்வேல்

 அலையார் பொய்கைத் தணிகையினில் அமர்ந்த நாதன் அருள்வேலே

 கலையார் நெஞ்சில் உறையாத கள்வன் கையில் கதிர்வேலே

 நிலையாய் என்தன் நெஞ்சினிலே நிற்கச் செய்யாய் நிமலவேல்.

உரை:

பார்வதி தேவி பெற்ற மைந்தன் ஏந்தும் ஒளிரும் வேலே! திருத்தணி நாதனின் அருள்வேலே! கர்வமுடையார் நெஞ்சில் புகாத கள்வன் கையில் இருக்கும் கதிர்வேலே! என் நெஞ்சில் நிலையாக நின்று ஞான ஒளி வீசச் செய்ய வேண்டும் அந்த நிமலவேல்.

 பாடல் 60 (திருக் கடைக்காப்பு)

 திண்ணார் தணிகைக் குமரன்றன் திருவேல் அதனைப் பதிகமதாய்ப்

 பண்ணார் நெஞ்சிற் பெரியசாமி பாடிப் பரவிய நற்சொற்கள்

 மண்ணார் உலகிற் கற்பவர்கள் மாறாப் பேரின் பம்முற்று

 விண்ணார் சிவன்தன் அடியிணைக்கீழ் வீற்றே என்றும் இருப்பாரே.

உரை:

திருத்தணி குமரனின் திருவேலின் பெருமைகளைப் பதிகங்களாக, பக்தி நெஞ்சோடு பெரியசாமி ஆகிய நான் பாடிய இந்த நற்சொற்களைக் கற்பவர்கள், இப்பூமியில் பேரின்பம் பெற்று, இறுதியில் சிவபெருமானின் திருவடி நிழலில் என்றும் அழியாமல் வீற்றிருக்கும் மகா முக்திப் பேற்றினைப் அடைவர்.

 ஏழாம் பத்து: மயில் பதிகம்

 பாடல் 61

 ஓங்கார வடிவாய் நின்றோங்கும் உத்தமன் ஏறும் மாமயிலே

 தீங்காரச் சோலைத் தணிகையினில் திகழும் வீரன் வாகனமே

 பாங்காக அடியேன் பாவவிநாசம் பண்ணி ஆளும் பரம்மயிலே

 நீங்காது என்முன் வாராயோ நீலக் கலாப நன்மயிலே.

 உரை:

நாத தத்துவத்தின் ஓங்கார வடிவமாகவே நின்று விளங்கும் உத்தமனாகிய முருகன் ஏறிவரும் பெரிய மயிலே! வண்டுகள் ரீங்காரமிடும் சோலைகள் சூழ்ந்த திருத்தணி வீரனின் வாகனமே! அடியேனின் பாவங்களை எல்லாம் பாங்காக நாசம் செய்து ஆளுகின்ற பரம்பொருளின் மயிலே! என்னை விட்டு நீங்காமல் என் கண் முன்னே நீலத் தோகையுடைய நன்மயிலே நீ தோன்றி வரவேண்டும்.

 பாடல் 62

 விண்டார் அமரர் துதிசெய்ய விமலன் குமரனை ஏற்றிவரும்

 கண்டார் சோலைத் தணிகையினில் கவினாய் ஆடும் காரமயிலே

 முண்டார் சடையான் பெற்றெடுத்த மூர்த்தி ஏறும் மாமயிலே

 எண்தாழ் அடியேன் துயரகற்ற ஏகி வாராய் எழில்மயிலே.

 

 உரை:

விண்ணுலகத் தேவர்கள் துதிக்க, விமலனின் குமரனைத் தன் முதுகில் ஏற்றிவரும் மயிலே! திருத்தணியில் ஆடும் காரமயிலே! சடாமுடியுடைய சிவன் பெற்ற மூர்த்தி ஏறும் மாமயிலே! எளியேனின் துயரங்களை அகற்ற எழில்மயிலே நீ விரைந்து வரவேண்டும்.

 பாடல் 63

 சூரன் கிரௌஞ்சம் தவிடுபொடி யாகத் தோன்றிப் பறந்தமயிலே

 சீரார் தணிகைக் குன்றமர்ந்த செவ்வேள் ஏறும் திருக்குலமயிலே

 ஆரா அமுதைத் தன்பரமன் ஏறி வரவோர் வாகனமாய்

 நேராய் நின்றாய் நீயன்றி வேறார் காப்பார் நன்மயிலே.

 உரை:

சூரபத்மனும் கிரௌஞ்சமும் பொடியாகும்படிப் பறந்து சென்ற மயிலே! திருத்தணிச் செவ்வேள் ஏறும் திருக்குல மயிலே! பேரா அமுதாகிய முருகன் ஏறி வர வாகனமாய் நின்ற நீல மயிலே, உன்னைத் தவிர என் பிறவிப் பயத்தைத் தீர்க்க வேறார் உளர்?

 பாடல் 64

 வள்ளித் தெய்வானை மணவாளன் ஏறும் மாமயிலே

 தெள்ளித் தணிகைக் குன்றமர்ந்த தேவ தேவன் தன்மயிலே

 உள்ளி உருகும் அடியார்தம் உவகை பெருக்கும் பேரொளிமயிலே

 அள்ளி அமுதைத் தந்தென்னை ஆளாய் ஆளாய் மாமயிலே.

உரை:

வள்ளி, தெய்வானையின் மணவாளன் ஏறும் மாமயிலே! திருத்தணித் தேவ தேவனின் தன்மயிலே! மனதால் நினைந்து உருகும் அடியார்களின் மகிழ்ச்சியைப் பெருக்கும் பேரொளி மயிலே! எனக்கு அருளமுதைத் தந்து ஆட்கொள்ள வேண்டும் அம்மை மயில்.

 பாடல் 65

 வேதப் பொருளை விடையோற்குக் மேலாய் உரைத்தோன் வாகனமே

 காதார்த் தணிகைக் குன்றமர்ந்த கந்தா கடம்பன் தன்மயிலே

 பாதச் சிலம்பின் ஒலியோடு பரமன் வரவோர் பாயுமயிலே

 சூதப் பிறவித் துயரகற்றத் தோன்றி வாராய் தோகைமயிலே.

உரை:

சிவபெருமானுக்கே வேதத்தின் பிரணவப் பொருளை உரைத்தவனின் வாகனமே! திருத்தணிக் கந்தனின் தன்மயிலே! சிலம்பொலியோடு முருகன் வரப் பாய்ந்து வரும் மயிலே! வஞ்சனை மிக்க இப்பிறவித் துயரகற்றத் தோகைமயிலே நீ தோன்றி வாராய்.

 பாடல் 66

 மாலோன் ருகன் ஏறிவரும் மாண்பார் நீல மாமயிலே

 சேலோன் பாயும் தணிகையினில் திகழும் சுடரின் வாகனமே

 நாலோ வேதப் பொருளறியா நம்பன் மகன்றன் நன்மயிலே

 காலோன் பாசம் வாராமே காக்கும் காக்கும் காரமயிலே.

உரை:

திருமால் மருகன் ஏறும் மாண்புடைய நீல மயிலே! திருத்தணிச் சுடரின் வாகனமே! சிவன் மகனின் நன்மயிலே! எம பாசம் என்னை அணுகாதவாறு காக்கும் காரமயிலே, என் மேல் இரங்குவாய்.

 பாடல் 67

 பொன்னார் மேனிப் புண்ணியன்றன் புதல்வன் ஏறும் புண்ணியமயிலே

 தென்னார் தணிகைப் பொய்கைசூழ் தேவ தேவன் வாகனமே

 முன்னார் வினையின் பயனாக மூண்ட துயரம் முழுதகல

 என்னார் உயிரின் துணையாகி எழுக என்முன் எழில்மயிலே.

உரை:

சிவன் புதல்வன் ஏறும் புண்ணிய மயிலே! திருத்தணித் தேவ தேவனின் வாகனமே! என் முன்வினையின் துயரங்கள் யாவும் அகலும்படி, என் உயிரின் துணையாய் என் கண் முன்னே எழில்மயிலே நீ வர வேண்டும்.

 பாடல் 68

 சூலப் படையான் திருமைந்தா சூரன் குலத்தைச் சுட்டெரித்தோன்

 மாலப் படவே தணிகையினில் ஏறும் நாதன் மாமயிலே

 காலப் பயங்கள் வாராமே காக்கும் வேலோன் வாகனமே

 ஞாலப் புகழ்சேர் நின்னடிகள் நல்காய் அடியேன் நடுங்காமே.

 உரை:

சூரன் குலம் எரித்தவன் ஏறும் மாமயிலே! எம பயம் வாராமல் காக்கும் வேலோனின் வாகனமே! அடியேன் நடுங்காதவாறு உனது திருவடி நிழலைத் தந்து காக்க வேண்டும் அம்மை மயில்.

 பாடல் 69

 குன்றா வாழ்வைக் குலமக்கட்குக் கொடுப்போன் ஏறும் மாமயிலே

 மின்றாழ் சடையான் திருமகன்றன் மிக்க வடிவின் வாகனமே

 சென்றா யுன்றன் திருவடிவைத் தேடித் தேடி இளைத்துவிட்டேன்

 ஒன்றாய் நின்றாய் எனை ஆளாய் ஓங்கார வடிவ நன்மயிலே.

உரை:

நல்வாழ்வு தருபவன் ஏறும் மாமயிலே! சிவன் மகனின் வாகனமே! உன்னைத் தேடி இளைத்த என் முன்னே, ஓங்கார வடிவமாய் நின்று என்னை ஆட்கொள்ள வாராய் நன்மயிலே.

 பாடல் 70 (திருக் கடைக்காப்பு)

 தண்னார் தணிகைக் குமரன்றன் தனிமா மயிலைப் பதிகமதாய்ப்

 பண்ணார் நெஞ்சிற் பெரியசாமி பாடிப் பரவிய நற்சொற்கள்

 மண்ணார் உலகிற் கற்பவர்கள் மாறாப் பேரின் பம்முற்று

 விண்ணார் சிவன்தன் அடியிணைக்கீழ் வீற்றே என்றும் இருப்பாரே.

உரை:

திருத்தணி குமரனின் தனிமா மயிலைப் பதிகங்களாக, பக்தி நெஞ்சோடு பெரியசாமி ஆகிய நான் பாடிய இந்த நற்சொற்களைக் கற்பவர்கள், இப்பூமியில் பேரின்பம் பெற்று, இறுதியில் சிவனடியின்கீழ் என்றும் அழியாமல் வீற்றிருக்கும் மகா முக்திப் பேற்றினைப் பெறுவர்.

 எட்டாம் பத்து: திருவடிப் பத்து

 பாடல் 71

 செம்பொற் கழல்கள் சிலம்பார்க்கும் சீரார் தணிகைக் குமரனடி

 அம்பொற் கமலத் திருவடிகள் அடியேன் பாவம் அறுக்குமடி

 வம்பொற் பிறவித் துயரெல்லாம் மாற்றி ஆளும் மாமலரடி

 நம்பிக் கிடந்தேன் நின்னடியே நாதா காப்பாய் நின்னடியே.

உரை:

செம்பொன்னாலான வீரக்கழல்களும் சிலம்புகளும் ஒலிக்கின்ற திருத்தணி குமரனின் திருவடிகள்! அழகிய பொற்றாமரை போன்ற அந்தத் திருவடிகள் அடியேனின் பாவங்களை வேரறுக்கும் தன்மை கொண்டவை. வீணான இப்பிறவித் துயரங்கள் அனைத்தையும் மாற்றி ஆளுகின்ற மகா மலரடிகள் அவை. அந்தத் திருவடிகளையே நம்பிக் கிடக்கின்றேன், நாதனே உனது திருவடிகளே என்னை எக்காலத்திலும் காத்தருள வேண்டும்.

 பாடல் 72

 வள்ளி மணாளன் பொற்பாதம் வாழும் தணிகைக் குன்றமர்ந்தோன்

 தெள்ளி அமுதை நல்கிடுமடி தேவ தேவன் திருவடியே

 உள்ளி உருகும் அடியார்தம் உள்ளத் துள்ளே ஒளிருமடி

 பள்ளி கொள்ளும் மாலோன்றன் மருகன் பாதம் பரவுமடி.

உரை:

வள்ளி மணாளனின் பொற்பாதங்கள்! தெளிந்த பேரருள் அமுதை வழங்கும் தேவ தேவனின் திருவடிகள்! மனதால் நினைந்து உருகும் அடியார்களின் உள்ளத்தின் உள்ளே பிரகாசிக்கும் அடிகள்! திருமாலின் மருகனது அந்தத் திருவடிகளையே என் நெஞ்சம் எப்போதும் பரவித் துதிக்கும்.

 பாடல் 73

 மாலோன் மருகன் திருவடிக்கீழ் வாழும் சோலைத் தணிகையினாய்

 நாலோ வேதப் பொருளறியா நம்பன் பெற்ற நன்மலரடி

 காலோன் பாசம் வாராமே காக்கும் காக்கும் கழலிணையடி

 பாலோ அமுதோ எனும்படிப் பாடி நின்றேன் நின்னடியே.

உரை:

திருத்தணி நாதனின் நன்மலரடிகள்! வேதங்கள் அறியா சிவன் பெற்ற அடிகள்! எம பாசம் வராதவாறு காக்கும் வீரக்கழல் அணிந்த அடிகள்! பால் போன்றும் அமுது போன்றும் இனிக்கும்படி உனது திருவடிகளையே பாடி நிற்கின்றேன்.

 பாடல் 74

 சூரன் மாள அமராடித் தோகை மயில்மேல் வந்தவனடி

 காரார் தணிகைக் குன்றமர்ந்த கந்தன் ஏந்தும் கழலிணையடி

 ஆரா அமுதே உனதுபதம் அன்றோ அடியேன் புகலிடமடி

 வாராய் வாராய் எம்பிரானே வந்துன் பாதம் தந்திடுமே.

உரை:

சூரன் மாளப் போரிட்டு மயிலேறி வந்தவனின் அடிகள்! திருத்தணிக் கந்தனின் கழலிணையடிகள்! பேரா அமுதே, உனது பாதங்கள் அல்லவோ என் புகலிடம்? என் பெருமானே, வந்து உனது திருவடிகளை எனக்குத் தந்தருள்வாய்.

 பாடல் 75

 நெஞ்சக் கமலத் துள்ளிருக்கும் நிமலன் பாதம் நினையுங்கால்

 மஞ்சுக் குலவு தணிகையினில் வாழும் நாதன் திருவடியே

 வஞ்சப் பிறவித் துயரெல்லாம் மாற்றி ஆளும் மாமலரடி

 அஞ்சேல் என்றுன் கைநாட்டி அடியேன் பயத்தை அகற்றுமடி.

உரை:

நெஞ்சத் தாமரையில் இருக்கும் நிமலனின் பாதம்! திருத்தணி நாதனின் திருவடி! பிறவித் துயரம் மாற்றி ஆளும் மாமலரடி! பயப்படாதே என்று என் பயம் அகற்றும் மகா திருவடிகள் அவை.

 பாடல் 76

 ஊனார் காயம் உவவாதே உன்றன் கழலே உன்னுகின்றேன்

 தேனார் சோலைத் தணிகையினில் திகழும் சுடரின் திருவடியே

 வானார் தேவர் துதிசெய்யும் வள்ளல் உன்றன் மலரடியை

 போனார் வினைகள் வாராமே புகல்வாய் என்தன் புந்தியிலடி.

உரை:

அழியும் உடலை வெறுத்து உன்றன் கழல்களையே நினைக்கின்றேன். திருத்தணிச் சுடரின் திருவடிகள்! தேவர்கள் துதிக்கும் வள்ளலின் மலரடிகள் என் புத்தியில் புகுந்து என் வினைகளை ஓட்ட வேண்டும்.

 பாடல் 77

 விண்ணோர் எல்லாம் உனைவணங்கி வீழ்ந்து கிடக்கும் மலரடியே

 கண்ணார் சோலைத் தணிகையினில் கனிவாய் அமர்ந்தோன் திருவடியே

 மண்ணார் உலகத் துயரெல்லாம் மாற்றி ஆளும் மாமலரடி

 பண்ணார் விதியைக் கடந்தென்னை ஆளாய் பரமன் பாலகனடி.

உரை:

தேவர்கள் வீழ்ந்து கிடந்து வணங்கும் மலரடி! திருத்தணியில் அமர்ந்தோன் திருவடி! உலகத் துயரம் மாற்றி ஆளும் மாமலரடி! என் விதியைக் கடந்து என்னை ஆட்கொள்ள வேண்டும் பரமன் பாலகனின் திருவடிகள்.

 பாடல் 78

 தாரார் மார்பா தணிகையினில் தங்கும் நாதன் தனிமலரடி

 ஏரார் முத்தைத் தருபவனே எந்தாய் ஏந்தும் எழிலடியே

 நீரார் சடையான் பெற்றெடுத்த நிமலா நின்தன் நற்பாதம்

 ஆராய்ந் தேத்தி வாழாதே அடியேன் அழியாவண்ணமடி.

உரை:

திருத்தணி நாதனின் தனிமலரடி! எந்தை ஏந்தும் எழிலடி! சிவன் பெற்ற நிமலனின் நற்பாதம் நான் அழியாதவாறு என் நெஞ்சில் நின்று காக்க வேண்டும்.

 பாடல் 79

 மலையார் மங்கை பெற்றெடுத்த மைந்தன் ஏந்தும் மலரடியே

 அலையார் பொய்கைத் தணிகையினில் அமர்ந்த நாதன் அருளடியே

 கலையார் நெஞ்சில் உறையாத கள்வன் கழலிணையடியே

 நிலையாய் என்தன் நெஞ்சினிலே நிற்கச் செய்யாய் நிமலனடி.

உரை:

பார்வதி பெற்ற மைந்தனின் மலரடி! திருத்தணி நாதனின் அருளடி! கள்வனின் கழலிணையடி! என் நெஞ்சில் நிலையாய் நிற்கச் செய்ய வேண்டும் அந்த நிமலனடி.

 பாடல் 80 (திருக் கடைக்காப்பு)

 திண்ணார் தணிகைக் குமரன்றன் திருவடி அதனைப் பதிகமதாய்ப்

 பண்ணார் நெஞ்சிற் பெரியசாமி பாடிப் பரவிய நற்சொற்கள்

 மண்ணார் உலகிற் கற்பவர்கள் மாறாப் பேரின் பம்முற்று

 விண்ணார் சிவன்தன் அடியணைக்கீழ் வீற்றே என்றும் இருப்பாரே.

உரை:

திருத்தணி குமரனின் திருவடிகளைப் பதிகங்களாக, பக்தி நெஞ்சோடு பெரியசாமி ஆகிய நான் பாடிய இந்த நற்சொற்களைக் கற்பவர்கள், இப்பூமியில் பேரின்பம் பெற்று, இறுதியில் சிவனடியின்கீழ் என்றும் அழியாமல் வீற்றிருக்கும் மகா முக்திப் பேற்றினைப் பெறுவர்.

 ஒன்பதாம் பத்து: திருத்தணித் திருத்தலப் பத்து

 பாடல் 81

 சுனைகள் பாயும் தணிகையினில் சோலை சூழ்ந்த மாமலையாம்

 நனைகள் விரியும் மலர்களெல்லாம் நாதன் பாதம் சொரியுமலை

 வினைகள் யாவும் வேரறுக்கும் வீரன் வாழும் திருத்தணியாம்

 நினைய நெஞ்சம் உருகிடுமே நிமலன் வாழும் நெடுங்குன்றே.

உரை:

புண்ணியச் சுனைகள் பாயும் திருத்தணி சோலை சூழ்ந்த மாமலையாகும்! மலரும் மலர்கள் யாவும் நாதனின் பாதங்களில் இயற்கையாகவே சொரியும் மலை அது! ஆன்மாவின் கர்ம வினைகள் யாவையும் வேரறுக்கும் வீரன் வாழும் திருத்தணியாகும்! நினைத்த மாத்திரத்திலேயே நெஞ்சம் உருகச் செய்யும், நிமலன் வாழும் நெடுங்குன்று அதுவே.

 பாடல் 82

 மஞ்சு தவழும் தணிகையினில் மாண்பார் தேவர் கூடிடுமே

 பஞ்சு போன்ற மேகமெல்லாம் பாதக் கமலத் தொட்டிடுமே

 அஞ்சு முகம்விட் டாறுமுகம் கொண்டோன் வாழும் அமரர்மலை

 நெஞ்சிற் கொள்ளப் பவமகலும் நிமலா வாழும் நெடுங்குன்றே.

உரை:

மேகங்கள் தவழும் திருத்தணியில் தேவர்கள் வந்து கூடிடுவர்! பஞ்சு போன்ற மேகங்கள் நாதனின் பாத கமலங்களைத் தொட்டு வணங்கும் மலை அது! ஆறுமுகம் கொண்டோன் வாழும் அமரர் மலை! நெஞ்சில் நினைத்த உடனே பிறவிப் பாவம் அகலும் நெடுங்குன்று அதுவே.

 பாடல் 83

 வள்ளி ஆடும் சோலைசூழ் வண்டார் தணிகைத் திருத்தலமாம்

 தெள்ளி அமுதை நல்கிடுமச் செவ்வேள் வாழும் சேவகமலை

 புள்ளி மயில்மேல் ஏறிவரும் புனிதா வாழும் புண்ணியமலை

 அள்ளி அன்பைத் தந்திடுமே அடியார் போற்றும் அருங்குன்றே.

உரை:

வள்ளியம்மை உலவும் சோலைகள் சூழ்ந்த திருத்தலமாம்! தெளிந்த அமுதை வழங்கும் செவ்வேள் வாழும் சேவக மலை! புள்ளி மயிலேறி வரும் புனிதா வாழும் புண்ணிய மலை! அடியார்களுக்கு அன்பை அள்ளித் தரும் அருங்குன்று அதுவே.

 பாடல் 84

 சூரன் மாள அமராடித் துயரம் தீர்த்தோன் அமர்ந்தமலை

 காரார் மேகக் கழுமலத்தான் காதல் மதலாய் வாழ்குகையாம்

 ஆரா அமுதே உனதுதணிகை அன்றோ அடியேன் புகலிடமாம்

 வாராய் வாராய் எம்பிரானே வந்துன் தணிகை காட்டிடுமே.

உரை:

சூரன் மாளப் போரிட்டுத் துயரம் தீர்த்தோன் அமர்ந்த மலை! சிவன் மகனாகிய குகன் வாழும் குகையாம் திருத்தணி! பேரா அமுதே, உனது தணிகை அல்லவோ என் புகலிடம்? என் பெருமானே, வந்து உனது தணிகையின் தரிசனத்தைக் காட்டியருள்வாய்.

 பாடல் 85

 பொன்னார் எழிலார் வேலேந்தும் புனிதா வாழும் பொற்பதியாம்

 தென்னார் தணிகைப் பொய்கைசூழ் தேவ தேவன் சேர்மலையாம்

 முன்னார் வினையின் பயனாக மூண்ட துயரம் முழுதகல

 என்னார் உயிரின் துணையாகி எழுக தணிகைக் காவலனே.

உரை:

வேலேந்தும் புனிதா வாழும் பொற்பதியாம்! தேவ தேவன் சேரும் தணிகை மலையாம்! என் முன்வினைத் துயரம் அகல, என் உயிரின் துணையாய் எழுக தணிகைக் காவலனே.

 பாடல் 86

 சூலப் படையான் திருமைந்தா சூரன் குலத்தைச் சுட்டெரித்தோன்

 மாலப் படவே தணிகையினில் வாழும் நாதன் மாமலையாம்

 காலப் பயங்கள் வாராமே காக்கும் வேலோன் காப்பதியாம்

 ஞாலப் புகழ்சேர் தணிகையினை நினையாய் அடியேன் நெஞ்சமே.

உரை:

சூரன் குலம் எரித்த நாதனின் மாமலையாம்! எம பயம் வாராமல் காக்கும் வேலோன் காக்கும் பதியாம்! உலகப் புகழ்பெற்ற தணிகையினை என் நெஞ்சமே நீ அநுதினமும் நினைப்பாயாக.

 பாடல் 87

 குன்றா வாழ்வைக் குலமக்கட்குக் கொடுக்கும் குன்றாத் தணிகையதாம்

 மின்றாழ் சடையான் திருமகன்றன் மிக்க வடிவின் இருப்பிடமாம்

 சென்றா யுன்றன் திருத்தணிகைத் தேடித் தேடி இளைத்துவிட்டேன்

 ஒன்றாய் நின்றாய் எனை ஆளாய் ஓமநற் பிரணவக் குன்றமதே.

உரை:

நல்வாழ்வு தரும் குன்றாத் தணிகையதாம்! சிவன் மகனின் இருப்பிடமாம்! உன்னைத் தேடி இளைத்த என் முன்னே, பிரணவ வடிவமாய் நின்று என்னை ஆட்கொள்ளும் பிரணவக் குன்று அதுவே.

 பாடல் 88

 பிறவிப் பெருநோய் வாராமே காக்கும் மருந்தாம் திருத்தணியாம்

 துறவிப் பெரியோர் துதிக்கின்ற துரையார் வாழும் தூயமலை

 அறவிப் பொருளாய் நின்ற உன்றன் அடித்தா மரையை மறவாதே

 மறவிக் கடலில் வீழாதே மதியாய் எனையாள் மாமலையே.

உரை:

பிறவி நோய் காக்கும் மருந்தாம் திருத்தணியாம்! துறவிகள் துதிக்கும் தூய மலையாம்! உனது திருவடிகளை மறவாமல் நான் வாழ அருள் செய்யும் மகா மலையே அது.

 பாடல் 89

 தாரார் மார்பா தணிகையினில் தங்கும் தவத்தின் தனிவடிவாம்

 ஏரார் முத்தைத் தருபவனே எந்தாய் வாழும் எழில்பதியாம்

 நீரார் சடையான் பெற்றெடுத்த நிமலா உன்றன் திருத்தணிகை

 ஆராய்ந் தேத்தி வாழாதே அடியேன் அழிந்து போவேனோ.

உரை:

தவத்தின் தனிவடிவாம் திருத்தணி! எந்தை வாழும் எழில்பதியாம்! உனது திருத்தணிகையைப் போற்றித் துதிக்காமல் நான் அழிந்து போகலாமா? என் மேல் இரங்குவாய்.

 பாடல் 90 (திருக் கடைக்காப்பு)

 திண்ணார் தணிகைத் திருத்தலத்தைச் சீரார் பதிகத் தமிழ்களால்

 மண்ணார் உலகிற் பெரியசாமி மனத்தால் உருகிப் பாடியசொல்

 பண்ணார் விதியால் கற்றவர்கள் பாவ வினைகள் பறந்தோடும்

 விண்ணார் உலகும் அவர்தமக்காய் விரும்பி வழியைத் திறந்திடுமே.

உரை:

திருத்தணித் திருத்தலத்தைப் பதிகங்களாக, பக்தி நெஞ்சோடு பெரியசாமி ஆகிய நான் பாடிய இந்த நற்சொற்களைக் கற்பவர்கள், இப்பூமியில் பேரின்பம் பெற்று, இறுதியில் விண்ணுலகும் நற்கதியும் பெற்று வாழ்வர்.

 பத்தாம் பத்து: திருக்கடைக்காப்புப் பத்து (நிறைவுப் பத்து)

 பாடல் 91

 நலமார் தணிகைக் குமரன்றனை நாளும் நாவில் ஏத்துமினோ

 குலமார் வினைகள் தீர்த்திடுவான் குமரன் கையில் வேலுடையான்

 பலமார் தமிழில் பதிகமதாய்ப் பாடி நின்ற அடியவர்க்குச்

 சலமார் நரகப் பயமில்லை சாற்றினன் காண் பெரியசாமி.

உரை:

நலங்கள் யாவும் தரும் திருத்தணி குமரனை நாள்தோறும் உங்கள் நாவில் ஏற்றித் துதியுங்கள் மாந்தர்களே! அவன் உங்கள் குலத்தையே பின்தொடரும் பாவ வினைகளைத் தீர்த்திடுவான், கையில் சக்தி வேலுடையவன் அவன். வலிமைமிக்க நற்றமிழில் பதிக வடிவாகப் பாடித் துதிக்கும் அடியார்களுக்கு, துன்பம் தரும் நரக பயம் எக்காலத்திலும் இல்லை என்று உறுதியாகச் சாற்றுகின்றான் இந்த பெரியசாமி.

 பாடல் 92

 மாலோன் மருகன் தணிகையினில் வாழும் நாதன் மலரடியைக்

 காலோன் பாசம் வாராமே காக்கும் கழலைத் தொழுமினோ

 நாலோ வேதப் பொருளறியா நம்பன் மகன்றன் நற்பொற்பைக்

 கோலோக் தமிழாற் பாடினான் குணமார் போற்றும் பெரியசாமி.

உரை:

திருமால் மருகன், தணிகையில் வாழும் நாதனின் மலரடிகளைத் தொழுங்கள்! எம பாசம் வராதவாறு காக்கும் கழலடி அது! சிவன் மகனின் நற்பொற்பைப் பதிகத் தமிழால் பாடினான், நற்குணங்கள் உடையோரால் போற்றப்படும் பெரியசாமி.

 பாடல் 93

 வள்ளி மணாளன் சோலைசூழ் வண்டார் தணிகைக் காவலனைத்

 தெள்ளி அமுதை நல்கிடுமச் செவ்வேள் பாதச் சிலம்பொலியை

 உள்ளி உருகி அநுதினமும் ஓதும் அடியார் உய்யவே

 பள்ளித் தமிழாற் பாடினான் பாரில் வாழும் பெரியசாமி.

உரை:

வள்ளி மணாளனாம் தணிகைக் காவலனை, அருளமுது தரும் செவ்வேளின் பாதச் சிலம்பொலியை, மனதால் நினைந்து உருகி ஓதும் அடியார்கள் உய்யும் பொருட்டு, தூய பக்தித் தமிழால் பாடினான் இப்பாரில் வாழும் பெரியசாமி.

 பாடல் 94

 சூரன் கிரௌஞ்சம் தவிடுபொடி யாகத் தோன்றிப் பறந்தமயில்

 சீரார் தணிகைக் குன்றமர்ந்த செவ்வேள் ஏறும் வாகனத்தைச்

 சாரா வினைகள் தீரவொரு பதிக மாலச் சாற்றினான்

 பாரார் போற்றும் பெருமையுடைய பண்பின் மிக்க பெரியசாமி.

உரை:

சூரன் மாளப் பறந்த மயில் வாகனம் ஏறும் செவ்வேளை, பாவ வினைகள் தீரும்பொருட்டுப் பதிக மாலையாகச் சாற்றினான், உலகத்தாரால் போற்றப்படும் பெருமையுடைய பண்பாளன் பெரியசாமி.

பாடல் 95

 வேதப் பொருளை விடையோற்குக் மேலாய் உரைத்தோன் திருவேலை

 காதார்த் தணிகைக் குன்றமர்ந்த கந்தன் ஏந்தும் கதிர்வேலை

 பாதச் சிலம்பின் ஒலியோடு பரமன் காக்கும் பான்மையை

 நாதத் தமிழாற் பாடினான் நன்மை சேரும் பெரியசாமி.

உரை:

சிவனுக்குப் பிரணவம் உரைத்தோனின் திருவேலை, தணிகைக் கந்தன் ஏந்தும் கதிர்வேலின் பெருமையை, நாதத் தமிழால் பதிகமாகப் பாடித் துதித்தான், நன்மைகள் யாவும் சேர விளங்கும் பெரியசாமி.

 பாடல் 96

 பொன்னார் மேனிப் புண்ணியன்றன் புதல்வன் வாழும் பொற்பதியைத்

 தென்னார் தணிகைப் பொய்கைசூழ் தேவ தேவன் சேர்மலையை

 முன்னார் வினையின் பயனாக மூண்ட துயரம் முழுதகல

 எந்நா டறியப் பாடினான் எழிலார் பதிகம் பெரியசாமி.

உரை:

சிவன் புதல்வன் வாழும் பொற்பதியை, தணிகை மலையின் சிறப்பை, முன்வினைத் துயரங்கள் யாவும் முற்றிலும் அகலும்படி, உலகத்தார் யாவரும் அறிய எழிலார் பதிகமாகப் பாடினான் பெரியசாமி.

 பாடல் 97

 சூலப் படையான் திருமைந்தா சூரன் குலத்தைச் சுட்டெரித்தோன்

 மாலப் படவே தணிகையினில் வாழும் நாதன் மாமலையைத்

 காலப் பயங்கள் வாராமே காக்கும் வேலோன் காப்பதியைப்

 பாலொத் தமிழாற் பாடினான் பக்தி மிக்க பெரியசாமி.

உரை:

சூரன் குலம் எரித்த நாதனின் மாமலையை, எம பயம் வாராமல் காக்கும் வேலோன் காப்பதியைப் பால் போன்ற நற்றமிழால் பாடித் துதித்தான், பக்தி நெறியில் மிக்க பெரியசாமி.

 பாடல் 98

 குன்றா வாழ்வைக் குலமக்கட்குக் கொடுக்கும் குன்றாத் தணிகையினை

 மின்றாழ் சடையான் திருமகன்றன் மிக்க வடிவின் இருப்பிடத்தைக்

 கன்றா நின்ற கயமதனைப் பிளந்தான் மருகன் கழலிணையைப்

 பின்றா வண்ணம் பாடினான் பெருமை சேரும் பெரியசாமி.

 உரை:

நல்வாழ்வு தரும் தணிகையினை, சிவன் மகனின் இருப்பிடத்தை, திருமால் மருகனின் கழலிணையை, பின்வாங்காத பக்தித் திறத்தோடு பாடினான், பெருமை சேரும் பெரியசாமி.

 பாடல் 99

 பிறவிப் பெருநோய் வாராமே காக்கும் மருந்தாம் திருத்தணிகை

 துறவிப் பெரியோர் துதிக்கின்ற துரையார் வாழும் தூயமலை

 அறவிப் பொருளாய் நின்ற உன்றன் அடித்தா மரையைப் பாடியே

 மறவிக் கடலில் வீழாதே மாண்பாய்ப் பாடினன் பெரியசாமி.

உரை:

பிறவி நோய் காக்கும் மருந்தாம் திருத்தணிகையை, துறவிகள் துதிக்கும் தூய மலையை, நாதனின் திருவடித்தாமரைகளைப் பாடி, உலக மாயை என்னும் மறவிக் கடலில் வீழாமல் மாண்போடு பாடித் துதித்தான் பெரியசாமி.

 பாடல் 100 (திருக் கடைக்காப்பு - பதிக நிறைவு)

 சீரார் தணிகைக் குமரன்றனைச் செழுநற் றமிழின் பதிகமதாய்

 பாரார் போற்றும் பெரியசாமி பாடிப் பரவிய நூறுசொல்

 ஆராய்ந் தேத்திக் கற்பவர்கள் அல்லல் பிணிகள் அகன்றோடும்

 பேரார் சிவன்றன் உலகினில்பே ரின்ப மாக வாழ்வாரே.

உரை:

மகா பதிக நிறைவுப் பாடல்! சிறப்புகள் நிறைந்த திருத்தணி மலையில் வீற்றிருக்கும் குமரப் பெருமானை, செழுமையான நற்றமிழ்ப் பதிகங்களாக, உலகத்தாரால் மதிக்கப்படும் பெரியசாமி ஆகிய நான் பாடிப் பரவிய இந்த நூறு திருப்பாடல்களை (நூறு சொல்), அதன்  பொருளை உணர்ந்து, ஆராய்ந்து துதித்துக் கற்பவர்களுடைய உலகத் துன்பங்களும், பிறவிப் பிணிகளும், கர்ம வினைகளும் அவர்களை விட்டு முற்றிலும் அகன்றோடும். அவர்கள் பெருமைமிக்க சிவபெருமானின் சிவலோகத்தை (பேரார் சிவன் உலகம்) அடைந்து, அங்கே எக்காலமும் அழியாத பேரின்பப் பெருவாழ்வு வாழ்வார்கள் என்பது திண்ணம்.

திருத்தணி முருகப் பெருமானின் திருவருள் துணை நிற்கட்டும்!


கருத்துகள் இல்லை: